அரசியல் என்பது மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களை ஒன்று திரட்டுவது தான். ஆனால் அதை செய்ய நீங்கள் மக்களுக்கு நெருக்கமாய் நின்று அவர்களை ஆழமாய் பாதிக்கும் உணர்ச்சிகள் என்ன என தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களுக்கு இந்த எளிய சூத்திரம் புரியவில்லை. அவர்கள் திரும்பத் திரும்ப தம்மை கோமாளியாக்கிக் கொள்கிறார்கள். விஜய் ஒரு கிறித்துவர் என எச்.ராஜா வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியதில்லை. தன் பெயர் ஜோசப் தான் என்பதை அவரே துணிச்சலாய் சொல்வார். தன் லெட்டர் பேடில் அப்பெயருடன் தான் அவர் குமுதத்துக்கு நன்றிக் கடிதம் அனுப்புகிறார். அவரது தாய் இதைப் பற்றி முன்பு ஒரு பத்திரிகைத் தொடரில் எழுதியுள்ளார். விஜய்யின் தாய் இந்து. அப்பா கிறித்துவர். விஜய் கிறித்துவராகவே வளர்ந்துள்ளார். இது தமிழர்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை என்பது எச்.ராஜாவுக்கு புரியவில்லை என்பது தான் பிரச்சனையே.