நாவலை எழுதிச் செல்லும்போது நாம் திறந்த மனத்தோடு இருப்பது அவசியம் என நேற்று ஒரு அத்தியாயத்தில் திருத்தமொன்றைச் செய்கையில் தோன்றியது. என் நாவலில் ஒரு பிரச்சினை தோன்றியது - சில பகுதிகள் ரொம்ப எதார்த்தமாக இருந்தன. அவற்றில் ஒன்றில் ஒரு சம்பவம் விவரிக்கப்படுகிறது. எனக்கு நேற்று அதைத் திருத்தும்போது அது உண்மைதான் என எனக்கு எப்படி நிச்சயமாகத் தெரியும் எனக் கேள்வி எழுந்தது. அது அப்பாத்திரம் சொல்வதே அன்றி அதை உண்மையென நான் எப்படி கேள்வியின்றி ஏற்றுக் கொள்கிறேன்? ஆகையால் அதை ஒரு கதையாகவே பார்க்கலாம் என முடிவெடுத்தேன். அது கதையெனில் அக்கதையை எழுதுவது யார், அதில் பாத்திரங்கள் யார் எனும் கேள்விகள் அடுத்து எழுந்தன. அக்கேள்விகளைப் பின் தொடர்ந்து கதையில் மாற்றமொன்றைச் செய்தேன். அது ஒரு மாயச்சரடைத் திறந்தது. அது கதைக்கு ஒரு புது வெளிச்சத்தையும் எழுத்தாளரான எனக்கு நிறைய சுதந்திரத்தையும் அளித்தது. ஒருவேளை என் நாவலின் கதைப் போக்கு இதுதான், மொழி இதுதான் என முடிவெடுத்து நான் பிடிவாதம் இருந்திருந்தால் கதைக்குள் இத்தகைய புதிய திறப்புகளை அனுமதித்திருக்க மாட்டேன்.
இதன் இழப்பு ஒன்று மட்டும்தான் - நேரம். நான் கதையின் துவக்கத்துக்குச் சென்று சில மாற்றங்களை அவ்வப்போது செய்ய நேரிடும். கதையின் பிற்பகுதியிலும் அதன் போக்கில் வருகிற வெவ்வேறு சாத்தியங்களையும் பரிசீலிக்க வேண்டும். இத்தகைய மாற்றங்கள் ஒரு அறையிலோ வீட்டிலோ புதிய கதவு ஒன்றை உருவாக்குவதைப் போன்றது. அப்புதிய கதவைப் பார்ப்பவர்கள் அவ்வழியே ஏன் போகக்கூடாது, அது எங்கேயெல்லாம் அழைத்துச் செல்லும் என யோசிப்பார்கள். கதைக்குள் ஒரு புது சாத்தியத்தை நாம் காட்டும்போது வாசகரின் மனமும் அவ்வாறே சிந்திக்கும் என்பதால் நாம் அதற்கான வேலைகளையும் பனுவலுக்குள் செய்ய வேண்டும். ஒரு கதவை உருவாக்கினால் அதற்கான பாதைகளையும் பின்னாளில் உருவாக்கிக் காட்டி விட வேண்டும்.
நாவலுக்கும் சிறுகதைக்குமான முக்கியமான வித்தியாசம் இது - சிறுகதையை மாற்றிமாற்றி எழுதும்போதெல்லாம் அது புது கதையாகிறது. நாவலுக்குள் அதைச் செய்கையிலோ அதனுள் புதிய சாத்தியங்கள் பிறக்கின்றன, புதிய அறைகளையும் ஊடுபாதைகளையும் ஒரு கட்டிடத்திற்குள் உருவாக்குவதைப் போன்றது அது.
நாவலை நாம் அதை எழுதும்போதே கண்டுபிடித்தபடி இருப்பதும் ஒருவித சுயபடிப்பினைதான். நான் ஒரு எழுத்தாளராக மலர்ந்து கொண்டே இருக்கிறோம் என அது உணர்த்துகிறது. நமது கண்டுபிடிப்புகள் ஒன்று நமது எழுதும் ஆற்றலை மேம்படுத்தி நமக்கான கதைமொழியை உருவாக்க உதவும் அல்லது நமது நேரத்தை வீணாக்கும். இந்த ரிஸ்கை கூட எடுக்காமல் எதற்கு எழுத வேண்டும்?
Comments