சர்க்கரை உபாதைக்கு கணையம் பாதிப்பு ஒரு முக்கிய காரணம். ஆனால் இந்த தகவல் யுகத்தில் மிதமிஞ்சிய விழிப்புணர்வு கணைய சிதைவை விட அபாயகரமானது. நீரிழிவின் பாதக விளைவுகள் குறித்து ஏராளமான தகவல்கள் இன்று கிடைக்கின்றன. நீரிழிவு கால் பாதத்தில் இருந்து மூளை வரை பல்வேறு உறுப்புகளை பாதிக்கக் கூடியது குறி விறைப்பை கூட அது விட்டு வைப்பது இல்லையாம் ... சர்க்கரை உபாதையை கட்டுப்படுத்த அது குறித்த அறிவை விருத்திப்படுத்துவது நல்லதா? ஏனென்றால் எய்ட்ஸுக்கு அடுத்து வேறெந்த உடல் கோளாறையும்\ நோயையும் விட அதிக விழிப்புணர்வு பிரச்சாரம் நீரிழிவுக்கு தான் செய்யப்படுகிறது. நமது தலைமுறையினரில் உழைப்பாற்றல் மிக்க இளைஞர்களில் பலரை இக்கோளாறு மிக வேகமாக தாக்கி அழித்து வருவது இதற்கு ஒரு முக்கிய காரணம். அடுத்த காரணம், நீரிழிவாளர்கள் சாமியார்களை விட அதிக சுயகட்டுப்பாடுகளுடன் வாழ வேண்டியிருப்பது. நீரிழிவு பற்றி நாம் கேள்விப்படும் செய்திகளில் மிக சுவாரஸ்யமானது இது தான். தனது ரத்த சர்க்கரையின் அளவை நீரிழிவாளர் அடிக்கடி அறிந்து கொள்வது முக்கியம் என்று கருதப்படுகிறது. இதனை சுயமாக தெரிந்து கொள்ள Acucheck போன்ற கையளவு கிளைக்கோமீட்...