தமிழில் எண்பது, தொண்ணூறுகளில் மொழியை ஒரு துப்பாக்கி போல மட்டுமே இலக்கியவாதிகள் பயன்படுத்தினார்கள். எடுத்தால் போட்டுத் தள்ள வேண்டும். குறி தவறக் கூடாது. இந்த கச்சிதமே எழுத்தின் இலக்கு எனும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தர ராமசாமி. அவருக்கு நேர் எதிர் சாரியில் வண்ணதாசன் இருந்தார். (தொண்ணூறுகளுக்குப் பிறகு உச்சம்
பெற்ற படைப்பாளிகளில் ஜெ.மோ, கோணங்கி, எஸ்.ரா என யாருமே துல்லியத்தை முக்கியமாய் நினைக்கவில்லை. அவர்கள் சொற்களை அள்ளி இறைத்தார்கள்.)
இன்று சு.ராவை வண்ணதாசனுடன் ஒப்பிடுகையில் வண்ணதாசனின் நீர்மை (fluidity), மனத்தின் கலங்கலான குழப்படியான நிலையற்ற தன்மையை பிரதிபலிப்பதாய் மொழியை பயன்படுத்துவது ஆகிய சிறப்புகள் சு.ராவிடம் இல்லை என்பதை அவதானிக்க முடிகிறது. (இதையே ஜெ.மோ வேறுவிதமாய்
சொன்னார். தனது “சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்” நூலில் அவர் சு.ரா தன் மொழியில்
காட்டும் கரார்த்தனத்தை அவரது முக்கிய குறையாக குறிப்பிட்டு விமர்சித்தார்; சு.ரா மொழியை அறிவார்த்தமாய் கட்டுக்குள் வைக்கிறார் என்றார்.)
நான் எழுத துவங்கிய போது கலை இலக்கிய பெருமன்றத்தில் என் சீனியர்கள் என் கவிதை, கட்டுரைகளில் தேவையற்ற சொற்களை செதுக்கித் தள்ளி திருத்தித் தருவார்கள். மெல்ல மெல்ல பிசிறின்றி நேர்கோட்டில் (ரேம்ப்வாக் செய்யும் மாடல் போல) எழுத நான் கற்றுக் கொண்டேன். மொழியை அப்படி தத்தித்தோம் என சுவடு வைத்து எழுத வேண்டியதில்லை என எனக்கு முதலில் சொன்னவர் ஜெ.மோ. அவரது “நவீனத்துவத்திற்குப் பின் கவிதை: தேவதேவனை முன்வைத்து” எனும் மிக முக்கியமான நூலில் அவர் ஒரு பகுதியில் தேவதேவனின் கவிதை வரிகள் சிலவற்றை குறிப்பிட்டு அவற்றில் உள்ள தாளலயத்தை சிலாகித்து கவிதையில் இசை ஒழுங்கும் முக்கியமே என்றார். எனக்கு அதைப் படிக்க அதிர்ச்சியாய் இருந்தது. ஜெ.மோ சொல்வதன் நுணுக்கமான பொருளை உணர எனக்கு நீண்ட காலம் பிடித்தது.
இன்று பின்நவீனத்துவம் இந்த கருத்துக்களை எல்லாம் நமக்கு எளிதாக்கி விட்டது. ஈ.ஈ கம்மிங்ஸ் Grasshopper என்ற தன் கவிதை ஒன்றில் சொற்களை ஓவியமாய் பயன்படுத்துகிறார். இக்கவிதையில் வெட்டுக்கிளி ஒன்றின் பாய்ச்சல்கள், அது நின்று நகரும் பாணி பற்றி கம்மிங்ஸ் சித்தரிப்பார். நாம் இப்படியான
சித்திரத்தை துல்லியமாய் வழங்க விவரணைகள் மற்றும் ஒப்பீடுகளை பயன்படுத்துவோம். ஆனால் கம்மிங்ஸோ சொற்களை விதவிதமாய் அடுக்கி வெட்டுக்கிளியின் அசைவுகளை ஓவியம் போல காட்சிப்படுத்துவார். சொற்களை பொருள்
உணர்த்துவதற்காக அன்றி ஒரு காட்சியை சித்தரிப்பதற்கான ஓவியக் கோடுகள் போல் பயன்படுத்துகிறார்
கம்மிங்ஸ். வழக்கமான கவிதைகளில்
சொற்களை பொருளுணர்த்தும் நோக்கில் கவிஞர்கள் பயன்படுத்துவதன் வியர்த்தத்தை இதன் மூலம்
மறைமுகமாய் விமர்சிக்கிறார் அவர். பெங்களூரில் நான் வேலை பார்த்து வரும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் இணைந்து நான் சமீபத்தில் வெளியிட்ட லக்கான் பற்றின நூலில் ஒரு மாணவி (க்ரித்வி) இதைப் பற்றி விரிவாக என விவாதிக்கிறார்.
தமிழ் உரைநடையில் இந்த பாணியை ஓரளவு மௌனியும், நகுலனும் நிச்சயம் பயன்படுத்தினார்கள். மௌனி தொனியை வாசகனுக்கு உணர வைக்கவென்றே சொற்களை நூதனமாய் பயன்படுத்தினார்; வாக்கியங்களின் வடிவத்தையும் இந்நோக்கில் லாவகமாய் (பாபா ராம்தேவ் யோகா செய்வது போல) மடித்து பிரித்து வளைத்து உருவாக்கிக் காட்டினார். (நாம் இக்கட்டுரையில் மௌனியின் இந்த ஸ்டைலை மனுஷ்யபுத்திரன் எப்படி கவிதையில் கொண்டு வருகிறார் எனப் பார்க்கப் போகிறோம்.) நகுலன் ஈ.ஈ கம்மிங்ஸ் பாணியில் கவிதையின் வாக்கிய அடுக்கை ஒரு ஓவியம் போல, கவிதையின் மையக் கருத்தை சித்தரிக்க பயன்படுத்தினார்.
சரி இந்த பாணி கவிதையில் உண்டா?
முதலில் எனக்கு தோன்றும் பெயர் பாரதி. அவரை சொல்லுணர்த்தும் பொருளில் மட்டும் நிச்சயம் படிக்க முடியாது. அதன் பிறகு ஜெ.மோ குறிப்பிடுவது போல தேவதேவன்.
ஆனால் நமது பெரும்பாலான ஆண் கவிஞர்கள் மொழியை அறுவை சிகிச்சை கத்தி போலத் தான் இன்றும் பயன்படுத்துகிறார்கள். எங்கே எதேனும் பிசகி விடுமோ எனும் அச்சம் அவர்களை அவர்களை விடாது துரத்துகிறது. ஆனால் இந்த சிக்கல் இன்றி மிக இயல்பாக மனத்தின் உணர்ச்சிநிலை தளும்பல்களை – அவை முரண்பட்டு, அர்த்தச் செறிவின்றி போனாலும் கூட – சொற்கள் மூலம் வடித்தவர்கள் நமது நவீன பெண் கவிஞர்களே (குட்டிரேவதி, லீனா மணிமேகலை, சுகிர்தராணி, மாலதி மைத்ரி).
Comments