முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறந்த நிறுவனங்களில் கல்வி பெறுவதன் பயன் என்ன?

May be an image of studying and text 

நான் பிறந்து வளர்ந்தது, படித்தது ஒரு கிராமத்திலும் அதை ஒட்டிய சிறுநகரங்களிலுமே. அப்போது இணையத் தொடர்பு இல்லை. அப்போது அதிகமாகப் புத்தகங்கள் கூடக் கிடைக்காது. பள்ளிப் படிப்பை அரசுப் பள்ளியிலும் இளங்கலைப் படிப்பை அரசு உதவி பெறும் கல்லூரி ஒன்றிலும் முடித்தேன். நான் அதன் பிறகு முதுகலைப் படிப்பதற்காக சென்னைக்குப் போனேன். அது மிகப் பிரசித்தமான கல்லூரி. அங்கு போனதும் ஒரு விசயம் என்னை ஆச்சரியப்படுத்தியது - அங்குள்ள மாணவர்கள் நகரங்களில் உள்ள தனியார் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்து வந்தவர்கள். ஆனால் வகுப்பில் அவர்களை விட அதிகம் வாசித்தவனாக, அறிவு படைத்தவனாக நான் இருந்தேன். எங்களுடைய பேராசிரியர்கள் மிகச் சிறந்தவர்கள். அவர்களையும் வகுப்பில் பேசித் திணறடிக்க என்னால் முடிந்தது - அதற்காக நான் தனியாக வாசித்துத் தயாரித்துக் கொண்டு, என் மூத்த எழுத்தாள நண்பர்களுடன் விவாதித்து கேள்விகளைத் தயார் பண்ணிப் போவேன். கேள்விக்கு என்னென்ன பதில்கள் கிடைக்கும் என ஒரு கட்டத்தில் தெரிந்து போக அப்பதில்களுக்கும் கேள்விகளைத் தயார் பண்ணிக் கொண்டு போவேன். ஒரு கட்டத்தில் அதுவும் அலுத்துப் போக என்னைப் போன்ற இன்னொரு மாணவரைப் பிடித்து அவரும் நானுமாக கேள்விகளைத் திட்டமிடத் தொடங்கினோம். நான் ஒரு எளிய கேள்வியைக் கேட்டு ஆசிரியரைப் பேச வைத்து அப்போது அந்த நண்பர் ஒரு சிக்கலான கேள்வியை எழுப்ப அதற்கு இவர் பதில் சொல்ல நான் அதற்கான துணைக் கேள்வியைத் தயாராக வைத்திருப்பேன். பெரும்பாலான வகுப்புகள் இப்படி நாங்கள் மூவருமே பேசிக் கொண்டிருப்பேன். தேர்விலும் எப்படிச் சரியாக எழுத வேண்டும் எனக் கற்க எனக்குச் சற்று அவகாசம் எடுத்தது. ஆனாலும் கடுமையாக உழைத்து நானே முதல் மதிப்பெண்ணைப் பெறுவேன். முதல் வருடத்திலேயே இப்படி என் பெருநகரப் பிரவேசம் எனக்கு அலுத்துப் போனது. நான் சென்னைக்கு வரும்போது அங்குள்ள மாணவர்கள் பயங்கர அறிவாளிகளாக இருப்பார்கள் என நினைத்தேன். ஆனால் அவர்களுடைய ஆர்வம் வேறு விசயங்களில் இருந்தது - அவர்கள் என்னைவிட நடைமுறை ஞானம் பொருந்தியவர்களாக இருந்தார்கள். நான் ரொம்ப நாட்களாக அவர்களுக்கு உழைப்பும் திறனும் இல்லை என நினைத்துக் கொண்டு இருந்தேன். உண்மை அதுவல்ல என்று நான் படித்து முடித்து வேலைக்குப் போகும்போது புரிந்துகொண்டேன்: என்னென்ன வேலைகள் சந்தையில் உள்ளன, அவற்றுக்கு என்ன மாதிரியாகத் தயாராக வேண்டும் என என் நண்பர்களுக்குத் தெரிந்திருந்தன. நான் என் இறுதித் தேர்வை எழுதும்போது வரைக்கும் வேலையைப் பற்றி யோசிக்கவில்லை. அதற்காக எந்த வலைத்தொடர்பையும் உருவாக்கவில்லை. என்னுடைய வகுப்பு நண்பர்களில் சிலர் வேலை செய்துவிட்டு படிக்க வந்தவர்களாகவும், அதற்காக தேர்வு எழுதுபவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பட்டம் பெற்றதும் நல்ல வேலையில் போய் அமர்ந்தனர். ஒருவர் படிப்பின்போதே அரசுத் தேர்வில் தேர்வாகி வேலை கிடைக்கும் நிலையில் இருந்தார். சிலர் வெளிநாட்டுக்குச் சென்று நல்ல பொறுப்பில் அமர்ந்தனர். சிலர் ஊடகங்களில் உயர்பொறுப்பை அடைந்தனர். சிலர் இலக்கியத்துக்குச் சம்மந்தமே இல்லாமல் வங்கித் துறைக்குச் சென்று உயர்பொறுப்பை அடைந்தனர்.

நான் படித்து முடித்து வேலைக்குப் போனபோது என்ன வேலை என்றே முடிவெடுக்க இயலாமல் இருந்தேன். ஆரம்பத்தில் எனக்கு இது தத்தளிப்பாக இருந்தது. என்னுடன் படித்தவர்களுக்கு அவ்வாறு இல்லை. அதாவது படிப்புக்காக படிப்பது வேறு, வேலைக்காகத் தயாராவது வேறு. நான் வேலைக்குச் செல்லும்போது கூட எப்படி எழுத்தாளராவது எனும் கனவுடனே இருந்தேன். நான் செய்த வேலைகளே எனக்கு தொழில்முறைப் பயிற்சி என்றால், தயாரிப்பு என்றால் என்னவெக கற்றுத் தந்தன. என் வேலைக்கான தேவைகளைப் புரிந்து மெல்லமெல்ல என்னை மேம்படுத்திக் கொண்டேன். செம்மையாக்கம் செய்வது, அறிவியல் மொழியைத் திருத்துவது, சுயமாக அறிவியல் மொழியில் எழுதுவது, வகுப்பில் கற்றுக் கொடுப்பது என நிறையக் கற்றுக் கொண்டேன். நான் வேலை செய்த இடங்களில் சார்த்தர் பற்றியோ பிளேட்டோ பற்றியோ பேசினால் அவர்கள் நான் ஏதோ அந்நிய மொழியில் பேசுவதாகக் கருதினார்கள். நான் படித்த விசயங்களை என் வேலையில் நான் பயன்படுத்தவே எனக்கு நெடுங்காலம் ஆயிற்று. கல்விக்காகப் படிப்பதும், வேலைக்காகப் படிப்பதும் இருவேறு விசயங்கள் என்பதே நான் பெற்ற முதல் அதிர்ச்சி. வேலையில் நமக்கு மிகமிகக் குறைவான அறிவும் நிறைய நடைமுறைத் திறன்களும் தேவைப்படுகின்றன.
அதன் பிறகு நான் ஒரு சிறந்த தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானபோதும் சிறந்த தனியார் பள்ளிகளில், பல்கலைக்கழகங்களில், அயல்நாட்டில் படித்த மாணவர்களைச் சந்தித்தேன். அவர்களுக்கு இளங்கலை, முதுகலை, முனைவர் பட்ட ஆய்வு என கற்றுக் கொடுக்கையில் என்னுடைய பின்னணி எனக்கு ஒரு குறையாக இருக்கவில்லை. சொல்லப்போனால் எனக்குச் சவாலாக விவாதம் செய்யவும், கூடவே எனக்கு இணையாகச் செயல்படவும் நண்பர்களும் மாணவர்களும் அமைந்தபோது மட்டுமே நான் நிறைவாக உணர்ந்தேன். அதேநேரம், நான் என் ஊரில் பெறாத, பின்னர் அனுபவத்தில் பெற்ற நடைமுறைத் திறன்கள் வேலையில் ஜொலிக்க வெகுவாக உதவின.
பெரும்பாலான நேரங்களில் நாம் எங்கு படிக்கிறோம், எங்கிருந்து வருகிறோம் என்பது ஒரு பொருட்டே அல்லவென்றே எனக்குத் தோன்றியிருக்கிறது. அண்மையில் என்னுடைய கல்லூரியில் இளங்கலைப் படிப்பின்போது எனக்கு இளவலாக இருந்த ஒருவருடன் பேசினேன். அவரும் அங்கேயே முதுகலை முடித்துவிட்டு நல்ல நிலையில் இருந்தார். இதனாலே நான் குழந்தைகளின் பள்ளி, கல்லூரி படிப்புக்காக அதிகப் பணம் செலவழித்து மெனெக்கடுவதில் அர்த்தமில்லை என்றே நம்பி வந்தேன். அதேநேரம், நான் நினைத்தது முழுக்கச் சரியல்ல, இந்தப் பார்வை ஒரு குறிப்பிட்ட வகையானவர்களுக்கே மட்டுமே பொருந்தும் என இப்போது தோன்றுகிறது.
நான் மேலே குறிப்பிட்ட வகையானவர்களுக்கு சிறு துருப்பு கிடைத்தாலும் அதைப் பிடித்து மேலே வந்துவிடுவார்கள். நடைமுறைத் திறன்களைக் கூட அனுபவத்தில் சேகரித்துக் கொண்டு முன்னேறுவார்கள். ஆனால் எதிலும் தீவிர ஆர்வமில்லாத, சுயதேடல் இல்லாதவர்களே, சராசரியானவர்களே இங்கு அதிகம். அவர்களுக்கு இளவயதில் இருந்தே ஆசிரியர்களின் வழிநடத்தலும், போதனையும் நிறையத் தேவைப்படுகிறது. சிறந்த ஆசிரியர்களின் கீழ் அவர்கள் வளரும்போது அவர்களுக்கான அன்றாட சவால்கள் அதிகரித்துக் கொண்டே போகும். அப்போது வளர்ச்சியும் துரிதப்படும்.
அடுத்து தொடர்புகளும் சூழலும். நாம் படித்து வளர்கிற சூழல், நமக்குக் கிடைக்கிற தொடர்பு வலைகள், வாய்ப்புகள் பெரும் தாக்கத்தை நம் வாழ்க்கை நிலை மீது ஏற்படுத்தும். இவற்றை நமது ஊரிலேயே பெற முடிந்தால் நாம் அதிர்ஷ்டசாலி. நான் அடிக்கடி நினைப்பேன் - நானோ என்னுடைய சக எழுத்தாளர்களோ தமிழ்நாட்டில் பிறக்காமல் தில்லியிலோ மும்பையிலோ வளர்ந்திருந்தால்? இங்கு இருந்து எழுதாமல் அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஒரு ஐரோப்பிய தேசத்தில் பிறந்து படித்து எழுதியிருந்தால்? உலகப் புகழ் அங்குள்ள தொடர்புகளாலும் சூழலாலும் கிடைத்திருக்கும். தென்னமெரிக்காவை எடுத்துக் கொள்வோம். மார்க்வெஸுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதும் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளி நிர்வாகம் மாணவர்களை அழைத்துக் கொண்டு அவரது வீட்டு முகப்பில் நிற்க வைத்து அவரை வாழ்த்திப் பாட வைத்ததாக நேற்று ஒரு நூலில் படித்தேன். அதேபோல அவர் அன்று சாலையில் நடந்துபோகும் போது வாகனங்கள் ஹாரன் முழுக்கி அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்த நாடே தேசமே கொண்டாடுகிறது. அவரது அரசு ஸ்விட்ஸர்லாந்துக்கு ஒரு இசைக்குழுவினரை அனுப்பி வைத்து நோபல் பரிசை அவர் வாங்கும் இரவு அங்கு பெரும் கொண்டாட்டச் சூழலை உருவாக்குகிறது. பிடல் காஸ்டிரோ மதுவகைகளை அனுப்பி வைக்கிறார். ஸ்விட்ஸர்லாந்தே அல்லோலப்படுகிறது (Garcia Marquez - Paul Strathern). இதுவே மார்க்வெஸ் இந்தியாவில் பிறந்து எழுதியிருந்தால்? முதலில் "நூற்றாண்டுகளின் தனிமை"அவ்வளவு மில்லியன் பிரதிகள் விற்றிருக்காது. பிரதமர், அமைச்சர்களுக்கு அவரைத் தெரிந்திருக்காது. நோபல் பரிசெல்லாம் வாய்ப்பே இருந்திருக்காது. அப்படியே கிடைத்தாலும் ஊடகங்களில் மட்டுமே அதைக் கொண்டாடிவிட்டு யாரோ ஒரு வயதானவர், எதையோ உருப்படியாகப் பண்ணி நல்ல பெயர் வாங்கியிருக்கிறார் என நம் ஊர் மக்கள் அவரை அப்படியே விட்டுவிடுவார்கள்.
இதனாலே தம் பிள்ளைகளை வெளிநாடுகளில அனுப்பிப் படிக்க வைக்கிறவர்கள் மேல் எனக்கு அதிக மரியாதை வருகிறது. 30-40 ஆண்டுகளுக்கு முன்பு அங்கேயே போய் செட்டில் ஆனத் திறமையானவர்கள் அதிர்ஷடசாலிகள். இந்தியா என்றால் தலைநகரிலோ அதை ஒட்டியோ பிறந்திருக்க வேண்டும். இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் களமாட வேண்டும். அருந்ததி ராய் மட்டும் ஆங்கிலத்தில் எழுதாமல், தில்லியில் படித்து வாழாமல் மலையாளத்திலே படித்து கேரளாவிலே வாழ்ந்து அம்மொழியிலே எழுதியிருந்தால்? ஒரு சிரியன் கிறிஸ்துவ மலையாளிப் பெண் எழுத்தாளராகவும் பள்ளிக்கூட ஆசிரியராகவும் மட்டுமே கூட்டத்தோடு கூட்டமாக இருந்திருப்பார்.
நாம் யார் என்பதுடன் நாம் எங்கு பிறந்து வளர்கிறோம், வாழ்கிறோம் என்பதே நமக்கான வாய்ப்புகளைத் தீர்மானிக்கின்றன.
மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வருகிறேன்: இன்று சிறந்த பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கிற மாணவர்களுக்கு என்னுடைய சென்னை-வாழ் சக மாணவ நண்பர்களுக்கு இருந்த நடைமுறை ஞானமும் தொடர்புகளும் அதிகமாக உள்ளது. எதைப் படித்து எதைச் செய்து முன்னேறுவது எனத் தெரிந்திருக்கிறது. அதற்கான ஆலோசனைகளை பத்து வயதிலேயே கொடுக்க ஆரம்பித்து அவர்களை வளர்த்தெடுக்கிறார்கள். மிகச் சுமாரானனவர்களையும் நல்ல மாணவர்கள் ஆக்குகிறார்கள். அப்படிப் படிக்க இயலாதவர்கள் இயல்பிலேயே துடிப்பாகவும் திறமையாகவும் இல்லாவிடில் முன்னேறத் தெரியாமல் மாட்டிக் கொள்கிறார்கள். யாரிடம் உதவி கேட்பது என்பதே கடைசி வரைத் தெரியாமல் போகிறது. இத்தனைக்கும் இன்று இணையமும் செய்யறிவும் செல்போனிலே வந்துவிட்ட போதும் கூட எந்தத் திட்டமும் இல்லாமல் எதையோ படித்துவிட்டு சம்மந்தமில்லாத வேலையில் ஆர்வமின்றி இருக்கிற, நீரில் விழுந்த எறும்புகளைப் போலத் தத்தளிக்கிறவர்களைப் பார்க்கிறேன். இவர்களுக்கும் இவர்களுடைய அதே ஆற்றலுடன் இயல்புடன் இருந்தாலும் நல்ல வேலைகளில் இருப்பவர்கள், தொழிலில் முன்னேறுபவர்களுக்கும் வித்தியாசம் ஒன்றுதான்: கல்வியிடத்தில் கிடைத்த ஆலோசனைகளும் தொடர்புகளும் தொடர்ச்சியான சவால்களும் இவற்றால் ஏற்பட்ட அழுத்தமும் தோன்றிய ஆர்வமும்.
இன்றைய நடைமுறை உலகில் கல்வி என்றால் இவ்வளவுதானோ எனும் எண்ணம் எனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது.
பி.கு: நமது முன்னேற்றத்தில் மிகப்பெரிய தாக்கம் செலுத்துகிற மற்றொரு விசயம், கல்வி நிறுவனத்தாலோ திறமையாலோ பெற முடியாதது சாதியும், அது தரும் தொடர்புகளும் என நினைக்கிறேன். அதாவது சாதியின் சமூக முதலீடு. இதைக் குறித்து இன்னொரு சந்தர்பத்தில் விவாதிப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்று அவளது ஐம்பதாவது திருமண நாளாக இருக்க வேண்டும் (ஆன் கார்ஸன் கவிதைகள் 3)

  ரொமானிய சுவரை நோக்கி உரையாற்றுகிறது குளிர் - ஆன் கார்ஸன் - தமிழில் ஆர். அபிலாஷ் ஒளி மட்டற்று ( சிறைப்படுத்தப்பட்டது ) மேலும் , நிழல்கள் விழக் காத்திருக்கின்றன தலைமறைப்புகளைப் போல . மூளை தட்டுகிறது இருமுறைகள் உப்புக்காக .   WOULD BE HER 50TH WEDDING ANNIVERSARY TODAY Cold orates upon a Roman wall. Light is extreme (caught) and shadows wait like hoods to drop. Brain taps twice for salt. Was it Ovid who said, There is so much wind here stones go blank. (Excerpt From Decreation, Anne Carson) வாசகக் குறிப்பு : இதுவும் ஒரு கீறல் ஓவியம் போன்ற கவிதைதான் . விளக்கக் குறிப்புகளோ விவரணைகளோ இல்லை . கதையாடல் கவிதையென்றாலும் யார் , என்ன , எப்படி , ஏன் ஆகிய தகவல்களை நாமே அனுமானிக்க வேண்டும் . இப்போது ஒவ்வொரு சொல்லும் ஒரு உருவகமாகிறது ( ஏனெனில் தலைப்பில் உள்ள திருமண பந்தம் குறித்த விபரம் இதைக் குறியீடாக்காமல் தடுக்கிறது ). ஐம்பதாவது திருமண நாளெனில் அவருக்கு வயது 70 இருக்குமா ? அவர் ரொமானிய வரலாற்றுச் சின்னங்களைக் காண வந்...

இருளின் காலம்

ஊடகவியலாளர்களைக் கொத்துக்கொத்தாகக் கைது பண்ணுகிறார்கள் எனும்போதே நெருக்கடி நிலை ஆரம்பித்துவிட்டது ஊர்ஜிதம் ஆகிறது. அதுவும் போராட்டங்களைப் பதிவு பண்ணுவதற்குப் போனவர்களை. ஒட்டுமொத்தமாக போராடுபவர்களைத் தூக்கிச் சிறையில் வைப்பது, அவர்களைக் குறித்த விபரங்கள், காணொளிகள், செய்திகள் வெளிவராமல் பார்ப்பதே பாஜக அரசின் திட்டம். இனி அடுத்து என்னவெல்லாம் செய்வார்கள்? எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டாளர்களை கண்ட இடத்தில் கைது, மறைமுகமாக பல ஊடகங்கள் முடக்கம், மக்கள் சில பகுதிகளில் பயணிக்க மறைமுகத் தடை, எந்தெந்த விசயங்கள் ஊடகங்களில் பேசப்படலாம் என்பதற்கான மறைமுக அறிவுறுத்தல் எனப் போகும். முடிவில் எதிர்க்கட்சிகள் தாம் ஆளும் மாநிலங்களில் போராடினால் ஆட்சிக் கலைப்பு நடக்கும். ஆளுநர் ஆட்சி வரும். இப்போதைக்கு நீதிமன்றங்கள் பிணை வழங்குவதால் சிறிது அவகாசம் போராளிகளுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் கிடைத்துள்ளது. வெளிவர முடியாத சட்டங்களில் கைது நடக்கும்போது நிலைமைத் தீவிரமாகும். ராகுல் காந்தி இப்போராட்டங்களை முன்னறிந்து பாராளுமன்றத்தில் பேசியது நினைவுக்கு வருகிறது. அதாவது கரப்பான்கள் தோன்றும் முன்பே இப்படியான போராட்ட...

தமிழ்நாடு ஏன் க்யானேஷ் குமாருக்கு எதிராகப் பொங்குவதில்லை?

  சினிமா போதையின் பிரச்சினைகளைப் பற்றி தமிழ்நாட்டு எழுத்தாளர்களே தொடர்ந்து அழுது புலம்பி சபித்து சமாதானமாகி இருக்கிறார்கள் இதுவரை. ஆனால் இப்போது முதன்முறையாக வெகுமக்கள் இடையில் சினிமா வெறியர்கள் அரசியல்மயமாவதற்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. குறிப்பாக 40-70 வயதுக்கு உட்பட்டோர் பேசுவதைக் கேட்டால் புரியும். அரசியல் நோக்கர்களும் இதனால் கசப்படைகிறார்கள். தமிழ்நாட்டினர் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டனர் என திருப்பூர் குணாவும், ஜீவாவும், ஆர்.கே. சண்முகவேலும் சேர்ந்து ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்கள் ("டிஜிட்டல் போதையில் நாம் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை"). அவர்கள் சமூகவலைதளச் செயல்பாடுகளும் தரவுப் பகுப்பாய்வுத் தொழில்நுட்பமும் விஜய்யின் வெற்றிக்கு எப்படிப் பயன்பெற்றன என்றே பிரதானமாகப் பேசினாலும் விஜய்யின் சினிமாப் புகழ் அவரை வைத்து நடந்த டிஜிட்டல் பிரச்சாரத்துக்கு அடிப்படை என்பதை அவர்கள் மறுக்கவில்லை. கடந்த தேர்தலின் போதிருந்தே 'தற்குறி' எனும் சொல் இதற்கென மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுவதையும் பார்க்கிறோம். 'தற்குறி' சினிமா ரசிக மனநிலை, சினிமா மந்தைத்தனம் ஆகியவற்றை...