எங்கள் கல்லூரியில் மாலை வேளை நடக்கும் எலெக்டிவ் வகுப்பில் நான் இரண்டாம் வருடமாக நாவல் எழுதும் கலையை கற்பிக்கிறேன். கடந்த வருடம் 17 மாணவர்கள். இவ்வருடம் 45ஆக உயர்ந்து விட்டது. பெரிய வகுப்புகளின் சௌகரியங்கள் 45இல் ஐந்து பேராவது ஒரு நாவலை அரை கல்வியாண்டுக்குள் முடித்து விடுவார்கள் என்பது. கடந்த முறை ஒருவரே முடித்தார். இந்த முறை 12 அத்தியாயங்கள், அத்தியாயத்துக்கு 5-7 பக்கங்கள் என ஒரு இலக்கை கொடுத்திருக்கிறேன். ஆகையால் இம்முறை நாவலை எழுதி முடிப்பது சற்று சுலபமாக அமையும் என கணிக்கிறேன். மாணவர்களை தினமும் நாவலை எழுத வைப்பதே என் பிரதான நோக்கம். ஏனென்றால் இத்தகைய வகுப்புகளுக்கு வருவோருக்கு அதுவே பெரும் சவால் - அவர்களால் எழுத முடியும், அவர்களுக்கு மொழித்திறனும், வாசிப்பும் உண்டு, ஆனால் தினம் தினம் ஒரே புத்தகத்தில் வேலை செய்வது கடினம். அந்த பயிற்சியை எப்படியாவது கொடுத்து விட வேண்டும். இன்றைய முதல் வகுப்பில் அதை பற்றியே முக்கியமாக பேசினேன். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நாவல் உண்டு, அது எழுதப்படாமலே பல சமயம் போய் டுகிறது என்பது என் நம்பிக்கை. அது இலக்கிய நாவலோ, வெகுஜன நாவலோ, எளிய துப்பறியும் நாவலோ...