இதையெல்லாம் வெளியில் இருந்து சுதந்திரமாகப் பார்ப்பவன் எனும் முறையில் எனக்கு எப்போதுமே சினிமா விருதுகள், அவை மீதான சர்ச்சைகள் குறித்து ஒரு கேள்வி உண்டு - நமது சினிமா - அதாவது இந்தியா முழுக்கவும் எடுக்கப்படும் படங்கள் - பார்க்கத்தக்கவை தாமா?
இப்படங்கள் பார்வையாளர்களிடம் நேர்மையாக இருக்கின்றனவா? இல்லை. ஒரு படத்தை எடுப்பதைக் குறித்து வருடக்கணக்கில் யோசித்து உழைத்து உருவாக்குகிறார்களா? இல்லை. ஆழமான எண்ணங்கள், அறிதல் என்பவற்றை கூட விடுங்கள். தரமான பொழுதுபோக்கைக் கூட இவை தருவதில்லை.
எனக்கு 50, 60களில் எடுக்கப்பட்ட படங்கள் - என்னதான் பழமையான கருத்துக்களை, உணர்ச்சிகளைக் கொண்டிருந்தாலும் - தெளிவாகவும் நேர்த்தியாகவும் உருவாக்கப்பட்டவை என்றும், கடந்த அரை நூற்றாண்டாகவே நமது சினிமாக்கள் குப்பையாக மாறி வருவதாகத் தோன்றுகின்றன. தமக்கு அளிக்கப்படும் சம்பளம் குறித்த குறைந்தபட்ச பொறுப்போ அக்கறையோ இவர்களுக்கு இல்லை. நான் பௌதீகமான உழைப்பைச் சொல்லவில்லை. அறிவார்ந்த, படைப்பாக்கம் சார்ந்த உழைப்பு. நடிகர்கள் இன்னும் கேடுகெட்டவர்கள். அவர்களுக்கு நடிப்பைப் பற்றியே அக்கறை இல்லை. தயாரிப்பாளர்கள் சிலர் பேசுவதைக் கேட்டால் அவர்கள் வாழ்க்கையில் நல்ல சினிமா பார்க்கவோ நல்ல புத்தகங்கள் படிக்கவோ செய்திருக்க மாட்டார்கள், அவர்கள் செய்தித்தாள் கூடப் படிக்க மாட்டார்கள் எனத் தோன்றுகிறது. இவர்களுக்கு ஏன் விருதளிக்க வேண்டும்? அதற்குப் பதில் இவர்களை நியாயமாக வங்கக்கடலில் தூக்கிப் போட வேண்டும்.
நமது சினிமா என்பது ஒரு மிகப்பெரிய மசாஜ் பார்லர் மட்டும்தானே? மசாஜ் பார்லரும் ஒன்றும் மோசமான தொழில் அல்ல. ஆனால் அதை நடத்துகிறவர்கள் எங்காவது விருது கேட்கிறார்களா? அவர்களுக்கு உள்ள அடக்கம் ஏன் இவர்களுக்கு இல்லை? இவர்கள் ஏன் இப்படி தற்குறிகளாக இருக்க்கிறார்கள்?
அடுத்து, இங்கு எடுக்கப்படும் சோ கால்ட் எதார்த்தவாதப் படங்கள். அவை இன்னும் மோசம். அவற்றுக்கு என்று ஒரு அரசியல், கொள்கைப் பரப்பு நோக்கம் இருக்கும். நிறைய பாசாங்கு, பாவனை, கண்ணீர், உணர்ச்சிச் சுரண்டல். இதுதான் இன்றைய எதார்த்தப் படங்களின் கதை. இவை நம்மை யோசிக்க வைக்கவே செய்யாது. அழ வைக்கும், சிரிக்க வைக்கும். மலினமான இப்பணியைச் செய்துவிட்டு குரசாவோ கணக்கில் நம் இயக்குநர்கள் மாரைத் தட்டுவார்கள். இவர்களை எல்லாம் நாய் பிடிக்கும் கொக்கியால் பிடித்துக் கொண்டு போக வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அதைச் சொன்னால் கொடூரமாக இருக்கும் என்பதால் சொல்லவில்லை (இப்படிச் சொல்வது இன்னும் கொடூரம்தான்.).
கடைசியாக ஒரு கேள்வி - இந்தியாவில் எடுக்கப்படுவன சினிமாதானா? இல்லை. அவை புகழை உற்பத்தி செய்யும் சாதனங்கள். நடிகருக்கு புகழைக் கொடுப்பதற்காக சமைக்கப்பட்ட ஒரு பண்டம். மொத்த சினிமாத் துறையும் ஊடகங்களும் இதற்காகவே செயல்படுகின்றன. சினிமா நவீனமான பின் அது சினிமாவில் இருந்து வெளியேறி விளம்பர நிறுவனம் ஆகிவிட்டது நம் சினிமாக்கள் இரண்டு மணிநேர விளம்பரப் படங்கள் என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை. இந்த விளம்பரத்தை, புகழைப் பின்னர் ஊடகங்கள் - நட்சத்திரங்களை ஊதிப் பெருக்கி உற்பத்தி செய்த அதே ஊடகங்கள் - பயன்படுத்தி சம்பாதிக்கவே விருதுகளை உருவாக்கின. அடுத்து அரசாங்கங்கள் இந்தப் புகழைத் தம் மீதும் பாய்ச்சும் பொருட்டு அரசு விருதை உருவாக்கின. மற்றபடி இதற்கு என்ன உயர்ந்த நோக்கம் உள்ளதா?
மக்களிடம் புகழ் பெறாத, அதாவது மக்களை ஏமாற்றி பிரபலம் ஆகாத, எவருக்கும் அரசு விருது கொடுப்பதில்லை. அடுத்து, அரசு இந்த சோ கால்ட் கலைஞர்கள் தன்னை ஜால்ரா அடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. அவர்களும் அதை குறையின்றி செய்கிறார்கள். இல்லாவிட்டால் விருது கொடுக்க மாட்டார்கள். அதைத் தவரேன்று சொல்ல முடியாது. நம் சினிமாக்காரர்கள் அசல் கலைஞர்கள் அல்லர். அவர்கள் தொழிலே அரசுக்கும் முதலாளிகளுக்கும் மஸாஜ் பண்ணுவதுதான். நீங்கள் அசோகமித்திரனோ சு.ராவோ நகுலனோ அம்பானியிடம் பணம் வாங்கி அவரைப் பாராட்டி ஒரு நாவல் எழுதி, அதில் அவர் செய்த ஊழலை "ஒரே கனா" என்று உருகி உருகி நியாயப்படுத்திப் பார்க்க முடியாது. கட்சியில் இருக்கும் இலக்கிய எழுத்தாளர்களே கட்சி நாவலோ கட்சிக் கவிதையோ எழுதுவதில்லை. கட்டப்பஞ்சாயத்து, ரியல் ஏஸ்டேட் தாதாக்களிடம், கட்சிக்காரர்களிடம் கறுப்புப் பணத்தை வாங்கி அதை வைத்து நாவல் எழுதுவதோ பதிப்பகம் நடத்துவதோ வியாபாரம் பண்ணுவதோ இல்லை (ஓரிருவரைத் தவிர). ஆனால் சினிக்காரர்கள் இதையெல்லாம் கேட்காமலே செய்வார்கள். அதனால் எனக்கு ஏன் தரவில்லை என்று கேட்க முடியாது. கூலியாக தம்மை மாற்றிக் கொண்டவர்களுக்கு ஏது தகுதி?
ஆனால் வெகுஜன சினிமா சில நன்மைகளைச் செய்கிறது:
அது நம் மக்களைப் பைத்தியம் பிடிக்காமல் காப்பாற்றுகிறது. அது மது, தூக்க மருந்தை விட பெரிய வேலையைச் செய்கிறது. கொஞ்சம் அறிவும் நுண்ணுணர்வும் நிதானமும் படைத்தவர்களை அது பைத்தியம் பிடிக்க வைக்கிறது. ஆனால் இவையெல்லாம் இல்லாதவர்களைப் பைத்தியம் பிடிக்காமல் காப்பாற்றுகிறது.
அது ஏற்படுத்தும் எல்லாமே ஊதிப் பெருக்கப்பட்ட தன்மை - பிம்பங்களில், உணர்வுகளில், முகஙக்ளில், கருத்துக்களில் - பார்வையாளர்களை ஒரு குழந்தையைப் போல உணர வைக்கிறது. மெல்லமெல்ல பார்வையாளர்கள் ரசிகர்களாகி வளர்ந்தும் வளராத குழந்தைகளாக நீடிக்கிறார்கள். இத்தகையோர் சமூகத்துக்கு இணக்கமானவர்களாக, வெள்ளந்தியாக இருக்கிறார்கள். திரையங்கு தரும் அனுபவம் அவர்களுடைய பொது உளவியலை வெகுவாக மாற்றி விடுகிறது. ஏதோ நர்சரி குழந்தையைப் போல வாழ்நாளெல்லாம் நடந்து கொள்கிறார்கள். இதை நீங்கள் எந்த தீவிர ரசிகரிடமும் நுட்பமாக கவனிக்க முடியும்.
சினிமா நிச்சயமாக நம் குடும்ப அமைப்பைக் காப்பாற்றியது. இல்லாவிட்டால் சகலத்தையும் மூடிக்கொண்டு ஆண்கள் குடும்பத்துக்காக உழைத்துக் கொட்டியிருக்கவோ பெண்கள் அவர்களைச் சகித்திருக்கவோ மாட்டார்கள். வெகுஜனம் திரையில்தான் நீண்ட காலமாக குடும்பம் நடத்தியது. திரை இல்லாவிட்டால் எப்போதோ குடும்பத்தை உதறிவிட்டு ஓடியிருப்பார்கள்.
இதற்கு முன்பு சன்னியாசம் போவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. சினிமா வந்த பின் துறக்கும் மனநிலையும் போய் விட்டது. இருப்பவற்றையே துறக்க முடியும், இல்லாதவை இருப்பவற்றை விட இன்பம் அளிப்பவை என சினிமா மக்களுக்குக் கற்பித்தது. அதன்பின் காஷாயமே தேவைப்படவில்லை.
கடைசியாக, சினிமா நம் சமூகத்துக்கு ஒரு தேச உணர்வை அளிக்கிறது. ஒவ்வொரு மொழிக்கு ஒரு சினிமா என இருப்பதும், எல்லாருக்குமாக இந்தி சினிமா இருப்பதன் லாஜிக் இதுதான். சினிமாவுக்கு வெளியே தேசியத்தை உணர நமக்கு வாய்ப்புகள் இல்லை. நம் மக்கள் படிப்பதோ பெரிய அளவிலான அரசியல் நகர்வுகளைச் சிந்திப்பதோ இல்லை. சினிமா இத்தேசத்தைக் குறித்த ஒரு உருவகக் கதையை, நீதிக்கதையை நமக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறது. அது இல்லாவிட்டால் பெரும்பாலான மக்கள் வாக்களிக்க பூத்துக்குப் போக மாட்டார்கள்.
தமிழ் தேசியம், தெலுங்கு தேசியம், இந்தி தேசியம், சாதி தேசியம், மத தேசியம், அதிரடி வன்முறை தேசியம், முற்போக்கு தேசியம், கிளாமர் தேசியம் ... இப்படி சினிமா தேசியத்துக்கு குறிப்பிட்ட எல்லைகளோ குணங்களோ தேவையில்லை. அதனால்தான் ஒரு கிளாமர் நடிகை பிரச்சாரத்துக்கு வந்தால் அவளைப் போன்றவர்களின் உடலில் ஒருவித தேசியத்தைக் கண்டவர்கள் திரள்கிறார்கள். ஆக்ஷன் ஸ்டார் வந்தால் அங்கு அம்மாதிரி தேசியவாதிகள் திரள்கிறார்கள்.
அரசியல் பிரச்சாரம், மனநல மருத்துவம், தேசிய உணர்வு என்பதைத் தாண்டி சினிமாவில் சினிமா இல்லை. சினிமா என்பது சினிமாவைத் தாண்டிய பல்வேறு விசயங்களைச் சொல்வதற்கான பெயர். அம்மா என்பதைப் போல. பத்து வயதுப் பெண் குழந்தையைப் பார்த்தாலே வாம்மா என்று சொல்கிறோமே. அதைப் போல இதைப் பார்த்தால் சினிமா என்கிறோம். பிரச்சாரகர்கள், மருத்துவர்களுக்கு விருது கொடுப்பதைப் போல சினிமாக்காரர்களுக்கும் கொடுக்கிறோம். ஆனால் அவர்களைத் திரைகலைஞர்கள் என்று அழைப்பது ஊரே பார்த்து நடுங்கிய, தொண்டர்கள் தவழ்ந்து தவழ்ந்து போய் வணங்கிய, அமைச்சர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஜெயலலிதாவை அம்மா என்று அழைத்ததைப் போலத்தான். மிகப்பெரிய அவலம் இவர்கள் தாம் அழைக்கப்படும் பெயர் உண்மையென நம்புவதுதான்.
சினிமாவை இதற்கும் மேலான பயங்கரமான ஒன்றாக எடுத்துக் கொண்டு விழிப்பதில் இருந்து தூங்கும் வரை அதையே நினைத்திருக்கும் மக்களே அதிகம். அந்த அளவுக்கு நம் மக்களின் வாழ்க்கை பைத்தியம் பிடித்து தலையைப் பிய்க்கும்படி இருக்கிறது என நினைக்கிறேன். சினிமாப் பித்தை விட அதற்குப் பின்னிருக்கும் பெருந்துயரம்தான் வருத்ததை ஏற்படுத்துகிறது.
Comments