முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை



செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள்.
அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள். அவர்களுடைய லட்சியம் செய்யறிவைக் கொண்டு வேலைகளை எந்திர முழுதியக்கம் (automate) செய்வது. இதனால் பல பணிகள் வேகமாக நடந்து முடியும் என்பதைவிட செலவில்லாமல் செய்ய முடியும் என்பதே அவர்கள் செய்யறிவைச் சந்தைப்படுத்த நிறுவனங்களிடம் நீட்டிய கேரட். கடந்த ஈராண்டுகளில் பல கார்ப்பரட் தலைவர்கள் செய்யறிவினால் மிகப்பெரிய வேலை இழப்பு வரும் என எச்சரித்தது இந்நோக்கில்தான். வேலையளிக்கும் நிறுவனங்களும் இதை நம்பினர். அவர்களுக்கு தமது ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, லாபத்தைப் பெருக்கவும், ஏற்கனவே உள்ளவர்களை அச்சுறுத்தி அதிக வேலை வாங்கவும் இந்தப் பீதி உதவியது. இப்போது வேலையிழந்தவர்கள் சந்தையில் பெருகி விட்டார்கள் என்றும், அவர்கள் ஏற்படுத்துகிற மிகையால் ஒரு செயற்கையான போட்டி நிலவுகிறது என்றும், நேர்முகத்தின்போது உங்கள் வேலையை செய்யறிவே செய்துவிடும், நீங்கள் அதை நிர்வகித்தால் போதும், உங்களுக்கு எதற்கு இவ்வளவு சம்பளம் என்று சொல்லி மனிதவளத்துறையினர் ஊதியத்தைக் குறைத்து பேரம் பேசுவதாகவும் இந்த செய்தித் தொகுப்பில் சொல்கிறார்கள். அதாவது இது ஒரு செயற்கையாக உண்டுபண்ணப்பட்ட பிரச்சினை - செய்யறிவினால் நிறுவனங்களுக்கு நட்டமே அதிகம், அவர்கள் மனித ஊழியர்களிடம் திரும்பவே விரும்புகிறார்கள், ஆனால் இப்போதைக்கு விட்டுப்பிடிக்கலாம், ஊதியத்தைக் குறைக்கலாம் எனக் கருதுகிறார்கள்.
இப்போது தானியங்கி செய்யறிவு (agentic AI) வந்து நம் பணிகளை அதுவே கேட்காமலே எடுத்துச் செய்யும், நம் நிகழ்ச்சி நிரலைத் திட்டமிடும், ஆவணங்களை உருவாக்கித் தொகுக்கும், நாம் அதை நிர்வகித்தால் மட்டும்போதும் என்கிறார்கள். ஆனால் இதுவும் வெற்று விளம்பரம்தானோ எனத் தோன்றுகிறது.
செய்யறிவின் உண்மையான 'ஆற்றலை' நாமே நம் அன்றாடப் பணிகளில் காண்கிறோம் - அது வந்தபோது அதனால் பல புத்தகங்களை நொடிகளில் எழுத முடியும், இனி எழுத்தாளர்கள் தேவையிருக்க மாட்டார்கள் என்றார்கள். அதுவே சமூகவலைதளங்களில் எழுதும் என்றார்கள். திரைக்கதை எழுதும் என்றார்கள். இதையெல்லாம் செய்கிறதுதான் - ஆனால் தரமாக இல்லை. மாணவர்கள் இதைப் பயன்படுத்தி சமர்ப்பிக்கும் கட்டுரைகள் மேம்போக்காக, அர்த்தமற்று உள்ளன. இதனால் செய்யறிவு என்றாலே தரக்குறைவு எனும் எண்ணம் ஏற்பட்டுவிட்டது. என் மாணவர் ஒருவர் செய்யறிவைக் கொண்டு ஏகப்பட்ட நூல்களைக் கிண்டிலில் வெளியிட்டுச் சம்பாதிக்கப் போவதாகச் சொன்னார். நான் அவரிடம் தரமின்மையை உள்ளடக்கத்தால் ஈடுகட்ட முடியாது, அத்தகைய பண்டங்கள் மதிப்பிழக்கும் என்றேன். அவ்வாறே நடந்தது. அவர் விரைவில் சோர்வடைந்தார். என்னதான் மின்நூல், பதிப்பு நூல் சந்தையில் செய்யறிவு பங்காற்றினாலும் அதனால் தரமான வெற்றிகரமான நூல்களை உருவாக்கி பெஸ்ட் செல்லர்களாக முடியவில்லை.
செய்யறிவு ஏற்கனவே உள்ளதைத் திருடி அதைப் போலச் செய்கிறது. அதனால் புதிய கருத்துக்களை, கற்பனையை உருவாக்க முடிவதில்லை. அது ஒரு மேம்பட்ட நகல் எந்திரம். தான் எதிலிருந்து நகலெடுத்தோம், திருடினோம் என்பதையும் அது ஒப்புக்கொள்வதோ மேற்கோள் காட்டுவதோ இல்லை. இது இன்னொரு அறம்சார்ந்த பிரச்சினை. நியாயமாக செய்யறிவு நிறுவனங்கள் தாம் 'பயிற்சிக்காக' திருடுகிற தரவுகள், நூல்களுக்கான ராயல்டியைக் கொடுக்க வேண்டும். ஆனால் டயாய்க்கின்றன.
இப்போதைக்கு (இலக்கியம் போன்ற சிக்கல்கள் இல்லாத) நேரடியான எளிய மொழிபெயர்ப்புகள், விளம்பர வசனங்கள், உரையாடல், குறிச்சொல் உருவாக்கம், மொழிப்பயிற்சிக்கு அது உதவுகிறது.
நான் புக்காவஸ்கியின் நாவலை (Pulp) வாசித்துக் கொண்டிருக்கும்போது அதில் திடீரென ஒரு பாத்திரம் வந்தது. அப்பாத்திரம் நாவலில் மற்றொரு இடத்தில் ஒரே ஒருமுறை வந்த நினைவு. ஆனால் எங்கு எதற்காக என மறந்துவிட்டது. செய்யறிவிடம் கேட்டேன். அது ரொம்ப இலக்கியத்தனமான பதில் சொன்னது. ஆனால் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் இல்லை. வகுப்பில் ஒன்றுமே தெரியாத மக்கு மாணவர்கள் இட்டுக்கட்டி பதில் சொல்வார்களே அப்படி ஒரு எதிர்வினை. ஏனென்றால் அப்புத்தகத்தின் தரவுகள் அதனிடம் இல்லை. என்னிடம் பி.டி.எப் இருந்தால் நான் கணநேரத்தில் கண்டுபிடித்திருப்பேன். இதனிடம் கேட்டால் இப்படி விளையாடுகிறதே என எரிச்சலாகியது. செய்யறிவின் முக்கியமான பிரச்சினை அது தனக்கு ஒன்று தெரியாது என்று ஒப்புக்கொள்ளாது என்பது. அதனாலே அதன் நம்பகத்தன்மை போய்விடுகிறது.
இந்த லட்சணத்தில் இனி ஆசிரியர்களே தேவையில்லை, செய்யறிவே அப்பணியைச் செய்யும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். இன்றும் சில கல்வி நிறுவனங்களில் அதை நம்புகிறார்கள். இப்படி இட்டுக்கட்டும் ஒரு மென்பொருளிடம் மாணவர்களை ஒப்படைத்தால் அதனால் நேரும் குழப்பங்களுக்கு யார் பொறுப்பு?
செய்யறிவு நம் காலத்தின் பிளாஸ்டிக் ஆகிவிட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் ஆரம்பத்தில் சந்தைக்கு வந்தபோதும் இத்தகைய மிகை எதிர்பார்ப்பும் பிரமிப்பும் இருந்தது. இன்று அது தரமின்மைக்கான குறியீடு.
செய்யறிவு வளராது என்று நான் நினைக்கவில்லை. இப்போதுள்ள செய்யறிவு வேலைக்கு ஆகாது. அது அதன் முழுப்பரிமாணங்களை அடைய நேரடியாகத் தரவுகளை உள்வாங்கும், 24*7 உலகைக் கண்காணிக்கும் ஆற்றல் அதற்கு வேண்டும். தான் உள்வாங்கும் தகவல்களைப் பரிசீலித்து சுயமாக முடிவெடுக்க இயல வேண்டும். அதுவரை அதனால் சின்னச் சின்ன வேலைகளை மட்டுமே பண்ண முடியும்.
நமது வேலைகள் பாதுகாப்பாக உள்ளன.
மேலும் தெரிந்துகொள்ள:

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...