அயர்லாந்துடன் இந்தியா தோற்றதில் பெரிய துயரம் இல்லை. கடந்த முறை இந்தியா அங்கு டி20 ஆடியபோதும் அயர்லாந்தினர் நன்றாகவே ஆடினார்கள். இம்முறை ஆட்டச்சூழலும் மைதான அமைப்பும் மட்டையாட்டத்துக்குச் சாதகமாக இல்லாதது அவர்களுடைய ஆட்டபாணிக்குப் பொருத்தமாக இருந்தது. பெரிய சவால்கள் இன்றியே வென்றார்கள். இரண்டு ஆட்டங்களிலும் எந்த நிலையிலும் இந்தியா அவர்களை நெருக்கித் தள்ளவில்லை. இதெல்லாம் பலரும் விவாதிப்பதுதான். இங்கிலாந்துடனான அடுத்து வரும் தொடரில் இதே அணி மேலும் நன்றாக ஆடுவார்கள், ஏனென்றால் அப்போது ஆடுதளம் இன்னும் சாதகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இங்கிலாந்து மட்டையாட்டக்கார்கள் இன்னும் ஆவேசமாக மட்டையாடுவார்கள், அவர்களுடைய பந்து வீச்சாளர்கள் நிறைய ரன்களை நமக்குக் கொடுப்பார்கள் என்பதால் ரன்களைக் கட்டுப்படுத்தும் கவலையே நம் அணிக்கு இருக்கும். விக்கெட் கொடுக்காமல் ஆடுவது அல்ல. மேலும் தட்டையான ஆடுதளங்களிலேயே பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் திறன்கள் தேவையுள்ளது - துல்லியமான யார்க்கர்கள், நல்ல பவுன்சர்கள், மெதுப்பந்துகள், அகலமான திசை என நிறைய சவால்கள். அயர்லாந்தில் குறிப்பிட்ட நீளத்தில் வீசிக்கொண்ட...