இங்கு நாம் கதராடையின் தனியாளுமை பற்றியும் பேச வேண்டும். அந்நிய ஆடையே மேன்மை என நம்பப்பட்ட காலத்தில் காந்தி உள்ளூர் கதராடையை நெய்வதை, அதை வாங்குவதை, அணிவதை அரசியலாக்கினார். கதர் என்பது பிரிட்டீஷ் அரசின் அரசியல் சரிநிலை மீதான பெரிய தாக்குதலாக மாறியது. எது இயல்பானது என பிரிட்டீஷார் நம்மை நம்ப வைத்தனரோ அதையே இயல்பற்றது என காந்தி நமக்குப் புரிய வைத்தார். வெள்ளையர்கள் உடம்பை முழுக்க மறைப்பதே நாகரிகம் என (விக்டோரிய ஒழுக்கவியலின் அடிப்படையில்) நம்பினால் தன்னை மிகக்குறைவாக மறைப்பதே எளிமை என காந்தி எதிர்-அரசியலை முன்னெடுத்தார். இந்த குறியீட்டுத் தாக்குதல் மெல்ல மெல்ல இந்தியாவில் “கால் மேல் காலிட்டு அமர்ந்திருந்த” பிடிட்டீஷ் சாம்ராஜ்ஜியத்தை உருக்குலைத்தது.
ஆனால் சுதந்திரத்துக்குப் பிறகு கதராடை, குறிப்பாக அரசியல்வாதிகளின் வெள்ளை ஆடை, எந்திரமயமான இந்திய சமூகத்தில் மத்திய வர்க்கத்தின் ஆடைக்கலாச்சாரத்தில் இருந்து மெல்ல மெல்ல விலகிப் போனது. “தில்லுமுல்லு”, “மன்னன்”, “தர்மத்தின் தலைவன்” போன்ற படங்களில் ரஜினி கதராடையை வைத்து செய்த நகைச்சுவை இந்த அந்நியத்தன்மையின் பின்னணியில் தோன்றியது தான். இன்று நாம் பொது சமூகத்தில் வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிவது அருகி வருகிற நிலையில் அந்த உடை ஒரு படோபமான, மேல்தட்டு, அதிகார உச்சத்தின் குறியீடாக மாறியது. மேலும் பளிச்சென்ற வெள்ளை வண்ணம் மத்திய வர்க்க மங்கலான ஆடை வண்ணங்களின் கலாச்சாரத்துக்கு எதிர்துருவமாக உள்ளது. ஒருவர் பளிச்சென்ற ராம்ராஜ் வெள்ளை அலுவலகத்துக்கு வந்தால் அவர் தனித்து தெரிகிறார். அவருக்கு ஒரு ஒளிவட்டம் வருகிறது. அவருக்கே அது உறுத்தலாக மாறுகிறது. நான் சில நண்பர்களுடன் குர்தா வாங்குவதற்காக காதி கடைக்கு சென்ற போது வெள்ளை நிற குர்தா மிக அரிதாகவே இருந்ததை சுட்டிக் காட்டினேன். அப்போது நண்பர் சொன்னார், “வெள்ளை குர்தாவை நீ ஒரு விசேச நிகழ்ச்சிக்கு அணிந்து சென்றால் மட்டுமே பொருத்தம். அலுவலகத்தில் அது ரொம்ப படோபமாக தப்பாக தெரியும். அதை நிர்வாகம் விரும்பாது.” இப்படி ஆடைத்தேர்வில் எங்கெல்லாம் அதிகார சமக்குலைவு நேர வாய்ப்புண்டோ அங்கெல்லாம் ஆண்கள் அதை கவனமாக தவிர்க்கிறோம்.
இன்று தம்மை மத்திய வர்க்கத்துக்கு இணக்கமாக காட்டிக் கொள்ள விரும்பும் அரசியல்வாதிகள் (கேஜ்ரிவால் போல) சட்டை, கால்சராய் அணிகிறார்கள். திருமா, ரவிக்குமார் போன்ற தலித் தலைவர்கள் இதே வெள்ளை சட்டை, கறுப்பு கால்சராயை (மத்தியவர்க்க மேல்சாதி அதிகாரத்துக்கு எதிரான) எதிர்-அதிகார குறியீடாக அணிகிறார்கள். ஸ்டாலின் போன்ற வருங்கால முதல்வர்கள் நடைபயணத்தின் போது டிராக்சூட், டி-ஷர்ட் அணிகிறார்கள்; அதன் மூலம் வித்தியாசமான நவீனமான தலைவராக தம்மை மக்களுக்கு காட்டுகிறார்கள். இங்கு, பிரதமர் மோடியின் ஆர்ப்பாட்டமான நளினமான ஆடைத் தேர்வு சுவாரஸ்யமானது - தனது ஆடைகளுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வதன் மூலம் அவர் தன்னை பாரம்பரியமான ஆனால் அதே நேரம் நவீன கார்ப்பரேட் உலகின் பிரதிநியாக, பாரத தேசத்தின் பெருமையை பறைசாற்றுகிற, அதே சமயம் மேல்மத்திய வர்க்கத்திற்கு இணக்கமானவராக காட்டிக் கொள்கிறார். அதாவது நமது பாலிவுட் நாயகர்கள் தொடர்ந்து முன்வைத்த ஒரு உடல் பிம்பத்தை நாட்டின் தலைவர் எடுத்து பயன்படுத்தி வருகிறார். இதன் மூலம் அவர் தன்னை, சுதந்திரத்துக்குப் பின்பான எல்லா பெருந்தலைவர்களையும் போல, மத்தியவர்க்க ஆடைத்தேர்வுக்கு நேர் எதிரானவராக காட்டிக் கொள்கிறார். அதிகாரம் அடக்கமான வண்ணங்களை, ஒடுங்கின உடல்மொழியை மத்தியவர்க்கத்திடம் எதிர்பார்க்கிறது; ஆனால் அதிகாரம் படைத்தவர்களோ அதற்கு நேரெதிரான வர்ணங்களை, உடல்மொழியை பயன்படுத்துகிறார்கள்.
இவர்களில் சில தலைவர்கள் தமது தனித்துவத்தை பேண தம் கொள்கைக்கும் அரசியலுக்கும் பொருந்ததாத எதுவோ ஒன்றை தம் தோற்றத்தில் வைத்திருப்பார்கள் - எம்.ஜி.ஆருக்கு தொப்பியும் கண்ணாடியும், கலைஞருக்கு கறுப்புக்கண்ணாடியும் மஞ்சள் துண்டும். மக்களும் இந்த தனித்துவங்களைக் கொண்டே அதனோடு தர்க்கரீதியாக பொருந்தாத இந்த தலைவர்களின் அரசியலை புரிந்து கொண்டார்கள் - எம்.ஜி.ஆரின் தாராளமனத்துக்கு, ஹீரோயிசத்துக்கு அவரது கம்பளி குல்லா குறியீடாகியது; கலைஞரின் சமூகநீதி அரசியலுக்கு, சொல்லாற்றலுக்கு கறுப்புக்கண்ணாடி குறியீடாகியது. ஓ.பி.எஸ், எடப்பாடி போன்ற இரு தலைவர்கள் ஜெயலலிதாவுக்குப் பிறகு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த போது தமது தக்கவைப்புக்கு தனித்துவ தோற்றம் எதிரானது என உணர்ந்திருந்தனர் - அவர்கள் ஒரு மத்திய வர்க்க ஊழியனைப் போன்றே தம்மை பத்தோடு பனினொன்றாக காட்டிக் கொண்டனர்.
பெண் தலைவர்கள் சிலரின் ஆடைத்தேர்வையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும் - சினிமாவில் தொடர்ந்து தன்னை தனியாக, ஆளுமை மிக்க அழகான பெண்ணாக காட்டிக் கொண்ட ஜெயலலிதா அரசியல் தலைவரானதும் தனது அதுவரையிலான பெண் அடையாளங்களை கழற்றி வைத்தார். அவரது “கவர்ச்சியின்மை” என்பது ஆண் அரசியல்வாதிகளின் பளிச்சென்ற வெள்ளை ஆடைகளைப் போன்றே மத்தியவர்க்க விழுமியங்களுக்கு முரணாகத் தோன்றியது. ஆண்களை விட அதிகாரமிக்க தலைவியாக அவரைக் காட்ட இது உதவியது. உபியில் மாயாவதியும் வங்காளத்தில் மம்தாவும் இதை தம் பாணியில் செய்தனர்.
எழுத்துலகில் வணிகப்புலத்தில் இயங்கியவர்களில் தம் ஆளுமையை எழுத்து வழி தனித்து ஒளிரச் செய்தவர்கள் தமக்கென ஒரு தோற்ற மரபையும் ஏற்படுத்தினவர்களே - ஜெயகாந்தன், பாலகுமாரன் போன்றோரை உதாரணம் காட்டலாம். ஆனால் தம் ஆளுமையை எழுத்தில் ஒலிக்கும் குரலில் இருந்து தனித்துக் காட்ட விரும்பியவர்கள் தம் தோற்றத்தை மத்தியவர்க்கத்தின் தொடர்ச்சியாகவே வைத்துக் கொண்டார்கள். சினிமா இயக்குநர்களில் பாலுமகேந்திரா (தொப்பி), மிஷ்கின் (கறுப்புக் கண்ணாடி), ராம் (தாடி) என film noir பாணி இயக்குநர்கள் தாமே தம் சினிமா என ஒரு கதையாடலை உருவாக்குகிறார்கள்; இளையராஜா, ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்கள் தம் இசை தாமே தான் என சேதியை விடுக்கிறார்கள்; இதற்கு தம் தோற்றத்தில் ஒரு தனித்துவ அடையாளத்தை திரும்பத் திரும்ப முன்னிறுத்துகிறார்கள். ஆனால் வணிக சினிமாவின் தேவைகளுக்கு இலக்கணத்துக்கு முழுக்க பொருந்தியவர்களாக தம்மை காண்பிக்கும் சங்கர், ரவிகுமார், ஹரி போன்றோர் தம் தோற்றத்தை முடிந்தளவுக்கு சாதாரணமாகவே வைத்துக் கொள்கிறார்கள். வணிகப்படங்களில் தனித்துவமான தரமான போக்கை கொண்டிருக்கும் மணிரத்னத்தை போன்றவர்கள் தம் ஆளுமையையும் படத்தின் மொழியையும் தனித்தனியாக காட்ட விரும்புவதால் தம் தோற்றத்தை தனித்துவமற்றதாக முன்வைக்கிறார்கள்.
விளையாட்டிலும் கிட்டத்தட்ட இதே அரசியல் தான் - தனித்துவமான மேதைகள் தமது உடல்மொழியை, தோற்றத்தை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காண்பிப்பார்கள். சச்சினுக்கு சுருட்டை முடி, கங்குலிக்கு தலை உயர்த்திய நடை, தோனிக்கு ஆரம்ப காலத்தில் நீண்ட கேசம் - நேர்மாறாக கவாஸ்கர், திராவிட் போன்றோர் தம்மை மத்தியவர்க்க விழுமியத்தின் பிரதிநிதியாகவே காட்டினர். கபில்தேவ், யுவ்ராஜ், சேவாக் துவங்கி ரோஹித் ஷர்மா வரை அலட்சியமான சோம்பலான உடல்மொழியும் மேதைமையும் துணிச்சலும் இணைக்கப்படும் கண்னிகளாக உள்ளன. இவர்கள் சாதாரணமாக ஆடினாலே நமக்கு அது அசாதாரணமாகத் தெரிகிறது; இவர்கள் சாதாரணமாக அவுட் ஆனால் சோம்பலுடன் அடித்து வெளியேறினதாகத் தோன்ற கோபம் வருகிறது. திராவிட்டுக்கு ஆர்ப்பரிக்காத நாம் சச்சினுக்கு இருக்கையை விட்டு எழுந்து துள்ளிக் குதித்து கைத்தட்டினது நமது கிணற்றுத்தவளை வாழ்க்கையில் நாம் செய்யத் துணியாத ஒன்றை இந்த சின்னப் பையன் பண்ணுகிறானே எனும் வியப்பில் தான். தோனி அந்த நீண்ட தலைமுடியுடன் அலட்சியமாக கம்பீரமாக தென்னாப்பிரிக்காவில் 20-20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தை வென்று கோப்பையை தூக்கி நடந்த போது அவரது ஆண்மையின் செருக்கு தன்னை கவர்ந்ததாக மனுஷ்யபுத்திரன் எழுதினது நினைவுள்ளது. ஆனால் அதே தோனி அணித்தலைவராக தொடர்வதற்கும் நீடிப்பதற்கும் தன் ஆட்டத்தின் போக்கை, பாணியை மாற்றிக் கொண்டார்; உடனே தோற்றத்தையும் நேர்மாறாக மாற்றினார். முழுமையான அதிகாரம் என்பது அதை பயன்படுத்துகிறவரை ஒரு கட்டத்தில் காயப்படுத்தும் என அவர் அறிந்திருந்தார் (மிகுந்த அதிகாரத்தை ஒருவர் தன் உடல்மொழியில் கட்டற்று வெளிப்படுத்துவதை சமூகமும் அணி வீரர்களும் விரும்ப மாட்டார்கள்); கோடிக்கணக்கான மக்கள் கவனிக்கும் அணியின் தலைவராக இருப்பதன் நெருக்கடிகளை விட்டேத்தியாக இருந்து கையாள்வதே சரி என அவர் உணர்ந்து கொண்டார். ஆகையால் அவர் அடிக்கடி பதுங்கிக் கொள்ள மத்தியவர்க்கத்தின் அடையாளமற்ற பொதுத்தன்மை வசதியாக இருந்தது. முடியை ஒட்ட கத்தரித்து, எந்த பெருமை, தனித்துவத்தையும் கோராத முதிர்ச்சியான தலைவரானார். அதிரடி தோனி கேப்டன் கூல் ஆனார்.
இப்படி தோற்றமானது நீங்கள் தனித்து தெரிய விரும்புகிறீர்களா, அதன் அதிகார பயன்மதிப்பு என்ன, நீங்கள் எந்தளவுக்கு அதிகாரத்துடன் நெருங்கி செல்ல விரும்புகிறீர்கள், எந்தளவுக்கு அதிகாரத்தில் இருந்தபடியே அதனால் கறைபடியாதவராக, அதிகாரம்படைத்த சாதாரணனாக உங்களை காட்டிக் கொள்ள விரும்புகிறீர்களோ அதைப் பொறுத்து அமைகிறது.
மீண்டும் பாரதி கிருஷ்ணகுமாருக்கு வருகிறேன்.
ஒவ்வொரு பெண்ணும் தன்னிச்சையாகவே காலுக்கு மேல் காலிட்டு அமர விரும்புகிறாள். பெண்கள் அப்போது மக்கள் திரள் நிரம்பிய அரங்கில் கவிதையை முழங்கும் ஒரு கவிஞனைப் போல உணர்கிறார்கள். உலகின் மொத்த செல்வமும் தம் காலடியில் கிடப்பதாய் அவர்களுக்கு தோன்றுகிறது. ஒரு ஆண், அரிதாகவே, காலுக்கு மேல் காலிடுவான். அப்போது அவன் தன் உடலமைப்பே அதை அவசியப்படுத்தியது என ஒரு நியாயத்தை அதற்கு அளிக்கிறான் (பாரதி கிருஷ்ணகுமார் அப்படியே அன்று வலியுறுத்தினார்). ஆனால் ஒரு பெண்ணோ “எனக்கு அது தான் பிடித்திருக்கிறது, நான் அப்போது தான் இயல்பாக உணர்ந்தேன், எனக்கு யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை” என தன்னம்பிக்கையுடன் துணிச்சலுடன் சொல்ல முடியும். கமலஹாசன் முன்னிலையில் தான் கால் மீது காலிட்டு அமர்ந்ததை லாஸ்லியா அப்படி அல்லவா நியாயப்படுத்தினார். இந்த இரண்டு காரணங்களுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஒன்று (ஆணுடையது) தானாக இருக்க முடியாததன் தோல்வியை ஒப்புக்கொள்ளுதல்; மற்றொன்று (பெண்ணுடையது) தானாக இருப்பதே இயல்பு, அதில் கேள்வி எழுப்பவே யாருக்கும் இடமில்லை எனும் நம்பிக்கை.
நன்றி: உயிர்மை, நவம்பர், 2019
