நாட்டார் வழக்காறு, தொன்மங்கள், மாந்திரிகக் குறிப்புகள், தலித் அழகியல், அதன் அரசியல் கூர்மை, இசையொழுங்கு, மலையாளச் சுவை கொண்ட குமரி மாவட்ட தமிழ், ஒற்றைத் தன்னிலையில் நிற்காமல் பலவாறாக உடைந்து பேசும் பிளவுண்ட நகுலன் மனநிலை, புக்காவஸ்கியிடம் காணும் அந்த நசிக்கப்படும் ஆணின் அவலத்தை பேசும் உருவகங்கள் என ஒரு காட்டாற்றைப் போன்ற கவியுலகம் என்.டி ராஜ்குமார் அண்ணனுடையது. அவர் என் மதிப்பீட்டின் படி குமரி மண்ணின் தலைசிறந்த கவிஞர். ஏனென்றால் வேறு யாரையும் நினைவுபடுத்தாத ஒரு தனித்துவம் அவருக்கு, அவருடைய மொழிக்கு உள்ளது.
அதே நேரம் தன்னுடைய ஆற்றலுக்கு முழுமையான நியாயம் செய்யாதவர் என்றும் அவரை சொல்ல வேண்டும். நிரந்தர வருமானம், குடும்ப ஆதரவு, மக்களை அனுசரித்துப் போகும் பண்பு ஆகியவை என்.டி அண்ணனிடம் இல்லை. இது அவர் முழுமூச்சாக கவிதையில் ஈடுபட முடியாதபடி, போதுமான பொருளாதார ஸ்திரத்தன்மை, ஊடகத் தொடர்புகள் கிடைக்காமல் பண்ணி விட்டது. என்.டி அபாரமான பாடகரும் கூட. “மதுபானக் கடை” படத்தில் அவருக்கு என ஒரு நல்ல உடல்மொழி இருப்பதையும் கவனித்தேன். வெகுஜன ஊடகங்களில் ஒரு நல்ல சுற்று வருவார் என கணித்தேன். ஆனால் சொந்த ஊர் மண்ணை விட்டு அவரால் சென்னையில் இருக்க முடியாததால் அது நிகழவில்லை.
அவரளவுக்கு இயற்கையான திறன் படைத்த கவிஞர்களை நான் தமிழில் மிக சொற்பமாகவே கண்டிருக்கிறேன். தேவைக்கு அதிகமான திறமையையும், தேவைக்குக் குறைவான ஏழ்மையையும் கடவுள் அவருக்கு அள்ளிக் கொடுத்து விட்டார்.
என்.டி அண்ணனிடம் பத்து நிமிடம் பேசினாலே அவ்வளவு படைப்பூக்கம் கிடைக்கும் - ஏனென்றால் பொல்லாப்பு, பொச்சரிப்பு அவரிடம் இல்லை. யாருடனும் தன்னை ஒப்பிடுவது, “என்னை இலக்கிய உலகத்தில் புறக்கணிக்கிறார்கள்” எனும் அங்கலாய்ப்பது இல்லை. எப்போதும் தன் கற்பனையில், உணர்வெழுச்சியில் உச்சத்தில் இருப்பவர் அவர். தானாக, தனக்குள், மூழ்கி இருப்பதே அவருக்கு மிகுந்த திருப்தி அளிக்கும். அதே போல பொய் சொல்லவும் வராது. மனதில் இருப்பது தடையின்றி அருவியாகக் கொட்டும். அப்புறம், தமிழ் எழுத்தாளர்களிலே அவ்வளவு கம்பீரமான, அருமையான குரல் யாருக்குண்டு? போனில் அவர் குரல் கேட்டாலே என் மனம் குளிர்ந்து விடும்.
என்.டி ராஜ்குமாருக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு என் அன்பும் முத்தங்களும்!

கருத்துகள்