முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு ஏன் க்யானேஷ் குமாருக்கு எதிராகப் பொங்குவதில்லை?

 In Photos | Jantar Mantar Teems With Activity Day After Delhi Police Action  Against Historic Protest - The Wire

சினிமா போதையின் பிரச்சினைகளைப் பற்றி தமிழ்நாட்டு எழுத்தாளர்களே தொடர்ந்து அழுது புலம்பி சபித்து சமாதானமாகி இருக்கிறார்கள் இதுவரை. ஆனால் இப்போது முதன்முறையாக வெகுமக்கள் இடையில் சினிமா வெறியர்கள் அரசியல்மயமாவதற்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. குறிப்பாக 40-70 வயதுக்கு உட்பட்டோர் பேசுவதைக் கேட்டால் புரியும். அரசியல் நோக்கர்களும் இதனால் கசப்படைகிறார்கள். தமிழ்நாட்டினர் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டனர் என திருப்பூர் குணாவும், ஜீவாவும், ஆர்.கே. சண்முகவேலும் சேர்ந்து ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்கள் ("டிஜிட்டல் போதையில் நாம் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை"). அவர்கள் சமூகவலைதளச் செயல்பாடுகளும் தரவுப் பகுப்பாய்வுத் தொழில்நுட்பமும் விஜய்யின் வெற்றிக்கு எப்படிப் பயன்பெற்றன என்றே பிரதானமாகப் பேசினாலும் விஜய்யின் சினிமாப் புகழ் அவரை வைத்து நடந்த டிஜிட்டல் பிரச்சாரத்துக்கு அடிப்படை என்பதை அவர்கள் மறுக்கவில்லை. கடந்த தேர்தலின் போதிருந்தே 'தற்குறி' எனும் சொல் இதற்கென மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுவதையும் பார்க்கிறோம். 'தற்குறி' சினிமா ரசிக மனநிலை, சினிமா மந்தைத்தனம் ஆகியவற்றைப் பொதுவாகப் பாவிக்காமல் இருக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சொல் என்று நான் எடுத்துக் கொள்கிறேன். இந்த சினிமா போதையும் அது ஏற்படுத்திய கவனச்சிதறலும் எந்தளவுக்கு இருந்திருக்கிறது என்றால் அது ஏற்படுத்திய மயக்கத்தில் நம்மில் பலரும் அப்போதைய ஆளுங்கட்சியும் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் பெயரில் கோடிக்கணக்கானோரை தேர்தல் ஆணையம் நீக்கி தவெகவின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்ததையே கவனிக்கவில்லை.

இப்போது இந்தப் பின்னணியில்தான் க்யானேஷ் குமாருக்கு எதிராக தேசம் முழுக்க கிளம்பியுள்ள இளைஞர் போராட்டங்களும் காங்கிரஸ் கட்சியின் போராட்டங்களும் தமிழ்நாட்டில் எச்சலனத்தையும் ஏற்படுத்தாததைக் குறித்து பலரும் புலம்புகிறார்கள். ஆனால் இங்கும் சினிமா போதையை அவர்கள் காரணமாக முன்வைப்பது சரியல்ல. அது ஒரு கவனம் திருப்பும் சிக்கல் மட்டுமே. நாம் கேட்க வேண்டிய கேள்வி தமிழர்கள் ஏன் க்யானேஷ் குமாரைக் குறித்துக் கவலைப்பட வேண்டும் என்பதே.

தமிழ்நாட்டில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த போராட்டங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட தமிழ்தேசிய முகாந்திரம் கொண்டவை. தமிழ்நாட்டை அந்நியர்கள் சூறையாடுகிறார்கள், இறையாண்மையை, சுதந்திரத்தைப் பறிக்கிறார்கள் எனும் போதே மக்கள் தெருவுக்கு வந்து குரலெழுப்புகிறார்கள். தேசியப் பிரச்சினைகள் நம்மை அசைப்பதே இல்லை. ஏனென்றால் இந்தியாவுடன் முழுமையாகப் பிணைந்திருப்பதான, இந்தியத் தேசத்தவர் நாம் எனும் உணர்வே மக்களுக்கு இல்லை. தமிழ் தேசியவாதத்துக்கு அடுத்தபடியாக எல்லையோர மாநிலங்களாக இருப்பதன் பிரச்சினையாகவும் இது இருக்கலாம். அதேநேரம், க்யானேஷ் குமாரால் தமிழ்நாட்டு வாக்காளர்களில் ஒரு கோடி பேர்களுக்கு மேல் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும்தானே உண்மை. ஆனால் திமுகவோ காங்கிரஸோ பிறரோ இதை எப்படியான சட்டகத்தில் வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதில் தவறு செய்கிறார்கள். தமிழ்நாட்டில் இதை ஒரு பிரச்சினையாக்க இதை ஒரு மாநில உரிமைப் பிரச்சினையாக்க வேண்டும். வாக்குகளையும் மாநில உரிமையையும் ஒன்றாகப் பாவித்துப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். முழக்கங்கள் அதற்கு ஏற்ப திட்டமிடப்பட வேண்டும். மேலும் இங்கு எந்தக் கட்சியும் க்யானேஷ் குமார், பாஜகவை இலக்காக்கிப் போராடுவதால் தற்போதைக்கு லாபமிருப்பதாகக் கருதவில்லை. ஆனால் அதற்கான சாத்தியம் பிரகாசமாக உள்ளது - தவெகவைப் பயன்படுத்தி க்யானேஷ் குமாரும் மோடியுமாகத் தமிழ்நாட்டு வாக்காளர்களின் உரிமைகளைப் பறித்தார்கள், அதைக் கொண்டு விஜய்யை ஆட்சியில் அமர்த்தி மேலும் பல உரிமைகளைப் பறிக்கிறார்கள் என அவர்களால் பேச முடியும். எனக்கென்னவோ அவர்கள் விஜய்யுடன் மோதியே, இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டே களைத்துப் போயிருக்கிறார்கள், அவர்கள் போராட்டக் களத்துக்கு வரும் முன்பு போராட்டங்களே முடிந்துவிடும் எனத் தோன்றுகிறது.

ஆகையால் இங்கு ஏன் மக்கள் போராடவில்லை எனக் கேட்காமல் இருப்பது நலம். இங்கு அதற்கான அரசியல் பண்பாட்டு வரலாறோ சூழலோ கட்சி அரசியலோ இதுவரையிலும் இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...