நூலக ஊழல் அம்பலப்பட்டதும் நான் முதலில் அந்த அம்பலப்படுத்தலை ஆதரித்தேன். ஆனால் போகப்போக அது அறிவுச் சமூகத்துக்கு எதிரான ஆளுங்கட்சியின் பிரச்சாரம் எனத் தெளிவானது. திமுகவின் குறியீடுகளாகக் கருதப்படும் நூலகம், புத்தகங்கள், பண்பாடு ஆகியவற்றை மதிப்பிழக்கச் செய்ய அமைச்சர் ராஜ்மோகனும் ரூப் மாபியாவும் இதைப் பயன்படுத்துகிறார்கள் என விளங்கியது. இந்நோக்கத்திலேயே இப்பிரச்சினை கிளப்பப்பட்டதோ என்று கூட ஐயம் ஏற்பட்டது. அப்போதே நான் இதை எதிர்க்க வேண்டிய அவசியம் உள்ளதைப் புரிந்துகொண்டேன்.
இப்போது தம்மிடம் கொள்முதல் பண்ணிய நூல்களை அரசு திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி பதிப்பாளர்களிடம் கேட்டுள்ளது. எதிர் பதிப்பகம், ஜீரோ டிகிரி உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு கவலையுடன் பதிவெழுதி வருகிறார்கள். இப்பதிப்பகங்கள் மோசடி நூல்களைப் பதிப்பிப்பினவா? நூல்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளக் கேட்பதன் வழியாக அரசு அவர்களையும் அகல் பதிப்பகப் பட்டியில் அடைக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். நூலக எதிர்ப்பு ஒரு பண்பாட்டு எதிர்ப்பாக மாறியதன் விளைவை நடைமுறையில் மக்கள் அனுபவிக்க ஆரம்பித்து விட்டார்கள். நான் திமுகவைக் காப்பாற்ற இந்த ஊழல் அம்பலப்படுத்தல் எனும் பிரச்சாரத்தை எதிர்க்கவில்லை. நான் இலக்கியம், பண்பாடு, நூலகங்கள் மீதான இத்தாக்குதலைத் தடுக்கவே இதை எதிர்க்கிறேன்.
இந்த விமர்சனத்தை நீர்த்துப் போக வைக்க சிறந்த வழி இதை தவெக vs திமுக என மடை மாற்றுவது. யார் இந்தப் பிரச்சாரத்தை விமர்சித்தாலும் அவர்களை திமுக உடன்பிறப்புகள் எனச் சித்தரிப்பது. இந்த விஷமத்தனத்தின் பின்னுள்ள நோக்கம் தமிழ்நாட்டை முழுமையாக ஒரு தற்குறி மாநிலமாக மாற்றுவதே. சில எழுத்தாளர்களே இதைப் புரிந்துகொள்ளாமல் நூலகங்களைக் காப்பாற்றுவதாகக் கூறி அதை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்குத் துணை போவதைப் பார்க்க வருத்தமாக உள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பதிப்பாளர்களுக்கு அவர்கள் எப்படி ஆறுதல் சொல்வார்கள்?

கருத்துகள்