டேனியல் கெல்மானின் "இயக்குநர்" நாவலைப் படித்தபோது ஏற்பட்ட முதல் இப்படி ஒரு நாவலை யாராவது தமிழில் எழுதியிருந்தால் என்னவாகி இருக்கும்? ஒன்றும் ஆகியிருக்காது. பெரிய சலனங்கள் எழுந்திருக்காது. ஐரோப்பாவிலும் ஆங்கிலத்திலும் இந்நாவல் பெரிதாக விவாதிக்கவும் பாராட்டவும் படுகிறது. புக்கர் குறும்பட்டியலில் நுழைந்திருக்கிறது. இவ்விதத்தில் ஐரோப்பிய படைப்பாளிகள் அதிர்ஷ்டசாலிகள். இந்தியாவில் பிறந்து இந்திய மொழிகளில் எழுதுவது பிறக்கும் முன்னே இறப்பதற்கு சமானமானது.
அடுத்து இத்தகைய நாவலைத் தமிழில் எழுத வாய்ப்புண்டா எனக் கேட்போம். குறைவே.
பொதுவாக தமிழில் நாம் நிறைய ஆராய்ச்சி செய்து வரலாற்றுத் தகவல்களைச் சேகரித்து நாவல் எழுதுவதில்லை. தமிழில் நவீனத்துவ காலம் முதற்கொண்டே உள்ள இலக்கியப் போக்கு ஒருவரது தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் வரலாற்று நிகழ்வுகளைத் தொகுப்பதுதான். வெகுஜன நாவல்களில் உள்ள போக்கு அரசர்களை தமிழ்தேசிய அடையாளமாக, சாகசக்காரர்களாக, சாதனையாளர்களாகச் சித்தரிப்பது, அவர்களை நம்மூர் தேசியத் தலைவர்களுடன் இணைவைக்கும்படியாக எழுதுவது(நேரு-இந்திரா - "கல்கியின் பொன்னியின் செல்வன்" ). இன்று தேசிய அலை வரலாற்று நாவல்கள் இறந்து போய் தமிழ்தேசிய அலை மட்டும் மீந்திருக்கிறது. இவ்வகைப் படைப்புகளை நான் பிரச்சார வகைமையில் வைப்பேன். புறவயமான நோக்கில் படர்க்கையில் வரலாற்று நாவல் எழுதும் இலக்கியவாதிகள் இங்கு அனேகமாக இல்லை. ஆனால் அத்தகைய அபுனைவு நூல்கள் தொடர்ந்து வருகின்றன. அவையும் வரலாற்றுப் பாத்திரத்தை விதந்தோதும், உணர்ச்சிகரமாக ஈடுபட்டு வாசிக்க வைக்கும் வகையைச் சேர்ந்தவையே. இதற்கு மேலே சொல்லப்பட்ட இரு போக்குகளுக்கு அப்பால் மற்றொரு காரணம் தோன்றுகிறது - நமக்கு நம் வரலாற்று நாயகர்களைப் புறவயமாகவோ விமர்சனபூர்வமாகவோ சித்தரிப்பதில் விவாதிப்பதற்கு ஒரு அச்சமுண்டு, தயக்கமுண்டு. யாராவது கடிக்க வருவார்கள். ஏனென்றால் எல்லாரையும் நாம் ஒன்று ரசிக மனநிலையிலோ அரசியல் பார்வையிலோ சமூக, மதப் பிரதிநிதியாகவோ மட்டுமே பார்க்கிறோம், தனிமனிதராக அல்ல.
ஒரு உதாரணம் சொல்கிறேன்: இந்திரா காந்தியை / ராஜீவ் காந்தியைப் பற்றி எந்தச் சாயவோ உணர்ச்சிகரமான பற்றுதலோ இன்றி ஆங்கிலச் சூழலில் பேச முடியும். அப்படித்தான் அம்மொழிக்குள் செல்கையில் உரையாடலே அமைகிறது. அப்படியே அண்ணாவுக்கோ எம்.ஜி.ஆருக்கோ வாருங்கள். தமிழில் ஆரம்பித்தால் உடனே நேர்மறையான / எதிர்மறையான தொனியில் பாராட்டாகவோ கிண்டலாகவோ அன்றி நம்மால் பேச முடியாது. ஒன்று புகழ் பாடல் அல்லது அவதூறு. அப்படி நேர்த்தியாக உரையாட ஆரம்பித்தாலும் சீக்கிரமே அது வதந்திகளை நோக்கியே வளரும். அதே நேரம், ஆங்கிலத்தில் சாவர்க்கரைப் பற்றியோ மோடியைப் பற்றியோ புறவயமாக, விமர்சன பூர்வமாக சுதந்திரமாக அபுனைவு எழுதுவதை விட புனைவு எழுதுவது ஆபத்தானது - கண்டிப்பாக தூக்கி உள்ளே வைத்து விடுவார்கள். தமிழில் என்றால் அவதூறு வழக்கு மட்டும் போடுவார்கள். ஏனென்றால் இங்கு யாரும் படிப்பதில்லை.
நம் சினிமாக்காரர்கள் இன்னும் வினோதம் - ஒரு கலவரத்தைப் பற்றிப் படமெடுக்கிறார்கள் எனில் திமுக ஆட்சியில் இருந்தால் அக்கலவரம் அதிமுக ஆட்சியில் நடப்பதாகவும் அதிமுக ஆட்சியில் இருந்தால் திமுக ஆட்சியில் நடந்ததாக தேதியை மாற்றிவிடுவார்கள். திமுக ஆட்சியில் இருந்தால் உதயநிதி தலித் மக்களின் தலைவர், திமுக ஆட்சியை இழந்தால் உதயநிதிக்கும் தலித் தலைமைக்கும் சம்மந்தமிருக்காது.
இதையெல்லாம் கருதித்தான் நம்மவர்கள் தனிப்பட்ட அனுபவங்களை மட்டுமே புனைவாக்குகிறார்கள் அல்லது பெயர், ஊர் எல்லாவற்றையும் மாற்றி சமகால வரலாற்றைப் பேசுகிறார்கள்.
டேனியல் கெல்மானின் நாவல் ஒரு அசல் வரலாற்று நாவல். இரண்டாம் உலகப்போருக்கும் முந்தைய ஜெர்மன் இயக்குநர்கள், நடிகர்களின் பெயர்களை அப்படியே பயன்படுத்துகிறார். பிரதான பாத்திரமான பாப்ஸ்ட் குறித்த விமர்சனங்கள் சமரசம் இன்றி அப்படியே வருகிறது. ஆரம்பத்தில் நாசிசத்தை எதிர்த்தவராக, இடதுசாரியாக, 'சிவப்பு பாப்ஸ்டாக' அறியப்பட்டவரான அவர் எப்படி பின்னர் ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் படம் எடுப்பதற்காக சமரசம் பண்ணிக் கொண்டார் என்று கெல்மான் சமரசமின்றி சித்தரிக்கிறார். தொழில்நுட்பத்தில் வந்த திருப்புமுனைகளும் (மௌனப்படங்களில் இருந்து பேசும் படத்திற்கான மாற்றம்) அரசியல் சமரசமும் எப்படி பாப்ஸ்டின் கலை வெளிப்பாடில் சரிவுக்கு வழிவகுத்தன எனக் காட்டுகிறார்.
கலைக்கும் நேர்மைக்குமான தூரம் எத்தகையது? நம்மால் பாப்ஸ்ட் சொல்வதைப் போல கலையை நமது நம்பிக்கைகளில் இருந்து விலக்கி வைத்து வெறுமனே தொழில்நுட்பமாக, தூய்மையான படைப்பாக்கமாகப் பார்க்க முடியுமா? அடுத்து, நினைத்ததை நேரடியாகச் சொல்ல முடியாதபோது நமது கலையில் உள்ள ஆவேசம் காணாமல் போகாதா? நாம் மௌனித்து விட மாட்டோமா? இவை இந்நாவலில் அடிப்படைக் கேள்விகள். கலையை ஒரு தொழில்நுட்பமாக மட்டுமே பார்ப்பவர்கள் ஏதோ ஒரு புள்ளியில் தமக்குள் மரித்துப் போகிறார்கள். கலை ஒன்று அந்தரங்கமான தேடலாகவோ அரசியல் வேள்வியாகவோ நேர்மையாக இயங்க வேண்டியுள்ளது. பாப்ஸ்ட் செய்த முக்கியமான பிழை அதுதான் எனத் தோன்றுகிறது. அடுத்து, அவர் அடிக்கடி சொல்லுகிற ஒரு வாக்கியம் எனக்கு இந்திய இயக்குநர்களைப் புரிந்துகொள்ள உதவியது - ஒரு எழுத்தாளர் தம் கற்பனையைக் கொண்டு முழுமையாக ஒரு நாவலை எழுதி விடலாம். ஆனால் பெரும் நிதியும் மக்கள் ஒருங்கிணைப்பும் இன்றி சினிமா எடுக்க இயலாது. தொழில் கட்டமைப்பையும் நிதியாளர்களையும் அரசுகள் கட்டுப்படுத்துவதால் அரசை சினிமாவால் எதிர்க்க இயலாது. ஆக முழுக்க முழுக்க சமரசங்களின் அடிப்படையிலே சினிமா சாத்தியமாகிறது. இப்படி இருக்க, ஒரு இயக்குநர் எப்படி நேர்மையாக சுதந்திரமாக இருக்க முடியும்? இக்கேள்வியைக் கொண்டு பாப்ஸ்ட் தனது நாசிச அரசுடனான சரணடைதலை நியாயப்படுத்த முயல்கிறார்தான். ஆனாலும் இக்கேள்வியில் சிறிது உண்மையும் உள்ளது. ஹிட்லரின் பாசிச யுகத்தில் ஜெர்மனியில் இருந்து படமெடுக்கும்போது பாப்ஸ்ட் வேறு என்னதான் பண்ணியிருக்க முடியும்?
எதுவுமே பண்ணியிருக்க முடியாது - அதாவது ரிஸ்க் எடுக்க விரும்பாத வரையிலும். பாப்ஸ்ட் தான் எதையும் இழக்க விரும்பவில்லை என முடிவெடுக்கும்போதுதான் முதன்முறையாகத் தடுமாறுகிறார். நம்மில் பலருக்கும் கூட இதுதான் நிகழ்கிறது. சமரசத்தை, அக-வீழ்ச்சியை, அறப்பிறழ்வை நோக்கி இட்டுச் செல்லும் முதல் பாதையே அச்சம்தான். சிறந்த கலைப்படைப்புகள் எதாவது ஒரு தியாகத்தின் பால்தான் தோன்றுகின்றன. பணத்தை, நேரத்தை, இன்பத்தை, உறவுகளை, நிம்மதியை, காலத்தை, சில நேரங்களில் நற்பெயரை இப்படி ஏதோ ஒன்றை விட்டுக் கொடுக்கிறோம், இழக்கிறோம், அந்த இன்மையில் கலை தோன்றுகிறது. தியாகத்திற்காக நாம் செய்யும் பிழைகளும் குழப்படிகளுமே நமக்குள் ஒரு நெருப்பைத் தோன்ற வைக்கிறது. கலையில் நாம் நிலைகொண்ட பிறகு தியாகத்தைக் கண்டு அஞ்சுகிறோம். ரிஸ்கே எடுக்காமல் செயல்பட விழைகிறோம். இழக்கவோ அஞ்சவோ ஒன்றுமில்லையெனில் நாம் படைக்கவும் ஒன்றும் இல்லாமல் போய் விடுகிறது. இது சற்றே ரொமாண்டிக்கான பார்வை எனத் தோன்றலாம். ஆனால் இதில் உண்மையுண்டு. ஹிட்லரின் ஆட்சியின் கீழ் தனக்கென கூரையொன்றை நாடும்போது பாப்ஸ்ட் தன் கருத்துச் சுதந்திரத்தையும் தியாகம் செய்யும் துணிச்சலையும் இழக்கிறார். அதற்கு ஈடாக அவருக்குப் பணமும் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. அவர் தனக்குள் சிறுகச்சிறுக இல்லாமல் ஆகிறார். வாழும் காலத்திலே வரலாற்று எச்சமாகிறார்.
இதில் நம்மில் பலருக்கும் ஒரு பாடம் உள்ளது.
கருத்துகள்