நூல் : மனுஷ்ய புத்திரன்: எளிய மனங்களில் பாணன்
ஆசிரியர் : ஆர். அபிலாஷ்
வெளியீடு : உயிர்மை
பக்கங்கள் : 80
வகை : கட்டுரை
நூலாசிரியரான ஆர். அபிலாஷை முகநூலின் வழி அழுத்தமான, கவனக்குவிப்பை கோரும் நீண்ட கட்டுரைகளுக்காக எனக்குப் பரிச்சயம். அவ்வகையில் இந்நூலும் ராணுவ கட்டுப்பாட்டோடு எழுதப்பட்டது எனலாம். மனுஷை யாருக்குத்தான் பிடிக்காது?. எனக்கான அவரின் முதல் அறிமுகமே ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியே. நீண்ட வருடங்களுக்கு முன்பு பார்த்தது. அதில் பெருத்த சத்தத்தோடு விவாதித்துக் கொண்டிருந்தார். அதைத் தாண்டியும் அவரிடம் ஈர்த்தது, குடைராட்டினத்தில் வரிசையாய் தொங்கவிடப்பட்ட நூலிழையாய், சீராக அங்குமிங்கும் அலைபாயும் கேசமே. முதலில் நான் அவரின் ஹேர் ஸ்டைலின் ரசிகன். பின்பே அவரின் கவிகளுக்கு. என் பள்ளி மாணவனொருவன் மூலம் அறிமுகமான அவரின் ‘காதலின் நூறு சம்பவங்கள்’ நூல்தான் எனக்கு அவரின் முதல் நூல். அதற்கு முன்னதாக முகநூலில் கவிதைகளை வாசித்திருக்கிறேன். இந்த அறிமுகங்களைக் கொண்டே அவருக்கான ஒரு கவிதையையும் புனைந்தேன். மனுஷும், ஆர். அபிலாஷும் பொறுத்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.
வெட்டிப்பறிக்கும் வலிகளினூடே
கொட்டிக் கிடக்கும் பணிகளுமுண்டு
தூக்கம் கேட்கும் கண்களுக்கு
உறக்கம் துறக்கும் உறவுமுண்டு
கரைகளின் தென்றலில்
அசைந்திடும் நாணல்கள் கவிழ்ந்திடும்
உன் கழுத்துத் திருப்பலின்
குடைராட்டின காரிருள் சிகைக்கு
ஓய்வொன்றறியா உடலிது
கவிதைகளைப் படைத்து படைத்து இளமையில் இருக்குது
குளிர் நிலவு கண்ணக் குழிகளில்
இதழ் பதித்தெழுதிட வேண்டும்
முத்தமெனும் கவிதை
அப்போதது காமத்தில் சேராது
மனுஷின் அன்பில் சேரும்.
உடலியக்க செயல்பாட்டில் அனுதினமும் சவால்களை சந்திக்கும் ஒரு மனிதன் இப்படி வருடம் முழுக்க சலிப்பின்றி எப்படி இயங்க முடிகிறது?. இது என்னை ஒரு பக்கம் ஆச்சரியமூட்டினாலும் மறுபக்கம் என் செயல்பாட்டின் மேல் கழிவிரக்கும் கொள்ளவும் செய்கின்றது. இவை யாவும் ஒரு சாதாரண வாசகனின் பார்வைகளே. இங்கிருந்து பல படிகள் உள்நோக்கி மனுஷ்ய புத்திரனின் கவி மனதை ஆராய்ந்து ஒரு தத்துவ ஞானியாய் எழுதியுள்ளார் ஆசிரியர். அது இந்நூலை வாசிக்க கடுமையாக்கினாலும் முப்பதாண்டு காலம் கவிதைகளை எழுதி வரும் கவி மனதில் ஊறுபவைகளை அப்படித்தானே அணுக வேண்டும் எனச் சொல்கின்றன.
கவிதைகளை வாசிக்கும்போது ஏற்படும் உளக்கிளர்ச்சியினூடே எழுதப்படும் மதிப்புரைகள் ரசிக மனப்பான்மையாய் நின்றுவிடும். இந்நூல் அவ்வாறு எழுதப்படவில்லை என்பதை வாசிக்கும் எவரும் உறுதியாக சொல்ல முடியும்.மேலும் நான் எழுதிய கவிதை நூல் மதிப்புரைகளில் பெரும்பாலானவை ரசிக மனப்பான்மையோடு எழுதப்பட்டவை என்பதாலும் நான் அம்முடிவிற்கு வருகிறேன். அதற்கு முன் அவ்வகையான கவிதைகளுக்கு பரிச்சயம் இல்லாத என்னை அவைகள் அவ்வாறு இயங்க வைத்தன. ஆர். அபிலாஷ் அவ்வாறு எங்கும் மனுஷை பார்க்கவில்லை. அவரே சொல்வது போல நுட்பமாக அணுகியுள்ளார்.
ஒரு கவிதையை எழுதி முடித்ததும் அக்கவிதையிலிருந்து எழுதிய கவிஞன் வெளியேறி விடுகிறான். பின்னர் ஏற்படுபவை எல்லாம் கவிதையின் அனுபவங்களே. நூலாசிரியர் மனுஷின் கவிதைகளில் அதன் ஆன்மாவை தேடிப்போகிறார். அதன் மூலம் மனுஷின் கவி மனக்கிடங்கை திறந்து பார்க்க முயல்கிறார். நூலின் ஒரு இடத்தில் அதற்கான உவமையை அழகாகக் கையாளுகிறார். அதை அவரின் மொழியில் படிப்பது நன்றாக இருக்கும். கவிஞராக, பேச்சாளராக, பதிப்பாசிரியராக, விமர்சகராக, பயணிப்பவராக இன்னும் பலதாய் இருப்பவராக எப்படி மனுஷால் இயங்க முடிகிறது என்பதற்கான ஒரு அழகான விளக்கம்.
மனுஷின் மன அமைப்பு சிறு சிறு அறைகளாக பகுக்கப்பட்ட ,அவற்றை இணைக்கிற ஊடுபாதைகள் கொண்ட ஒன்று என நினைக்கிறேன். ஒவ்வொன்றிலும் அவரால் இருக்க முடிகிறது. இவற்றின் அடையாளத்தில் எங்கோ கவிதைக்கான பாதாள அறை இருக்கிறது. சரியான / தேவையான நேரத்தில் அங்கு போய் இருந்து கொண்டு அவரால் தீவிரத்துடன் செயலாற்ற முடிகிறது. ஒரு கதவைத் திறந்து கொண்டு அறைக்குள் போவதைப்போல சுலபமாக அவரால் அந்த அறைக்குள் போக முடிகிறது என்பதை ஆச்சரியம். சமூக வலைதள அறை, காதல்களின் நட்புகளின் எளிய அலுப்பான அன்றாட உறவுகளின் அறை, அரசியல் அறை, செய்திகளின் சர்ச்சைகளின் வம்புகளின் அறை, கருத்துக்களின் அறை, அன்றாடங்களின் அறை என எங்கு நேரம் செலவிட்டாலும் தன்னை அங்கு அழித்துக் கொள்ளாமல் கவிதைக்கு மீண்டு வருகிறார். அது அவருடைய இயல்பு. அவரை ஒரே ஒரு அறையில் பூட்டி வைத்தால் போரடித்து செத்துவிடுவார். என்னால் இப்படி பத்து தலைகளுடன் இருக்க முடிவதில்லை. ஒருநாள் ஒன்றில் ஈடுபட்டால் அதில் மட்டுமே இருந்து அதிலேயே எறிந்து சாம்பலாகி விடுகிறேன். அதனால் நான் கவனமாக எழுத்தைத் தவிர பிற விஷயங்களில் உன்மத்தமாய் ஈடுபடாமல் இருக்க முயல்வேன். மனுஷ் இதற்கு நேர் எதிரான இயல்பு கொண்டவர். அவர் ஒரு ராவணன்.
தான் ஒரு படைப்பாளியாகவே இருந்தாலும் மனுஷை மிகுந்த கவனத்தோடு அதேசமயம் எதற்காக இந்நூல் எழுதப்படுகிறது என்ற அக்கறையோடு எழுதி இருக்கிறார். சரி நூலில் பேசி இருக்கும் முக்கியமான விஷயத்திற்கு வருவோம். இது முழுக்க முழுக்க மனுஷின் கவிதைகளை வெகுஜன பார்வையில் இருந்து விலக்கி அதன் மற்றொரு பரிமாணத்தை காட்டுவதற்கான திறப்பு. உதாரணமாக ‘கவிதையில் மிகைச் சொற்களின் அவசியம் – மனுஷ்யபுத்திரனை முன்வைத்து’ என்ற கட்டுரைக்கான கவிதையைக் கூறலாம்.
இந்த நகரத்தில்
நம் வழிகள்
ஒவ்வொரு நாளும்
வேறுவேறு இடங்களில் பிரிகின்றன
நமக்கிடையே மூடும் கதவுகள்
நமக்கிடையே வளரும் சுவர்கள்
நம் நீங்குதலின் நடுவில் மின்சார ரயில்
நமக்கு நாமே இல்லாமலாகும் அந்தியின் இருள்
நாம் அமர்ந்திருந்து எழுந்து வந்துவிட்ட
நிலங்களின் மீது
நிலவொளி இந்நேரம்
பெரும்தனிமையில் படர்ந்திருக்கும்
திரும்பும் வழியில்
நான் என் பொறுப்புகளை நினைத்துக் கொள்கிறேன்
நீ நிச்சயமற்ற உன் நாளையை நினைத்துக் கொள்கிறாய்
நம் வாழ்விடங்களுக்கு
அவரவர் வழியில் மீளும் துயரங்களெங்கும்
ஒரு சிறிய துயரம்
நம்முடன் ஒரு வார்த்தை பேசாமல்
மௌனமாக கூடவே நடந்து வருகிறது.
மனுஷ்ய புத்திரன் இக்கவிதையில், நாம், நமது, நமக்கானது என ஏன் சுட்டுப் பெயர்களை மீள மீள பயன்படுத்துகிறார் என்பதனையும்; அதனால் ஏற்படும் கவிதையின் ஓசைநயம், இசையொழுங்கு என ஒரு கவிதையை எவ்வாறு அலாதியாய் அணுகுவது என்பது பற்றியும் ஒரு அருமையான பாடம் எடுத்துள்ளார். இயல்பான ரசிக மனம் அதை காதலன், காதலியின் உளக்கிடக்கையாய் கடந்து போகச் சொல்லும். ஆனால் மனுஷின் உள்ளத்தை படித்த ஒரு உயர் வாசகனாலேயே அதன் அடுக்குகளை பிரித்து அதன் உட்பகுதியின் சுவைகளை ருசித்திடச் செய்ய முடியும். அவ்வகையில் இந்நூலில் இது ஒரு அற்புதமான கட்டுரை.
மொத்தத்தில் மனுஷின் கவிதைகளின் மீது ஆழ்ந்த அனுபவம் உள்ளோருக்கு விருப்பமான மற்றும் வேறோர் விதமான பார்வையாக இந்நூல் அமையும் என்பது என் எண்ணம்.
Comments