நான் நீண்ட காலமாக தமிழ் நவீன இலக்கியத்தைப் படித்து வருகிறவன். மொழிபெயர்ப்புகள் வழியாக இந்திய இலக்கியப் படைப்புகளையும் படிக்கிறவன். ஆங்கிலம் வழியாக நேரடியாகவும் மொழிபெயர்ப்பிலும் உலக இலக்கியத்தைப் படிப்பவன். நான் ஒரு எழுத்தாளரும் விமர்சகரும் கூட. என்னுடைய இந்த அனுபவத்தின் ஊடாக நான் தெரிந்துகொண்ட ஒரு உண்மை மொழிக்கும் இனத்துக்கும் தேசத்துக்கும் ஒரு படைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரத்துக்கும் பெரும் தொடர்பு இருக்கிறது என்பதே. மொழிபெயர்ப்பு வழியாகத் தமிழில் நாம் படிக்க நேர்ந்து கொண்டாடுகிற ஒரு படைப்பை ஒருவேளை அந்தப் படைப்பாளர் நம்மூரில் பிறந்து நம் மொழியிலே எழுதியிருந்தால் கொடுக்க மாட்டோம். நாம் மட்டுமல்ல உலக விருதுகள், விமர்சன அங்கீகாரம் எதுவும் அவருக்குத் தரப்பட மாட்டாது. இதை நான் அங்கலாய்ப்பாகச் சொல்லவில்லை - இதுவே எதார்த்தம். ஏனெனில் இதற்குப் பின்னால் முன்னூறு ஆண்டுகளுக்கு மேலான காலனிய ஆதிக்க வரலாறும், இனவாதமும் உண்டு. சில சுமாரான படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வரும்போதெல்லாம் எனக்குத் தோன்றும் - இவை நேரடியாகத் தமிழில் எழுதப்பட்டிருந்தால் நாம் தூக்கிப் போட்டு மிதித்திருப்போம். அண்மையில் நோபல் பரிசு பெற்ற ஆன் கார்ஸன் ஒரு அபாரமான கவிஞர். அவரைப் படிக்கையில் எனக்கு நகுலன் மட்டும் ஐரோப்பாவில் வெள்ளையராகப் பிறந்து இதே கவிதைகளையும் புனைவுகளையும் எழுதியிருந்தால் அவருக்கும் நிச்சயமாக நோபல் பரிசு கிடைத்திருக்கும் எனத் தோன்றியது. நகுலன் மட்டுமல்ல இன்னும் பத்து நவீன கவிஞர்களை என்னால் அவ்வாறு தமிழில் இருந்து சொல்ல முடியும். ஆனால் இங்கு சுவாரஸ்யம் உலகம் நம்மை கவனிக்கிறதா என்பது கூட அல்ல. நாமே அதை நம்பவில்லை என்பதே. நமக்கு நம் படைப்பாளிகளை உலகப் படைப்பாளிகளிடம் ஒப்பிட்டுப் பரிசீலிக்கும் வழக்கமே இல்லை (ஷெல்லியை பாரதியுடன் திரும்பத்திரும்ப ஒப்பிட்டதை நான் சொல்லவில்லை). இது நமக்குள் இருக்கும் ஒருவித தாழ்வுணர்ச்சியில் இருந்து வருகிறது. இத்தாழ்வுணர்ச்சியே சில சுமாரான மலையாளப் படைப்பாளிகளைக் கொண்டாட வைக்கிறது. மொழிபெயர்க்க வைக்கிறது. சொல்லப்போனால் மலையாளத்தில் நாம் காணும் 90% மேற்பட்ட படைப்பாளிகள் சராசரிகள்தாம். ஆனால் அவர்கள் மலையாளத்தில் எழுதுவதாலே கொண்டாடுகிறோம். நம் மொழி, நம் அறிவு, நம் கற்பனை, நம் கலாச்சாரம் சற்று தாழ்வானது எனும் உணர்வு நம் அடிமனத்தில் உள்ளது. இதை நான் மலையாளத்தை வைத்துச் சொல்லவில்லை. நான் நாளையே ஒரு புத்தகத்தைப் போலியாக எழுதி அது ஒங்காரியா எனும் மொழியில் எழுதி விருதுகள் வென்ற ஒரு மகத்தான படைப்பு எனக் கற்பனையாகச் சொன்னால் அதைப் பலரும் ஆர்வமாகப் படித்து பாராட்டுவார்கள். அதையே தமிழர் ஒருவர் எழுதியது என்றால் மதிக்க மாட்டோம். உலக மொழிகளில் எழுதப்பட்டவை நாம் எழுதுபவற்றை விட மேலானவை, அவை ஒப்பீட்டுக்கும் மதிப்பீட்டுக்கும் அப்பாலானவை என நாம் உறுதியாக நம்புகிறோம். அப்படியே ஒப்பிட்டாலும் அவர்கள் அளவுக்கு நம்மாலும் எழுத முடிகிறது என்கிறோம். ஆனால் ஒரு சாராசரி மாற்றுமொழிப் படைப்பாளியைச் சராசரி எனக் கூறும் துணிச்சல் வருவதில்லை. ஏனென்றால் நம் மனம் நம்மைத் தவிர பிறர் நம்மைவிட உயர்ந்தவர்கள் எனக் காரண காரியமின்றி நம்புகிறது.
மற்ற இந்திய மொழிகளில் உள்ளவர்களுக்கும், காலனியாதிக்க ஆப்பிரிக்க நாட்டினருக்கும் இத்தகைய தாழ்வுணர்வு உண்டா எனத் தெரியவில்லை. இதைக் குறித்து ஆய்வு செய்து பார்க்க வேண்டும். ஆனால் நான் வட இந்தியர்களிடம் தத்துவம் குறித்துப் பேசும்போது பௌத்தத் தத்துவத்தின் தாக்கம் ஜெர்மானிய தத்துவாதிகளான ஷோப்பன்ஹெர், நீட்சேயிடம் உண்டு எனச் சொன்னால் அவர்கள் திடுக்கிடுவதைப் பார்த்திருக்கிறேன். ஆக இப்பிரச்ச்னை இந்தியாவில் பரவலாக உள்ளதே.
வெள்ளைக்காரர்களின் அங்கீகாரம், பரிசு என ஒன்று இல்லாவிட்டாலும் கூட இத்தாழ்வுணர்வு இருந்துகொண்டேதான் இருக்கும் என நினைக்கிறேன். இதை மறைக்கத்தான் ஒரு பக்கம் நம்மூரில் மொழிப் பெருமை, இனப்பெருமை எல்லாம் மிகையாக முன்வைக்கப்படுகிறது. வடக்கே இது சனாதனம், புராணம், மரபு, சமஸ்கிருதம் என முன்வைக்கப்படுகிறது. ஆனால் யாருக்கும் தம் பெருமையில் துளிகூட நம்பிக்கை இல்லை.
கருத்துகள்