முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸோம்பியாதல்

 



எனக்கு வாழும் ஆசை இருக்குமளவுக்கு இப்போதெல்லாம் வாழாதிருக்கும் ஆசையும் சரிசமமாக இருக்கிறது - வாழாதிருப்பது குறித்த பயமும் இருக்கிறது. இது என்னை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

முன்பு எனக்கு நிறைய தெளிவும் நம்பிக்கையும் இருந்தது. அடுத்தடுத்து எதையாவது புதிதாகச் செய்யவும் என்னை மாற்றிக் கொள்ளவும் முடிந்தது. நான் என்னையே கண்டுபிடித்துக் கொண்டும் இருந்தேன். இப்போது எழுத்தில் தவிர வெளியே அது சாத்தியப்படுவதில்லை. வெளியுலகம் ஸ்தம்பித்ததைப் போலிருக்கிறது. அட, எனக்கு மட்டும்தான் என்றால் பலருக்கும் அப்படித்தான் இருக்கிறது.

வாழும் இன்பம், எழுதும் இன்பம் எப்போதும் உள்ளதைப் போல இப்போதும் இருக்கிறது. ஆனால் எதுவோ ஒன்று விட்டுப் போனதைப் போல இருக்கிறது. அதனாலே ஒரு அசட்டு தைரியம். கண்ணில்லாதவர் அங்குமிங்கும் நடப்பதைப் போல.

அண்மையில் ஒரு நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அங்கு அவரை ஒட்டி ஒரு பெரிய பிரச்சினை வெடித்திருந்தது. அவருக்கு அந்த வலியைப் பொறுக்க முடியாமல் உடல் முடியாது போய்விட்டது. எனக்கு அதைப் பார்க்கப் பொறாமையாக இருந்தது - என்னால் யாரை வைத்தும் பிரச்சினையை உண்டு பண்ண முடிவதில்லை. எனக்காக யாரும் பிரச்சினை பண்ணுவதும் இல்லை. நான் என்ன சொன்னாலும் யாருக்கும் புரியாத ஊர் இது. அவர்கள் என்ன சொன்னாலும் எனக்குப் புரியாத ஊர் இது. ஆகையால் நான் என்ன செய்ய நினைத்தாலும் அது முடியாது. எனக்கு எதுவும் நடக்காது என்பதே ஒரு வினோத உணர்வாக இருக்கிறது. பெங்களூரில் கூட நான் சண்டை போட்டிருக்கிறேன், அன்பைக் காட்டியிருக்கிறேன், வெறுத்திருக்கிறேன், சமாதானமாகி இருக்கிறேன். பெங்களூரே ஒரு அந்நியமான நகரம்தான். ஆனால் அங்கும் கொஞ்சம் சலசலப்பு, அசைவுகள், திருப்பங்கள் இருக்கும். இந்த ஊரில் "நர்ஸ்" என்றால், கவுண்டமணி காமிடியில் வருவதைப் போல, "பர்ஸா" என்று மட்டும் கேட்பார்கள். "அடேய் காதாடா இது, எது எதுக்கு வச்சிருக்கே" என்றால் "நர்ஸா ஹி ஹி" என்பார்கள். இரவு ஏழு மணியானால் கடைகளை சாத்திக் கொண்டு போய் விடுகிறார்கள். அட எங்கே போகிறார்கள், என்ன செய்கிறார்கள் எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைகளாவது பரவாயில்லை, வீடுகள் எல்லாம் 6 மணிக்கே விளக்கணைத்து தூங்கி விடுகிறார்கள். காலையில் ஒன்பது மணிக்கு கடையில் அமர்ந்து டீ குடிக்கிறார்கள், காய்கறி வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருகிறார்கள். யார்ரார் நீங்கல்லாம்? இந்த ஊரின் காலமே மின்கலன் தீர்ந்து போன கடிகாரம் தன்னிஷ்டத்துக்கு நேரம் காட்டி ஓடுவதைப் போல இருக்கிறது. மிகவும் அந்நியப்பட்ட ஜனங்கள் வாழும் ஊர் இது - போன மாதம் மக்கள் கூடி நிற்பதைப் பார்த்தேன். ரொம்ப அமைதியாக குசுகுசுவென பேசிக் கொண்டிருந்தார்கள். நான் நெருங்கியதும் கப்சிப் அமைதி. ஒரு விபத்து போல. ஒருவர் பைக் அருகே நின்று தன் தலைக்கவசத்தைப் பொருத்திக் கொண்டிருந்தார். நான் அங்கு நின்றனவர்களிடம் என்ன நடந்தது என்றேன். என்னவோ நடந்திருக்கிறது என்று அமைதியாகச் சொன்னார். அடிபட்டவரின் முகத்திலோ கலவரம் இல்லை, வருத்தம் இல்லை. ஒரு ஜென் துறவியைப் போல தன் பைக்கைப் பார்ப்பதும் தலைக்கவசத்தைத் தொடுவதுமாக இருந்தார். இந்த ஊரில் டினோசர்கள் ஓடி வந்தால்கூட ஏதோ கோயில் தேரா அல்லது தசரா ஊர்வலமா என்பதாக அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். டினோசர் ரெண்டு பேரைத் தூக்கிப் போட்டுப் பிடித்து முறுமுறுவெனக் கடித்தால் கூட "வாவ்" என்று கைதட்டிக் கொண்டு அசையாமல் நிற்பார்கள். வெண்டைக்காயை தண்ணீர் சேர்த்து வதக்கியதைப் போல பிசுபிசுவென்ற மனிதர்கள். இங்குள்ள மதுக்கூடங்களில் சரக்கடித்து லேசாகத் தள்ளாடிப் போவோர் கூட சத்தமாகப் பேசியோ பாடியோ கோபப்பட்டோ நான் கண்டதில்லை. இந்த ஊர் மக்கள் என்னைவிட பயங்கர அந்நியமாக இருப்பதால் எனக்கே பயங்கரமாக இருக்கிறது.

பேசாமல் உ.பியிலோ மத்திய பிரதேசத்திலோ பீகாரிலோ பிறந்து இந்தி எழுத்தாளராக இருந்திருக்கலாம். அமேசான் காட்டுக்குப் போனாலும் அங்கு ஒருவர் திவிரமாக பேல்பூரி சாப்பிட்டு கசகவென இந்தி பேசிக் கொண்டிருந்திருப்பார். இந்திக்காரர்கள் இல்லாத அங்குல இடம் கூட இப்புமியில் இருக்க முடியாது. நான் மைசூர் வந்தபிறகு கன்னடத்தைவிட அதிகமாகக் கேட்பது இந்திதான். இதை மைசூர் என்பதைவிட இந்தூர் என்பதே பொருத்தமாக இருக்கும் ஏனென்றால் கன்னடர்கள் பேசுவதில் நம்பிக்கை இழந்தவர்கள், இந்திக்காரர்கள் பேசாதிருப்பதில் நம்பிக்கை இழந்தவர்கள். அது மட்டுமல்ல, ஆந்திரக்காரரகள், கன்னடர்கள், மலையாளிகள் சட்டென ஓரிடத்தில் சந்தித்தால் முதுகுக்குப் பின்னிருந்து அருவா உருவுவதைப் போல இந்தியை உருவிக் காட்டுகிறார்கள். சட்டெனப் பேசத் தொடங்குகிறார்கள். இந்திக்காரர்கள் என்றால் தொலைதூரத்தில் இருந்தே எந்திரத்துப்பாக்கியாக இந்தியைச் சுட்டுக் கொண்டே வருகிறார்கள். இந்தி பெல்ட் என்று சொல்வதெல்லாம் சும்மா - தமிழ்நாட்டைத் தவிர உலகம் முழுக்க இந்தி பெல்ட்தான். அமெரிக்காவில் கூட டிரம்பை எதிர்த்து இந்திக்காரர்கள் நின்றால் ஜெயித்து விடுவார்கள். இந்தி என்பது ஒரு மொழியல்ல, எதைப் பற்றியும் யோசிக்காமல் எதையும் புரிந்துகொள்ளாமல் ஒரு பெரிய டாங்கர் லாரி உருண்டு செல்வதைப் போன்ற வாழ்க்கை முறை. அதனால்தான் தேர்வுத்தாள் கசிவு என்றதும் வாழ்க்கையில் தேர்வே எழுதாதவர்கள் கூட சட்டெனத் திரண்டு தலைநகரை ஸ்தம்பிக்க வைக்கிறார்கள். நாம் என்ன, ஏது என விசாரிக்கும் முன்பு அவர்கள் பத்து ஜீப்பைப் புரட்டிப் போட்டுவிட்டு சாலையில் குதித்தும் ஆடியும் ரீல்ஸ் போட்டும் முடித்திருப்பார்கள். சர்வதேச ஊடகங்கள் முழுக்க அவர்களே ஆக்கிரமித்திருப்பார்கள். அவர்கள் மோடியைத் திட்டுவதும், அவர்களை மோடி திட்டுவதும் பாராட்டிக் கொஞ்சுவதைப் போலவே இருக்கும். யார் என்ன என்பதற்குள் நடந்து முடிந்திருக்கும். "நீட் ஒழிக" என்பதை ஏதோ ஜோக் என்பதாகப் பார்த்து தமக்குள் சிரிப்பார்கள். எந்த நாட்டில் வாழ்கிறீர்கள் என்று நாம் அவர்களிடமும் அவர்கள் நம்மிடமும் கேட்டுக் கொள்வோம். மைசூர்காரர்கள் அப்போதும் மெதுவாக எழுந்து ஐந்து மெதுவடைகளை காபியுடன் சாப்பிட்டுவிட்டு சீக்கிரமாகத் தூங்கிக் கொண்டிருப்பார்கள்.

எனக்கு வாசு முருகவேலின் நாவல்களைப் படிக்கையில் அவரது அகதிகள் உணரவதும் நான் உணர்வதும் வேறுவேறல்ல என்று தோன்றும் - அருகில் உள்ள கேரளாவுக்குப் போனால் கூட நான் இப்படி உணர்ந்ததில்லை. தில்லி, கொல்கொத்தா போனபோது கூட அவை என் நாடுதான் எனத் தொன்றியிருக்கிறது. நாம் அவர்கள் மொழியைப் பேசாவிட்டாலும் ஒரு சிநேகம் இருக்கும் - இந்த ஊரில் எதைக் கேட்டாலும் ஒரு முறை முறைப்பார்கள். அதில் என்னென்னமோ தொனிக்கும். நான் இங்கு வந்து 9 ஆண்டுகள் ஆகின்றன: ஆனால் ஒருநாளும் இவர்கள் என் மக்கள் எனத் தோன்றியதில்லை. நான் வங்கதேசம், நேபாள போயிருந்தால் கூட இந்தளவுக்கு அகதியாக உணர்ந்திருக்க மாட்டேன். எதாவது பிரச்சினை வந்தால் புரியாத மொழியில் திட்டுவார்களே, நீ விரோத மொழிக்காரன் என்று திரண்டு விடுவார்களே என அஞ்சி பதுங்கிப் பதுங்கிப் போய்க் கொண்டிருக்கிறேன். இதனால் வேலையையும் எழுத்தையும் தவிர என் புறவாழ்க்கை ஸ்தம்பித்து விட்டது. வகுப்புக்கு வெளியே தமிழை விடுங்கள் ஆங்கிலமே கூட என்னால் பேச முடியவில்லை. இதனால் நான் பேசுவதே இல்லை. வகுப்பு முடிந்ததும் வீட்டுக்கு வந்தால் தமிழில் பேசிவிட்டுத் தூங்கப் போவதுதான். பெங்களூரிலாவது நான் காலை 9 மணி முதல் இரவு 9 வரை ஆங்கிலத்தில் பேசிக் கொண்டே இருப்பேன். இந்த ஊரில் "when will the shop open?" என்று கேட்டால் தூய கன்னடத்தில் பத்ல் சொல்கிறார்கள். அதில் கூட ஷாப் எனும் வார்த்தை வருவதில்லை. வெள்ளைக்காரன் 200 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட ஊர்தானே இது? ஆர்.கெ நாராயணன் வாழ்ந்த ஊர்தானே இது? கல்லூரி படித்து கடையில் நிற்கும் பயன்கள் கூட "இந்த போன் என்ன விலை" என்று ஆங்கிலத்தில் கேட்டால் தூக்கில் தொங்குபவனின் உள்ளங்காலில் கிச்சுக்கிச்சு மூட்டுவதைப் போல எதையோ சொல்கிறார்கள். புரியும்படியாகப் பேசுங்கள் என்று கேட்கலாம் தான் - உடனே ஒரு அகதி உணர்வு வந்துவிடுகிறது. நான் இந்திக்காரனாகப் பிறந்திருந்தால் இவ்வளவு அந்நியமாகி இருக்க மாட்டேன்.

இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த தமிழர்கள் இன்னும் விரோதமாக இருக்கிறார்கள். "நாங்க தமிழ்தான், ஆனால் தமிழ் இல்ல. நீங்களும் தமிழ்ல பேசாதீங்க" என்கிறார்கள். பாகிஸ்தானியராக இருந்தால் கூட மன்னித்து விடுவார்கள். தமிழை மன்னிக்க மாட்டார்கள். இங்கு கடை போட்டிருக்கும் மலையாளிகளிடமும் "எதாவது சத்தமாகச் சொன்னால் துரத்தி விடுவார்களோ" எனும் பயம் உள்ளதைப் பார்த்தேன். மீன்கடைக்கார மலையாளிகள் போலீஸ்காரர்கள் வந்தாலே பையில் மீன்களைப் போட்டு இலவசமாகக் கொடுத்து அனுப்புகிறார்கள். தெலுங்குப் பேசுவோர்தாம் எந்தவித அநிய உணர்வு இன்றி இரு மொழிகளிலும் புழங்குகிறார்கள்.

இதெல்லாம் சேர்ந்து இது என் உலகம் இல்லை, இது என் வாழ்வு இல்லை, ஏதோ எனக்கே சம்மந்தமில்லாமல் வாழ்கிறேன் எனும் உணர்வு வலுக்கிறது. இறந்த மீன்களின் கண்களில் ஒரு கண்ணாடித்தன்மை வருமே அது என் விழிகளிலும் வந்து விட்டது.

முன்பு என் வாழ்வில் நிறைய பிரச்சினைகளும் கவலைகளும் இருந்தன. ஆனால் அப்போது இது என் வாழ்க்கை எனும் பிடிப்பும் இருந்தது. இப்போது அந்தளவுக்குப் பிரச்சினைகளும் கவலைகளும் இல்லை. இது என் வாழ்வு இல்லை எனும் உணர்வு வந்துவிட்டது.

ஆனால் பாருங்கள் - இது வயது, மனநிலை, மன-அழுத்தம் சம்மந்தப்பட்ட ஒரு பிரச்சினை என்று நினைக்கத்தான் எனக்கும் ஆசை. அது முழுக்க உண்மையல்ல. தமிழ்நாட்டிற்கு வரும்போது, இலக்கியக் கூட்டங்களில், வாசகர்களை நண்பர்களைக் காணும்போது "இது என் உலகம்தான், இது என் வாழ்க்கைதான்" எனும் உணர்வு மேலிடுகிறது. கிளம்பி இங்கே வந்ததும் அது சட்டென அணைந்துவிடுகிறது. ஒருவேளை இது என்னை நானே ஏமாற்றுவதற்காக உருவாக்கும் கற்பனையே என நினைப்பதுண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் இது தவறாமல் நடக்கிறது. கர்நாடக எல்லைக்குள் வந்ததும் இது என் வாழ்வு அல்ல எனும் நம்பிக்கைத் தவறாமல் வருகிறது. அதனால்தான் என் வாழ்வில் நடந்த அத்தனைத் துன்பங்களுக்கும் இந்த ஊர் எல்லைக்கும் ஏர்தோ தொடர்புள்ளதென்று தோன்றுகிறது.

சரி இங்கிருந்து தப்பிக்கலாம் என்றால் எதுவும் அமைவதில்லை.

ஒருவேளை நான் மேலே சொன்னவை என் சுய-சமாதானத் தர்க்கமாக இருக்கலாம். என் வயதின், மனகசப்பின் விளைவாக நான் முழுமையாக விடுபட்டு நிராசையாகப் பேசுகிறேனாவாக இருக்கலாம்.

ஒரு விசயத்தில் மட்டும் நான் கொடுத்து வைத்தவன் என்று தோன்றும் - எழுத்தாளராக மட்டும் இல்லாவிடில் நான் முழுமையாக ஸ்தம்பித்துப் போயிருப்பேன். எதாவது ஒரு குன்றின் மீதிருந்து குதித்து இறந்து போயிருப்பேன். இன்னும் எழுதி முடிக்க வேண்டிய நாவல்கள் மட்டுமே என்னைக் காப்பாற்றுகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.