முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

களங்கமின்மையை தொலைப்பது



நேற்று ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கையில்கடந்த சில ஆண்டுகளில் நான் பெற்ற அனுபவங்கள் என்னிடம் இருந்து கள்ளங்கபமற்ற மனநிலையை பறித்து விட்டன, அதையே ஒருவித இழப்பாகவும் பயனாகவும் காண்கிறேன்என்று சொன்னேன். இழப்பென்று சொல்லக் காரணம் கள்ளமற்ற பார்வை வாழ்வை மகிழ்ச்சியாக வாழ அவசியம். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க அது உதவும். ஆனால் அதுவே ஒரு பெரிய வீழ்ச்சியை நோக்கி நம்மை இட்டுச் செல்லவும் கூடும். அதுவே ஒரு பிழையான வாழ்க்கை நோக்கை கொண்டிருக்கவும் வைக்கும். ஆக, அதை இழந்து சற்று விவேகமாவது நல்லது. அது ஒரு நிலைத்த மகிழ்ச்சியை தரும்.


ஒரு எழுத்தாளனாகவும் சிந்தனையாளனாகும் என்னை இது வேறுவிதங்களில் பாதித்தது. மனிதர்களுக்கு என்று தனித்த இயல்புகள் உண்டு, அவர்களுடைய தொடர்ச்சியான செயல்பாடுகள், நடவடிக்கைகளை வைத்து அவ்வியல்புகளை கணிக்க முடியும் என என நீண்ட காலமாக நம்பி வந்தேன். இதை ஒருவித உளவியல் சாராம்சவாதம் என்று கூறலாம். ஆனால் இது உண்மையல்ல, மனிதர்களுக்கு என்று எந்த இயல்பும் இல்லை, ஒவ்வொரு சந்தர்பத்திலும் தமக்கு தேவையான படி நடந்து கொள்வார்கள், நம்முடன் நீண்ட காலமாக இருந்தவர்கள் கூட நாம் எதிர்பாராதபடி நடந்து கொள்வார்கள் என்று கண்டுகொண்டேன். சரி ஒருவர், இருவர் என்றால் பரவாயில்லை. நான் பின்னர் சற்று உற்று நோக்கிய போது இதுவே மனிதன் அடிப்படையான குணம், இத்தனை ஆண்டுகளாக நான் தான் அவர்களை சரியாகபார்க்கவில்லைஎனப் புரிந்து கொண்டேன் - மனிதன் ஒரு வெற்று கண்ணாடிக் கோப்பை, அதில் எதை ஊற்றுகிறோமோ அதன் நிறத்தை பெற்றுக் கொள்வான்

சிலர் இந்த எளிய உண்மை உங்களுக்கு இப்போது தான் தெரியுமா எனக் கேட்பீர்கள். ஆம், நான் இயல்பிலேயே ஒரு அடிமுட்டாள். சிலர் இருபது வயதில் அறிந்து கொள்வதை நான் புரிந்து கொள்ள நாற்பது வருடங்களை எடுத்துக் கொள்வேன். ஆனால் நான் இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் இலக்கியத்தை, உளவியலை, தத்துவத்தை நோக்கிய போது அவற்றில் மேற்சொன்ன சாராம்சவாதம் பெருமளவில் தாக்கம் செலுத்துவதைக் கண்டேன்.


உளவியலில் உயிரியல், மானுடவியல் என இரு பிரிவுகள் உண்டு. உயிரியல் உளவியல் மனித செயல்களை மனிதர்களின் நடவடிக்கைகள், நரம்பணு பாதைகளின் வழி வரையறுக்கவும் சாராம்சப்படுத்தவும், அதன் அடிப்படையில் உளநோய்களின் அறிகுறிகளை அடையாளப்படுத்தி சிகிச்சையை, மருந்துகளை பரிந்துரைக்க சொல்கிறது. மானுடவியல் உளவியலோ மனிதனின் இயல்பு மேலும் சிக்கலானது, பல்வேறு சந்தர்பங்கள், சூழல்களால் ஆளப்படுவது, இந்த சூழ்நிலையை மாற்றாமல், அதற்கு இவர்கள் எதிர்வினையாற்றுவதை ஆலோசனைகள் மூலம் மாற்றாமல் நோய்க்கூறுகளை குறைக்க முடியாது எனக் கூறுகிறது. தத்துவத்தை எடுத்துக் கொண்டால் சாராம்சவாத தத்துவத்துக்கு சாக்ரடீஸ் முதல் அமைப்பியல்வாதம், காண்ட், டெகார்ட், ஹெகல் வரை நீண்ட மரபு உண்டு. இது மனித இயல்பை சாராம்சப்படுத்த முயல்கிறது. இதற்கு நேரெதிராக நீட்சே, ஹைடெக்கர் என ஒரு பின்னமைப்பியல் தத்துவ மரபு இருக்கிறது. தமிழ் இலக்கியம், அரசியல் சித்தாந்தங்கள் வரை ஆதிக்கம் செலுத்துவது மனித இயல்பு குறித்த கற்பனாவாதம், மிகை எண்ணங்கள், மனிதநேய சிந்தனைகளும், ஒழுக்கவாதமுமே. தொடர்ந்து மனிதனின் நல்லியல்புகளை வலியுறுத்தும், நடப்புவாழ்வுக்கு சற்றும் தொடர்பில்லாத சிந்தனைகளையே நமது கணிசமான நவீன, பின்நவீன இலக்கியங்களில் பார்க்கிறோம். இந்த கடைசி விசயமே என்னை வெகுவாக அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


 மானுடவாத சிந்தனையானது, லட்சியவாதமானது, கருத்துமுதல்வாதமானது அண்மைக்காலத்தில் - என் களங்கமின்மையை இழந்த பிறகு - என்னை மிக அதிகமாக எரிச்சலூட்டியது. நான் இங்கே எழுத்தாளர்களை பட்டியலிட விரும்பவில்லை, ஆனால் நான் முன்பு வெகுவாக ரசித்து கொண்டாடிய படைப்புகள் - கணிசமான கதைகளும் கவிதைகள் - என்னை அதிகமாக இப்போது எரிச்சலூட்டியது. இப்படைப்புகள் பெரும் பொய்களின் மீது நிற்கின்றன எனத் தோன்றியது. தமிழ் எழுத்தாளர்கள் - மிக மிக நவீனமாக நாம் கருதியவர்கள், கருதுபவர்கள் - இவ்வளவு ரொமாண்டிக்கானவர்களா என்று நான் வியந்தேன். நீண்ட காலமாக கட்டிவைத்திருந்த என் கண்களை யாரோ அவிழ்த்து விட்டதைப் போல் உணர்ந்தேன்.


 இந்த நவீன தமிழ் இலக்கியங்கள் தரும் தரிசனம் உண்மையல்ல என்று நான் என் வாழ்வனுபவங்கள் வழியாகவும், வாசிப்பின் வழியாகவும் கண்டுகொண்டேன். கண்டுகொண்ட அடுத்த நொடியே நான் கைவிடப்பட்டவனானேன். என் ஒட்டுமொத்த இலக்கிய மரபில் நான் அடையாளம் காண வெகுசில படைப்பாளிகளே மீதமிருந்தார்கள். எனக்கு எங்கு போவது, யாரைப் பற்றிக்கொண்டு நிற்பது என சற்று காலத்திற்கு புரியவில்லை.


இதையே களங்கமின்மையை இழப்பதன் துயரம் என்று கூறினேன். இது பிராயிட் சொல்வதைப் போல ஒரு மகன் தன் தாய் தந்தையர் உறவு கொள்வதை தன்செயலாக கண்டு அதிர்ச்சி கொள்வதற்கு சமானமானது. அவன் தன் கபடமற்ற பார்வையை அத்துடன் இழந்து தனியாகிறான். அவன் தன் தந்தையை அதற்கு மேல் நிபந்தனையற்று நேசிக்க முடியாது. அவன் தன் தாயிடத்து கொண்டிருந்தது தூய பாசம் என பாவனை கொள்ள முடியாது. இந்த உலகம் இச்சையால் நடத்தப்படுவது மட்டுமே என அறிந்து கொள்வது கொடூரமானது. அதே போல இந்த மானுடம் இருட்டில் நடத்தப்படும் குருடரைப் போன்றது என உணர்வதும். அது முன்னதை விட கொடூரமானது.


என்னுடைய புகார் இந்த படைப்புகள் நேர்மறையாக மனிதனை, பண்பாட்டை, வரலாற்றை சித்தரிக்கின்றன என்பதல்ல, மாறாக சந்தர்ப்ப சூழலுக்கு மனிதனை ஆளுகை செய்வதில் உள்ள வலிமையை இவை காட்டுவதில்லை என்பதே. மனிதனுக்கு என்று ஒரு சுபாவமே இல்லை எனும் உண்மையை இவை வெளிப்படுத்துவதில்லை என்பதே. மனிதன் தன் சூழலை, சமூகப்பொருளாதார நிர்பந்தங்களை மீறி முடிவெடுப்பவன், முடிவுகளின் படி செயல்படுபவன் என்பதே இப்படைப்புகள் சொல்லும்தரிசனம்’.


அவ்விதத்தில் இந்திய பண்பாட்டின் மிகமுக்கியமான பனுவலான மகாபாரதம் தரும் வாழ்க்கை சித்திரத்துக்கு நேரெதிராகவே நமது நவீன, பின்நவீன மானுடநேய இலக்கியம் இருக்கிறது. பாரதக் கதையில் இன்ன பாத்திரம் இப்படித்தான் நடந்து கொள்ளும், இதுதான் இன்னாரின் இயல்பு எனக் கூற முடியுமா? சத்தியத்தை மீறவே செய்யாத ஒருவர் சட்டென பொய்யின் பாதையின் நடப்பதும், நட்பின் ஆதாரமாக திகழ்பவர் நண்பனுக்கு எதிராக போவதும் என ஏராளமான முரண்களின் தொகுப்பாகவே, மனிதனை எந்த ஒழுக்க வரையறைக்குள்ளும், மானுட நேய கோட்பாட்டுக்குள்ளும் வைக்காததாகவே மகாபாரதம் உள்ளது. நமது கணிசமான வாய்மொழி, நாட்டார் கதைகளும் அவ்வாறாகவே உள்ளன. காலனியாதிக்கத்தின் பிறகு இந்தியாவில் தோன்றிய இலக்கியத்தில் தான் ஒருவித மானுடவாத சாராம்சவாதம், ஒழுக்கவாதம் தோன்றி நிலைப்பெறுகிறது, அதன் தாக்கத்தை நாம் இன்று வரை காண்கிறோம் என்று நினைக்கிறேன். அவ்விதத்தில் முழுக்க இந்தியத்தன்மையே இல்லாதவையாகவேஇந்திய நவீன, பின்நவீன படைப்புகள் உள்ளன. பாரதக் கதையை தழுவி எழுதப்பட்ட படைப்புகளிலும் மேற்சொன்ன சாராம்சவாதம் வந்து விடுகிறது



எனக்கு ஏன் அரிஸ்டாட்டிலை இவ்வளவு பிடிக்கிறது என ஒரு நண்பர் அண்மையில் கேட்டார். நான் வாசித்த மட்டில் பண்டைய தத்துவஞானிகளில் அவர் மட்டுமே மனிதனுக்கு என்று எந்த சாராம்சமான சுபாவமும் இல்லை, அவன் என்ன நினைக்கிறான் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது, அதனாலே மனிதனுக்கு கதைகள் தேவைப்படுகின்றன என்று கூறினார். கதைகளில் நாம் இந்த இயல்புகள் அற்ற வெறுமையான மனிதனுக்கு ஒரு தனித்துவமான இயல்பையும், அவனுடைய பிழைகளையும் பிறழ்வுகளையும் காட்டி பரிசீலிக்கவும் புரிந்து கொண்டு ஆறுதலடையவும் முடியும், அதற்காகவே நாம் கதைகளை நாடுகிறோம் என்று சொன்னார். இக்கதைகள் அடிப்படையில் கற்பனையானவை, இவை ஒருவித மனசிகிச்சை, இவற்றுக்கு வெளியே அத்தனையும் அடர்ந்த இருள் மட்டுமே உள்ளது, கதைகளில் மட்டுமே ஒளி உள்ளது என்று கூறினார். தமிழில் எத்தனை சிந்தனையாளர்கள் இதை ஒப்புக் கொள்வார்கள்? அவர்கள் வாழ்வில் இருப்பதையே தாம் இலக்கியத்தில் எழுதுவதாகவும், வாழ்வு ஒளியாலானது என்றும் கூறுகிறார்கள். அவர்களுடைய மானுடநேய எழுத்து, லட்சியவாத கதைகள், ரொமாண்டிக்கான சித்தரிப்புகள் ஒருவித போதை மருந்து. அவர்களைப் படித்தால் நாம் பத்தாம்பசலிகளாக வாழ்ந்து சாக வேண்டியதுதான்


அதனாலே நான் நவீன இலக்கியங்களை இப்போதெல்லாம் கொண்டாடுவதில்லை. நவீன இலக்கியங்களை வாசிப்பதை விட வாழ்க்கையை நேரடியாக வாசிப்பது, மனிதர்களைப் பற்றி யோசிப்பது மேலானது என நினைக்கிறேன். வாழ்க்கையில் ஒன்றுமே வாசிக்காத சாமான்ய மனிதர்களில் சிலர் நான் மேலே குறிப்பிட்ட இந்த உண்மைகளை மிக எளிமையாகப் புரிந்து கொண்டு வைத்திருப்பதைப் பார்க்கையில் விசித்திரமாக இருக்கிறது. .தா., மனிதம் என ஒன்று சாராம்சமாக இல்லை என்பதை இதே சொற்கோவையுடன் என் அம்மாவால் சொல்ல முடியாது. ஆனால் பள்ளிப்படிப்பை முடிக்காத அவருக்கு இது நன்றாகத் தெரியும் என்பதை அவரது சில முடிவுகளை வைத்து என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனில் வாசிப்பினால் ஆய பயன் என் கொல்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...