எனக்கு வாழும் ஆசை இருக்குமளவுக்கு இப்போதெல்லாம் வாழாதிருக்கும் ஆசையும் சரிசமமாக இருக்கிறது - வாழாதிருப்பது குறித்த பயமும் இருக்கிறது. இது என்னை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்துகிறது. முன்பு எனக்கு நிறைய தெளிவும் நம்பிக்கையும் இருந்தது. அடுத்தடுத்து எதையாவது புதிதாகச் செய்யவும் என்னை மாற்றிக் கொள்ளவும் முடிந்தது. நான் என்னையே கண்டுபிடித்துக் கொண்டும் இருந்தேன். இப்போது எழுத்தில் தவிர வெளியே அது சாத்தியப்படுவதில்லை. வெளியுலகம் ஸ்தம்பித்ததைப் போலிருக்கிறது. அட, எனக்கு மட்டும்தான் என்றால் பலருக்கும் அப்படித்தான் இருக்கிறது. வாழும் இன்பம், எழுதும் இன்பம் எப்போதும் உள்ளதைப் போல இப்போதும் இருக்கிறது. ஆனால் எதுவோ ஒன்று விட்டுப் போனதைப் போல இருக்கிறது. அதனாலே ஒரு அசட்டு தைரியம். கண்ணில்லாதவர் அங்குமிங்கும் நடப்பதைப் போல. அண்மையில் ஒரு நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அங்கு அவரை ஒட்டி ஒரு பெரிய பிரச்சினை வெடித்திருந்தது. அவருக்கு அந்த வலியைப் பொறுக்க முடியாமல் உடல் முடியாது போய்விட்டது. எனக்கு அதைப் பார்க்கப் பொறாமையாக இருந்தது - என்னால் யாரை வைத்தும் பிரச்சினையை உண்டு பண்ண முடிவதில்லை. எனக்...