நான் படிக்கத் தொடங்கிய காலத்தில் சு.ராவின் மொழிநடை மீது பலரையும்போல எனக்கும் பெரும் மயக்கம் இருந்தது. பரந்து பட்டு நான் வாசிக்கத் தொடங்கியபோது சு.ராவைப் போன்ற பிற நடையாளர்களையும் கண்டேன். கருத்தாக்கம், கருத்தியல், தத்துவம், கோட்பாடு என என் வாசிப்பின் நாவு நீண்டு நீண்டு புதிய ருசிகளைக் கண்டது. ரெண்டாயிரத்தில் எனக்கு ஒரு புதிய எண்ணம் உண்டானது - இலக்கிய நடையில் உருவகங்கள் அதிகமாக வருவதால் கருத்துக்களைத் தெளிவாக, கூர்மையாகச் சொல்ல முடிவதில்லை, எதையும் நேராக தெளிவாகச் சொல்ல வேண்டும், அப்பட்டமாக எழுத வேண்டும், 'சொல்லலாம்', 'கூறப்படுகிறது' 'நினைக்கலாம்' எனும் கமறல்கள், நழுவல்கள் தேவையில்லை என்று நினைத்தேன். அதன் பிறகு விமர்சன வாசிப்பும் தத்துவமும் என் பிரக்ஞையில் அதிக இடம் பிடித்த காலம் வந்தது. எதையும் நேரடியாகச் சொல்லி அதன் காரண காரியங்களை விளக்கி, சான்றுகளைத் தொகுத்துச் சொல்லி ஒரு புதிய பார்வையுடன் முடிக்க வேண்டும் என நம்பினேன். முனைவர் பட்ட ஆய்வின் காலம் வந்தது. எதையும் புதிதாக எழுதும் முன்பு அதைக் குறித்து பிறர் என்ன சொல்லியிருக்கிறார்கள் எனத் தெரிந்து அதைத் தொகுத்...