விஜய்டிவி குறும்பட போட்டியின்
போது “கற்றது தமிழ்” ராம் குறும்படம் எடுப்பது முழுநீளப் படம் எடுப்பதற்கான தகுதி அல்ல
என்று பேசி இளைய இயக்குநர்களை கசப்படைய வைத்தார். சமீபமாக அவர் குறும்படம் எடுத்து
முழுநீள வடிவிலும் வெற்றி பெற்ற “பீட்சா”, “சூது கவ்வும்” ஆகிய படங்களையும் சூழலை கெடுக்கும்
முயற்சிகள் என கண்டித்திருப்பதாக ஒரு நண்பர் என்னிடம் கவலை தெரிவித்தார்.
சில வாரங்கள் முன்பு ராம் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் பேசும் போது தமிழ் வாழ்வை சினிமா தமிழ் நவீன இலக்கியத்தை விடவும் இன்னும் ஆழமாக பிரதிபலிப்பதாக பேசி அதற்கு மனுஷ்யபுத்திரன் உள்ளிட்ட எழுத்தாளர்களிடம் இருந்து கண்டனங்களை பெற்றுக் கொண்டார். ராம்
ஏன் இப்படி தொடர்ந்து எதிர்மறையாக பேசுகிறார் என நாம் யோசிக்க வேண்டும்? அவரது
கருத்துக்களை அலசுவதை விட இது பயன் தரும்.
ராமை எனக்கு நண்பராக தனிப்பட்ட
முறையில் தெரியும். அவர் வலுவான கருத்துக்களை கொண்டவர். நல்ல இயக்கிய வாசிப்பும், சினிமா
பரிச்சயமும் கொண்டவர். ஒரு படைப்பாளியாக கற்பனையும் படைப்பூக்கமும் தனித்தன்மையையும்
கொண்டவர். அவரது “கற்றது தமிழ்” பல எழுத்தாளர்களையும் போல் என்னையும் கவர்ந்தது. தமிழ்
சினிமாவில் அது முக்கியமான படம் என இப்போதும் நம்புகிறேன். ஆனால் துரதிஷ்டவசமாக அப்படம்
தோல்வியுற்றது. ராமுக்கு அடுத்த படம் பண்ண ரொம்ப காலம் எடுத்தது. அந்த காத்திருப்பின்
வலியை அவர் “தங்கமீன்கள்” வெளியாகப் போகிற காலத்தில் பதிவு பண்ணினார். ராமுக்கு பின்
வந்த வெற்றிமாறன் ஒரு பிரபல இயக்குநராக நட்சத்திரமாக மாறி விட்டார். ராமை விட திறமை
குறைவான பலரும் இந்த இடைவெளியில் பல வெற்றிப் படங்களை தந்து விட்டார்கள். இது ராமுக்கு
மிகுந்த எரிச்சலையும் கசப்பையும் தந்திருக்கலாம். அந்த சூழலில் அவர் மட்டுமல்ல நம்மில்
யார் இருந்தாலும் அப்படித் தான் நடந்திருக்கும். குறும்படங்கள் மற்றும் சமீப காலத்தில்
வந்த சில சிறந்த படங்களை அவரால் அங்கீகரிக்க முடியாமைக்கும் இது ஒரு காரணமாக இருக்கலாம்.
அடுத்து இதை விட முக்கியமாக நாம்
கவனிக்க வேண்டிய ஒன்று உண்டு. ராம் எடுக்கிற, எடுக்க விரும்புகிற படங்களும் சமீபமாக
வெற்றிபெற்ற குறைந்த பஜ்ஜெட் பரிசோதனை படங்களும் இரண்டு துருவங்களை சேர்ந்தவை. தன்
கண் முன்னால் தமிழ் சினிமாவின் நிறம் மாறி வருவதை அவர் பார்க்கிறார். அறம், லட்சியங்களை
மறுக்கிற, irrevereant நகைச்சுவை கொண்ட, எல்லாவற்றையும் உல்டாவாக காட்டுகிற படங்கள்
இப்போது வெற்றி பெற்று நமது ரசனையை மாற்றி வருவதை அவன் உன்னிப்பாக கவனிக்கிறார்.
ராம் மற்றொரு தலைமுறையை சேர்ந்தவர்.
அவர் நாடகீயமாக மனிதனின் சீரழிவை இன்னொரு தளத்தில் சித்தரிப்பவர். விழுமியங்களின் வீழ்ச்சியை
சித்தரிக்கிற அவர் ஒருவிதத்தில் விழுமியங்களை நம்புபவரும் தான். ஆனால் தியாகராஜன் குமாரராஜா,
நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், போன்றவர்கள் சீரழிவுகளை வாழ்வின் இயல்பான பகுதியாக
பார்க்கிற ஏற்றுக் கொள்கிற நம் தலைமுறை. ராம் தன்னுடைய பாணியிலான கதைகூறல் மற்றும்
அணுகுமுறை இப்போது மாறி வருகிறதோ எனக்கு சின்னதாய் பதற்றம் கொள்கிறார். அல்லது “தங்கமீன்கள்”
நன்றாக ஓட வேண்டும் என்கிற நெருக்கடியில் அவர் இருக்கலாம். சமீபத்திய அவரது அறிக்கைகள்,
கருத்துக்கள் இதைக்காட்டும் அறிகுறி தான். மற்றபடி தட்டையாக முன்முடிவோடு பேசும் அளவுக்கு
அவர் தெளிவற்றவர் அல்ல.
பாலுமகேந்திராவின் “பிள்ளைகள்” என்றொரு வரிசை இருக்குமானால்
அதில் திறமை, அறிவு ஆகிய அடிப்படையில் ராம் தன் சிறந்தவர். இதை பலரும் ஏற்றுக் கொள்வார்கள்.
ஒரு வசீகரமான கதைசொல்லி அவர். அவரால் பல அற்புதமான படைப்புகளை தமிழுக்கு தர முடியும்.
ஒரு நல்ல படைப்பாளி தமிழில் தொடர்ந்து இயங்க வணிக வெற்றி அவசியம். ராமுக்கு அது இதுவரை
கிடைக்கவில்லை என்பது ஒரு துரதிஷ்டம். “கற்றது தமிழுக்கு” முன் அவர் “மேகம்” என்றொரு
திரைக்கதை வைத்திருந்தார். அதை படித்திருக்கிறேன். ஒரு பெண் மெல்ல மெல்ல மனதளவில் சீரழிவது
பற்றின அற்புதமான திரைக்கதை. சேரன் நடிக்கவிருந்து கைவிடப்பட்டது. அதே போன்ற மேலும்
சில புத்திசாலித்தனமான கதைகளை என்னிடம் சொல்லி இருக்கிறார். “கற்றது தமிழ்” வென்றிருந்தால்
அக்கதைகளை படமாக பார்க்கும் அதிர்ஷ்டம் நமக்கு இருந்திருக்கும். இதனிடையே ராமின் கால்வாசி
கூட திறமை இல்லாத எத்தனையோ பேர் பல வெற்றிப்படங்கள் கொடுத்தார்கள். சினிமாவில் இது
போல் நகைமுரண்கள் ஏராளம் என நினைக்கிறேன்.
தனிப்பட்ட வாழ்விலும் ராமுக்கு
நிறைய சிக்கல்கள் உண்டு. அதையெல்லாம் காட்டாமல் நிறைய தன்னம்பிக்கையோடு பேசுவார். அதுவும்
வானத்தை கிழித்துக் கொண்டு போகும். இன்று பேசும் போது தமிழில் படம் பண்ணப் போவதாக சொல்லுவார்.
மதியம் கேட்டால் பாலிவுட் போகப் போகிறேன் என்பார். மாலையானால் இல்லை ஹாலிவுட் தான்
சரி என்பார். சும்மா வெற்றுப் பேச்சு அல்ல. விரிவான திட்டங்கள் வைத்திருப்பார். பின்னர்
யோசித்த போது தமிழ் சினிமாவில் தாக்குப்பிடிக்க படைப்பாளிக்கு ஒரு அநாயசமான தன்னம்பிக்கை
அவசியம் என பட்டது.
தொடர்ந்து நீங்களே உங்களை ஊக்குவித்தபடி
இருக்க வேண்டும். நான் பார்த்த அன்று ராமுடன் உதவி இயக்குநர்களாக இருந்த பலர் இன்று
ஊரைப் பார்த்து நடை கட்டி விட்டார்கள். ராம் தன்னை யார் நம்பினாலும் இல்லாவிட்டாலும்
ஒரு ஆள் மட்டும் தன்னை ஆவேசமாக நம்பி உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் என அறிவார்:
அது அவரே தான். தொடர்ந்து உற்சாகமாக வேலை பார்ப்பார். அவர் ஒரு எழுத்தாளரும் கூட. ஆட்களை
வேலை வாங்குவதிலும் கரார் பேர்வழி. அத்தோடு கொஞ்சம் வாய்த்துடுக்கு, அரசியல், அக்காலத்தில்
சென்னை கிறுத்துவ கல்லூரி தமிழ் மாணவர்களுக்கு இருந்த தமிழ் தேசிய பற்று என ஒரு கலவை
அவர்.
“தங்க மீன்கள்” டிரெய்லர் பார்த்த
போது அது அவருக்கும் அவரது மகளுக்கும் இடையிலான உறவை பின்புலமாக கொண்டது என தோன்றியது.
அதில் சொல்வது போல் அவரும் சினிமாவுக்காக குடும்பத்தை மகளை பிரிந்து சென்னையில் போராடிக்
கொண்டிருப்பவர் தான். அப்படம் வெற்றி பெற்று இந்த போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு
வரட்டும்!
