1) இந்த போட்டி கிட்டத்தட்ட அரை இறுதிப் போட்டியைப் போல. இதில் இந்தியா தோற்றால் இறுதிப்போட்டிக்குப் போகாது. அனேகமாக பாகிஸ்தான் இலங்கையுடன் மோதும். எனில் பாகிஸ்தானுக்கே கோப்பையை அடிக்க வாய்ப்பதிகம். அதாவது இந்த போட்டியின் முடிவை பாகிஸ்தான் ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருக்கும்.
2) ஏன் இந்த போட்டியில் இந்தியா வெல்ல வாய்ப்பு குறைவு?
3) டாஸை இந்தியா இழந்து விட்டது. இந்தியா முதலாவதாக மட்டையாட வைத்துள்ளது இலங்கை. துபாயில் இந்த ஆடுதளத்தில் இரண்டாவதாக மட்டையாடும் அணிகளே அதிகமாக வென்றிருக்கிறார்கள்.
4) இந்த ஆடுதளத்தில் முதலில் மட்டையாடும் போது பந்து மெதுவாகவும் இரண்டாவதாக ஆடும் போது சற்று சுலபமாகவும் உள்ளது. ஆகையால் இலங்கைக்கு அனுகூலம் இன்று அதிகம்.
5) இந்திய அணி சற்று பதற்றமாக உள்ளதை முதல் பந்தில் இருந்தே காண்கிறோம். இலங்கை சாதாரணமாகத் தான் வீசுகிறது. ஆனால் இந்திய துவக்க மட்டையாளர்கள் முந்தின போட்டியைப் போல ஜாலியாக அடித்தாடவில்லை. நாம் அடித்தால் தான் உண்டு, மத்திய வரிசை சொதப்பி விடுவார்கள் எனும் அச்சம். அதனால் ஒரு தயக்கம். இது தான் அவர்களுடைய சரளத்தை பாதிக்கிறது. நான் இதை எழுதும் போதும் இந்தியா மூன்றாவது ஓவரில் இரு விக்கெட்டுகளை இழந்து விட்டது.
6) இலங்கைக்கு எந்த அழுத்தமும் இல்லை. இது போன்ற சூழல்களில் இலங்கை நன்றாகவே ஆடும்.
7) இலங்கை இரண்டாவது மட்டையாடும் போது பட்டாசாக ஆடும். 90களில் இருந்தே இது தான் நிலை.
8) ஜடேஜா காயமானதில் இருந்தே ரோஹித் ஷர்மா அணித்தேர்வு விசயத்தில் குழம்பி விட்டார். ஜடேஜா இடத்தில் ஒரு இடதுகை மட்டையாளரைக் கொண்டு வருவதா? பவுலரைக் கொண்டு வருவதா மட்டையாளரையா? இந்த அணித்தேர்வு தத்தளிப்பினால் தான் அவர் போன ஆட்டத்தில் நல்ல ஆட்டநிலையில் உள்ள கார்த்திக்கை எடுத்துவிட்டு பண்டை கொண்டு வந்தார். மூன்றாவது வேகவீச்சாளரைக் கொண்டு வராமல் ஹூடா எனும் மட்டையாட்ட ஆல்ரவுண்டரைக் கொண்டு வந்தார். இரண்டுமே முழுமையான தன்னம்பிக்கையுடன் கொண்டு வந்த மாற்றங்கள் அல்ல. பண்ட் இன்னும் டி20யில் பெரிதாக ரன் அடிக்கவில்லை. ஆட்டவரிசையில் ஒரு துவக்க வீரராக அவர் பட்டையை கிளப்ப முடியும். ஆனால் ராகுலுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமே. உத்தப்பா ஒரு சேனலில் சொல்லியுள்ளதைப் போல 5வது எண்ணில் பண்டால் சரியாக சோபிக்க முடியவில்லை. ஹூடாவின் பந்து வீச்சிலும் ரோஹித்துக்கு நம்பிக்கை இல்லை என்பதால் பாகிஸ்தானுக்கு எதிராக அவருக்கு பந்து வீச வாய்ப்பே கொடுக்கவில்லை. இந்த பந்து வீச்சு பலவீனம், தவறான மட்டையாட்ட தேர்வு கடந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோற்க காரணமானது. இந்த தேர்வுக் குழப்படிகள் இலங்கைக்கு எதிரான போட்டியிலும் தொடர்கின்றன. இது இந்தியாவுக்கு பாதகமாகும்.
ஆசியக் கோப்பை, உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் ஒரு அணி வாழ்வா சாவா போட்டிகளில் நன்றாக ஆடுவதே, நெருக்கடி நிலையில் துணிச்சலாக ஆடுவதே முக்கியம். அப்படி ஆட முடிகிற அணிகளே இறுதிப்போட்டியை அடையும். கோலியின் தலைமையே இந்த chockingக்கு காரணம் என நினைத்தேன். ஆனால் ரோஹித்தின் தலைமையிலும் - ஜடேஜாவின் காயம் காரணமாக அணியின் சமநிலைக் குலைந்ததும் - இந்திய அணி choke ஆவதைப் பார்க்கிறோம். இது இலங்கைக்கு சாதகமாகும்.
இந்த ஆசியக் கோப்பையிலும் அது நடக்குமா? எனில் வரப்போகும் டி20 உலகக்கோப்பைத் தொடரிலும் அது நடக்கப் போகிறது என நாம் உறுதியாக கணிக்கலாம். அதைத் தவிர்க்க அணித்தலைமை மாறினால் மட்டும் போதாது சீனியர்களை மொத்தமாக ஒழித்து விட்டு முழுக்க இளைஞர்களால் ஆன ஒரு அணியை உருவாக்குவதே தீர்வாகும். ஒருவேளை choking பிரச்சனையை கடந்து விட்டோம் எனில் இலங்கைக்கு எதிராக வெல்லுவோம். ஆகையால் இந்த போட்டியில் முடிவு வரப்போகும் உலகக்கோப்பையில் இந்தியாவின் நிலையையும் காட்டி விடும்.
9) இப்படி டாஸ், மெதுவான ஆட்டச் சூழல், இந்தியாவின் choking, இரண்டாவது மட்டையாடும் பாங்கு, ஐந்தே பந்து வீச்சாளர்களுடன் இந்தியா செல்வதாலான அபாயம் ஆகியவை இலங்கைக்கே சாதகமாக உள்ளதால் இலங்கையினர் மோசமாக ஆடினால் ஒழிய இந்த ஆட்டத்தொடரில் இருந்து இந்தியா வெளியேறுவதே நடக்கப் போகிறது.
10) இருந்தாலும் ஒரு ஆட்டத்தில் என்ன வேண்டுமெனிலும் நடக்கலாம். ரோஹித் / சூர்யா என யாராவது ஒரு பெரிய ஸ்கோர் அடிப்பார்களா? இந்தியா 150-155 அடிக்குமா? அல்லது 170ஐ எட்டுமா? இலங்கை இரண்டாவதாக ஆடும் போது ஆடுதளம் வேகமாகுமா அல்லது இன்னும் மெதுவாகி சுழலுமா? மட்டையாடுவது சிரமமாகுமா? எனில் அஷ்வினும் சஹலும் விக்கெட் எடுப்பார்களா? இறுதி இரு ஓவர்களில் 30-35 ரன்களுக்கு மேல் அடித்து இலங்கைக்கு பந்து வீசும் போது சில விக்கெட்டுகளை வீழ்த்துவோமா? அல்லது இலங்கை 18 ஓவர்களுக்குள் சுலபமாக இலக்கை அடித்து விடுமா?

Comments