சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா (CIBF) சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒன்று என்பதை வெளியில் இருந்து பார்க்கையில் புரிந்துகொள்ள முடியாது. நானே அதை நிதி வீணடிப்பு என்றே ஆரம்பத்தில் கருதினேன். ஆனால் இந்த ஆண்டு அதில் கலந்து கொண்டபோது என் எண்ணம் மாறியது. குறிப்பாக அரசின் நடவடிக்கை மீது பதிப்பாளர்களுக்கு உள்ள மரியாதையினால் எழுத்தாளர்களுக்கு சில பயன்கள் கிடைக்கின்றன. ஒரு சின்ன விசயத்தைக் குறிப்பிடுகிறேன் - பதிப்பாளர்கள் முன்வைக்கும் நூல்கள் அரசின் நூற்பட்டியலில் வண்ணப்படங்களுடன் வழவழ தாளில் வெளியிடப்படுகின்றன. இந்த பட்டியல் நூலில் படைப்புகள் அந்தந்த எழுத்தாளர்களின் முகவர்களின் கீழ் பகுக்கப்பட்டு தரப்பட்டுள்ளார்கள். இந்த படைப்புகளை நூலில் பார்க்கும் அயல்மொழி, அயல்நாட்டுப் பதிப்பாளர்கள் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்கிறார்கள். அவர்கள் அப்படைப்புகளை மொழிபெயர்க்க முன்வருகிறார்கள். நீங்கள் அவர்களிடம் உங்கள் புத்தகங்களைக் காட்டி விளக்கினாலும் அவர்களுக்கு உங்கள் படைப்பின் முக்கியத்துவம் விளங்காது. ஏனென்றால் அவர்கள் வேறு ஊரை, மொழியைச் சேர்ந்தவர்கள். தமிழ் இலக்கியத்தில் நடப்பன வெளியாட்களுக்கு மர்மமாக உள்ளன. இந்தப் போதாமையைத் தாண்ட அரசின் அங்கீகாரம் வெகுவாக உதவுகிறது.
அடுத்து, எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் சந்திப்பதற்கான ஒரு களத்தை அமைத்துத் தருகிறார்கள். பெரும்பாலும் நம்மால் இவர்களை நேரில் போய்ப் பார்த்துப் பேச முடியாது. பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் அரசின் நிகழ்வு என்பதால் அங்கு ஒரு சமத்துவம் ஏற்படுகிறது. இது முக்கியமானது.
நான் கடந்த இரு ஆண்டுகளாக இங்கு வராதது தவறு என்று இம்முறை சென்றபோது புரிந்துகொண்டேன். ஏனென்றால் நான் ஒரே ஒரு தளத்தில்தான் இரு மணிநேரங்கள் இருந்தேன். அதுவும் இந்தியப் பதிப்பாளர்களுக்கான தளம். அங்கு சொற்ப பதிப்பாளர்களே இருந்தார்கள். நான் கண்ணனுடன் சென்றிருந்தேன். முதலில் நானும் கண்ணனும் அரட்டையடித்து காபி, நொறுக்குத்தீனி சாப்பிட்டுவிட்டு இருந்தோம். கண்ணன் வழக்கம்போல புலப்படாத வடிவமெடுத்தார். நான் ராம் தங்கம், இமையம் போன்றோரைப் பார்த்துப் பேசிவிட்டு என் கணினியில் நாவலொன்றை விட்ட இடத்தில் இருந்து எழுத ஆரம்பித்தேன். மாலை ஆறரை மணி வரைக்கும் நான் எழுதிக் கொண்டே இருந்தேன். திரும்பிப் பார்த்தால் அரங்கு முழுக்க காலி. பணியாளர்கள் அரங்கைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். நான் இதையெல்லாம் கவனிக்கவில்லை. முழுக்க என் நாவலில் வரும் சூழலில் மூழ்கி இருந்தேன்.
எனக்கு அங்கு இருக்கும் பதிப்பாளர்களிடம் போய் என்னை அறிமுகப்படுத்த ஆர்வம் இருக்கவில்லை. திமிர்தான். நீயே என்கிட்ட வா எனும் மனப்பான்மைதான். ஆனாலும் ஒரு சில பதிப்பாளர்களிடம் உரையாடும் வாய்ப்பு அமைந்தது. அதனால் சில நற்பயன்கள் அமைந்தன. நற்செய்திகளை அவை முழுமையாக அமைந்து உருப்பெற்ற பின்னர் சொல்கிறேன். ஒன்றை மட்டும் சொல்கிறேன்:
என்னதான் இலக்கிய முகவர்கள் வேலை பார்த்தாலும் எழுத்தாளர்கள் நேரடியாகச் சென்றால் ஏற்படும் தாக்கம் இருக்காது. ஒரு எழுத்தாளர் நேரில் போய் பத்து நிமிடங்கள் பேசினாலே டீல்கள் அமைந்து விடுகின்றன. முகவர்கள் மாதக்கணக்கில் முயன்றாலே அது நடக்கும். நமக்கு அதிர்ஷ்டம் இருந்து நம்மை யாராவது அப்பதிப்பாளரிடம் பாராட்டிப் பேசினால் அவர்கள் தம் மகளைக் கூட நமக்குக் கட்டி வைத்து விடுவார்கள். அவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள். நீங்கள் உங்கள் புத்தகத்தை வேறு மொழியில் கொண்டு வருவதற்காக பதிப்பாளர்களையும் முகவர்களையும் நாடியவர் என்றால் நான் சொல்வதன் பொருள் விளங்கும்.
அரசு பதிப்பிற்காகவும் மொழிபெயர்ப்புக்காகவும் அளிக்கும் நிதியை வாங்க சில ஐரோப்பிய மோசடிப் பதிப்பாளர்கள் செயல்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இருக்கலாம். ஆனால் நிதியே கேட்காமல் சொந்தப் பணத்தில் நல்ல புத்தகங்களைக் கொண்டு வர விரும்பும் பதிப்பாளர்களும்தாம் அங்கு வருகிறார்கள்.
அப்படியே எந்த ஒப்பந்தமும் அமையாவிடினும் அங்கு ஹெட்போனில் பாட்டுக் கேட்டபடி எழுதலாம். நல்ல அமைதியான இடம்.
திமுக அரசு இதை இன்னும் மேம்படுத்தலாம். முக்கியமான மாநில, தேசிய, சர்வதேச பதிப்பாளர்கள் சிலரிடம் அரசே நேரடியாக ஒப்பந்தம் போட்டு அவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நூல்களைக் கொண்டு வர வேண்டும் என்றும், நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கலாம். இன்று தனியார் பல்க்லைகளிலே ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், எல்சிவியர் போன்ற நிறுவனங்களுடன் இத்தகைய ஒப்பந்தங்களைப் போடும்போது அரசால் சுலபத்தில் செய்ய முடியும். அப்போது சில்லறைப் பதிப்பகங்களை இரண்டாம் இடத்திற்குத் தள்ளிவிட இயலும். மேற்சொன்ன முக்கிய பதிப்பகங்களுக்கு எடிட்டர்கள் உள்ளூரிலேயே இருப்பதால் விமானச் செலவு செய்து ஐரோப்பாவில் பெட்டிக்கடைப் பதிப்பகம் நடத்தும் வெள்ளைக்காரர்கள் இலவசமாக இங்கு வந்து ஊர்சுற்ற செலவு செய்ய வேண்டியிருக்காது. அரசு இதை அறியும் என்றும். இதை நோக்கி விரைவில் செல்லக் கூடும் என எதிர்பார்க்கலாம்.
சுகிர்தராணி தன் பதிவில் சொல்லியிருப்பதைப் போல எழுத்தாளர்கள் தங்குவதற்கும், எழுதுவதற்குமான இடங்களை அரசு அமக்கலாம். எவ்வளவோ செய்யலாம்.
இப்போதைக்கு அடுத்த ஆண்டும் சர்வதேச புத்தகக் காட்சியில் கலந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்திருக்கிறேன்.
இந்நிகழ்வை ஒருங்கிணைத்த பொது நூலகத் துறைக்கும், பாடநூல் கழகத்துக்கும் பாராட்டுகள்.
பி.கு - CIBFஇன் ஒரே இழுக்கு கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழியாக்கத்தை வெளியிட்டதுதான். அதைவிடக் கொடுமை அந்நூலுக்கான பதாகையை வாசலிலே வைத்திருந்தது. அதையெல்லாம் ஆங்கிலத்தில் படித்து நம்மைக் கேவலமாக நினைக்க மாட்டார்களா என்று ஒரு நண்பர் கேட்டார். என்ன செய்வது? கனியிருப்ப காய் கவர்ந்தற்று.