துணிச்சலை இரண்டாகப் பகுக்கலாம் என்று நேற்று என் மாணவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். 'புறத்துணிச்சல், அகத்துணிச்சல். புறத்துணிச்சலே வன்முறை, தாக்குதல், உணர்ச்சியால் தூண்டப்பட்டு தன் உடலால் ஒரு வேலையைச் செய்தல். அகத்துணிச்சல் என்பது புற உலகிற்குப் பணியாமல் ஒருவர் தான் நம்பும் விழுமியத்துக்காக, நம்பிக்கைக்காக ஒன்றைச் செய்வது. இரண்டாவதுதான் இருப்பதிலேயே கடினம். 99% ஜனங்களால் அகத்துணிச்சலைக் காட்ட முடியாது.' இதைக் கேட்ட ஒரு மாணவர் அகத்துணிச்சல் ஏன் கடினமாகிறது என்று கேட்டார். நான் அவரிடம் சொன்னேன், "நாம் ஒரு குழுவுக்குள் இருக்கையில் நம் துணிச்சல் குழுவின் துணிச்சல்தான். குழு சொல்வதை, செய்வதை நாமும் அப்படியே செய்வோம். இத்துணிச்சலே அச்சத்தினால் விளைவதுதான். ஆக அது துணிச்சலே அல்ல. துணிச்சலைச் சரியாக விளக்குவதானால் அகத்தெளிவுடன் குழுவுக்கு எதிராகச் செயல்படுவதுதான். இதைச் செய்தால் நாம் வெளியேற்றப்படுவோம் எனும் அச்சத்தினாலே நாம் பதுங்கிக் கொள்கிறோம்."
இதைச் சொல்லும்போதே குழுவுடன் இருப்பதன் பயன்கள் என்ன என்றும் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். குழுவுடன் இணங்குவது நமக்கான பல பிரச்சினைகளை தன்னிலையிலே சரி பண்ணிவிடும். எழுத்தாளர்களை, வாசகர்களைப் பாருங்கள். கட்டுப்பெட்டியான குழுக்களில் அவர்கள் இணைந்ததுமே அவர்களுக்கு நூறு கைகள் முளைத்ததைப் போல உணர்வார்கள். ஆனால் போகப்போகத்தான் அது முழுக்க உண்மையல்ல என்று தோன்றும். ஒருநாள் தன் இரு கைகளுமே கட்டப்பட்டதாகத் தோன்றும். கடைசியில் தனக்குக் கையே இல்லையெனத் தோன்றும். அப்போது அதை ஏற்காமல் தனக்கு நூறு கைகள் உள்ளதாகக் கற்பனை பண்ணி அதை ஊருக்கும் நியாயப்படுத்தப் பார்ப்பார்கள். மகிழ்ச்சியாக, சுதந்திரமாக இருப்பதாக நடிப்பார்கள்.
மனிதனாக இருப்பதே தனியனாக இருப்பதுதான். தனியர்கள் பரஸ்பரம் அன்பு காட்டுகிறார்கள், ஒத்திசைகிறார்கள், உழைக்கிறார்கள் என்று கூறலாம். ஆனாலும் இதனூடே தான் தனக்காகவே இருப்பதாக நினைக்கிறார்கள். இந்த உள்முரணே மனித நிலை. குழு இதை அனுமதிப்பதில்லை. குழு ஒரு மனிதனை மீண்டும் விலங்கு நிலைக்குக் கொண்டு போவதாக சிலர் நம்பலாம். ஆனால் கூட்டு விலங்குகளுக்கு தன்னிலை குறித்த உணர்வு இருந்தால் கூட அவை மனிதனைப் போன்றே யோசிக்கும். அதனாலே விலங்குகள் இடையே சூழலுடனும் வேறு உயிர்களுடனும் கலந்து புது விலங்குகள் தோன்றியபடியே இருந்திருக்கின்றன. நாம் நம்புகிற குழுவென்பது மனிதக் கண்டுபிடிப்புதான் என நினைக்கிறேன். அது அச்சம், குற்றவுணர்வை அடிப்படையாகக் கொண்டும், அதை மறைத்து பொய்யாக மகிழ்வையும் கொண்டாட்டத்தையும் சாதனை உணர்வையும் சிருஷ்டிக்கும் தந்திரங்களைக் கொண்டது. இந்த முரண்தான் அதன் அடிப்படை.
ஒவ்வொரு குழுவும் தனிமனிதனை நோக்கியே "உன்னை மேம்படுத்துவேன், விடுதலை செய்வேன்" என்று சொல்லியே ஆரம்பிக்கப்படுகிறது. "குழுவை வளர்ப்போம், அதற்காக உன்னைத் தியாகம் பண்ணு" என்று எக்குழுவும் கோருவதில்லை. ஆனால் அதில் இணைந்தபின் அது "உன்னைத் தியாகம் செய்" என்று கோருகிறது. அவனது மேம்பாட்டை மறுத்து, அதைக் குற்றமாக்குகிறது; அவனது சுதந்திரத்தைப் பறித்து, அதை ஒழுங்கீனமாக்குகிறது.
இந்தப் பொய்மையைப் புரிந்துகொண்டு தனியாக நிற்க ஆரம்பத்திலேயே பழகுவது நல்லது. உள்ளே போய் மாட்டிக் கொண்டு பழகி வெளிவர இயலாமல் தவிப்பவர்கள் ஏராளம். இது ஒரு மனிதக் கண்டுபிடிப்பு என்பதால் இது மனிதனின் தன்னியல்பான பலவீனம் அல்ல. மனிதன் தன்னியல்பாகத் தனியாகவே சிந்தித்து தனக்காகவே முடிவுகளை எடுக்கிறான். குழுவுக்குள் இயங்கவே அவனுக்குப் பயிற்சி தேவை. அப்பயிற்சி இல்லாவிட்டாலே அவன் தன்னிலையில் உருப்படியாக இருப்பான். பரஸ்பரம் பாராட்டுவது, பொய் சொல்வது, அற்ப அனுகூலங்களைத் தாண்டி குழுவுக்குள் ஒன்றுமில்லை என்பதை அவன் புரிந்துகொண்டால் போதும். குழுவுடன் இருக்கையில் பல ஆயிரம் பேர்களின் பகுதியாக, பேராற்றலின் துளியாக இருப்பதாக உணர்வது ஒரு பிரமை. ஒரு சின்ன குண்டு வெடித்த சப்தம் கேட்டால் அது கலைந்து விடும். எந்த மனிதனும் ஒரு சத்தம் கேட்டால் கை வேறு, கால் வேறு, மூக்கு வேறு, வாய் வேறு எனப் பிரிவதில்லை.
தனிமையைப் பழகுவது, அதை ரசிப்பது, அதை ஏற்பதுதான் முதற்பகுதி. தனித்து யோசித்து முடிவெடுப்பது அடுத்தது. அதைச் செயல்படுத்துவது அடுத்தது. அதுதான் தைரியம், துணிச்சல். அதன்பிறகு யாருடனும் இருக்கலாம், எவ்வளவு அன்பையும் கொட்டலாம். எவ்வளவு பெருங்கூட்டத்திலும் இருக்கலாம். ஆனால் தனியாகத்தான். இதுதான் துணிச்சலின் உச்சக் கட்டம். தனிமையின் நேர்மறையான, சிறப்பான விளக்கம் இதுதான். இது பௌதீகத் தனிமை அல்ல, இது அகத்தனிமை.
அகத்தனிமையே தைரியம்தான். அகத்தனிமை இருந்தால் யார் என்ன சொன்னால், செய்தால் என்ன என்று துணிச்சலாக இருக்கலாம்.
Comments