மக்களாட்சியில் ஒரு நிலைகுலைவு - தேர்தல் மோசடி, வாக்கு எந்திர மோசடி, சினிமாக்காரர்களை வைத்து அரசியலைக் கைப்பற்றும் லாட்டரித் தொழிலதிபர் மோசடி - வரும்போது கிடைக்கிற ஊடகங்களைப் பயன்படுத்தி மக்கள் அரசியல் பேசுவது நல்லது - அதனால் மக்களுக்கு நேரடியாகப் பணம் வரப் போவதில்லை. மக்கள் அரசியல்வாதிகள் அல்லர். அரசியல் அவர்களுக்குத் தொழில் அல்ல. ஆனாலும் அரசியல் அவர்களுடைய வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கிறது. உதாரணமாக, ஒரு அரசாக நீங்கள் அமெரிக்க சார்பா, ரஷ்ய சார்பா என்பது உங்கள் நாட்டின் எண்ணெய் இறக்குமதியை பாதிக்கும். அது பொருளாதார நெருக்கடிக்கு, விலைவாசி உயர்வுக்கு இட்டுச் செல்லும். அண்மையில் நாட்டின் பிரதமரே இதை ஒப்புக் கொண்டார். மக்கள் மட்டும் அரசியல் பேசாமல் தம் போக்கு இருந்தால் அவர்கள் வேறு நாட்டுக்குத்தான் குடிபெயர வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாதபோது மக்கள் பேசியே ஆக வேண்டும். மக்களாட்சி ஒழுங்காக நடக்கும்போது மட்டுமே மக்களால் - பொழுதுபோக்கு, படைப்பாக்கம், வாசிப்பு என - கொஞ்சம் சுயநலமாக இருக்க ஈயலும். சினிமா அரசியலுக்குள் வரும்போதெல்லாம் சாக்கடை நம் தண்ணீரில் கலக்கிறது, பின்வாசல் வழியாக பொரு...