முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீட்சேயின் “நன்மைக்கும் தீமைக்கும் அப்பால்” - குறிப்பு (1)

 


“இவ்வாறு சொன்னான் ஜாரதுஷ்டிரன்” நூலுக்கு அடுத்ததாக நீட்சே எழுதிய நூலே “நன்மைக்கும் தீமைக்கும் அப்பால்” (1886). தன் சொந்தக் காசில் அவர் பிரசுரித்த இந்நூல் ஹெலென் சிம்மர்ன் என்பவரால் ஆங்கிலமாக்கப்பட்டது. “ஜாரதுஷ்டிரனில்” அவர் பேசுகிற பிரதானமான தத்துவக் கருத்தாக்கங்களே இதில் விவாதிக்கப்படுகின்றன. கிரேக்க, ஐரோப்பிய தத்துவவாதிகள், விஞ்ஞானிகளின் கருத்துக்களை கடுமையாக விமர்சித்து கலாய்த்துக் கொண்டு போகும் நீட்சேயின் அடிப்படையான உத்தேசம் ஒன்றுதான் - மனித இருத்தலை சமூக ஒழுக்கத்துக்கும், சரி-தவறு எனும் எதிரிடைகளின் மீது எழுப்பப்பட்ட விழுமியங்களுக்கு அப்பாலும் கொண்டு சென்று விவாதிக்க வேண்டும். அவர் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?
நீங்கள் இதை ஏன் படிக்கிறீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? அறிவைப் பெருக்க, உங்களை மேம்படுத்திக் கொள்ள, ஆழமாகச் சிந்திக்க, உங்களைச் சோதித்துப் பார்க்க ... இப்படி எதாவது ஒன்று. இப்பதில்கள் உங்கள் செயலுக்கு ஒரு உத்தேசம் இருக்க வேண்டும் எனும் நம்பிக்கையின் பால் அமைந்துள்ளன. அறிவை ஏன் பெருக்க வேண்டும் எனக் கேட்டால் நீங்கள் அது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் எனக் கூறக் கூடும். ஏன் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டால்? ஒருவேளை, நீங்கள் மேம்பட்ட வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை எனக் கூறக் கூடும். சிறந்த வாழ்க்கை என்றால் என்ன என்று நான் கேட்டால் அது சான்றோரால் அவ்வாறு வகைப்படுத்தப்பட்ட ஒன்று என்று நீங்கள் கூறலாம். சான்றோர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும் என்றால் உங்களிடம் பதிலிருக்காது. சான்றோர் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்பதை வேண்டுமானால் சொல்லலாம். (ஏனென்றால் ‘சான்றோரிடமே’ அதற்குப் பதிலிருக்காது.) வாழ்க்கையை மேம்படுத்தினால் பிறரிடம் அன்பாகவும் நிதானமாகவும் பழகி உறவுகளை மேம்படுத்தலாம், அவ்வாறு மேம்படுத்தினால் வாழ்க்கை இன்பமாகும் என நீங்கள் கூறினாலோ, அறிவு மேம்பட்டால் இன்பம் பெருகும் என்றாலோ நீங்கள் இன்பத்தை உங்கள் உத்தேசமாக்குகிறீர்கள். மேம்பட்ட அறிவு எப்படி இன்பத்தைத் தரும் என நான் கேட்டால் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். பலரும் மேம்பட்ட அறிவினால் துன்பத்தில் சிக்கியுள்ளார்கள். அதில் எந்த நிச்சயமும் இல்லை.

இங்கு நான் தொடர்ந்து நன்மை-தீமை எதிரிடையைப் பயன்படுத்தி இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். பெருக்குவது-சுருக்குவது; மேம்படுத்துவது-சீரழிப்பது; அன்பு-வெறுப்பு; நிதானம்-பதற்றம்; இன்பம்-துன்பம். இந்த எதிரிடைகளை நம் அனுபவத்தை அதன் ஆழத்தில் நோக்கும்போது நாம் காண்பதில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனக் கருதி அடையும் அனுபவத்தில் எந்த மகிழ்ச்சியும் இல்லாதிருப்பது இதனாலே. மாறாக நம் மகிழ்ச்சி வேறொன்றில் இருக்கிறது. அது நம் இருத்தலில் இருக்கிறது. நாம் இந்த உலகில், இந்த காலத்தில் ஒவ்வொரு கணமும் இருப்பதற்குப் பிரயத்தனிக்கிறோம். நீங்கள் இதன் ஒவ்வொரு சொல்லையும் படிக்கையில் உங்கள் உடலுக்கு, புலனுக்கு, அறிவுக்கு காலத்துடன் ஒரு குறுக்கீடு நேர்கிறது. நீங்கள் உங்களுடைய ஏற்கனவே உள்ள வெளியுடன் (அகமாகவும் புறமாகவும்), காலத்துடனும் மோதி முன்னகர்கிறீர்கள். நீங்கள் முன்னகர்கையில் தோன்றும் இடைவெளிகளில் நீங்கள் உங்களை அறிகிறீர்கள். அடுத்தடுத்து நீங்கள் முன்னகர்கையில் காலத்துக்கும் வெளிக்கும் அப்பால் உங்களை உணர்கிறீர்கள். ஹைடெக்கர் இதையே செருப்பைத் தயாரிக்கிறவரின் அனுபவத்தை வைத்து விளக்கினார். சுத்தியலை எடுத்து அவர் அடிக்கிற ஒவ்வொரு கணத்திலும் அவர் இந்த உலகின் இருத்தலுடன் தன் இருத்தலைப் பொருத்துகிறார். அதையே நீட்சேயும் வேறு விதத்தில் இந்நூலில் சொல்கிறார்.
இங்கு இருத்தலை விழுமியங்களுக்கு, எதிரிடைகளுக்கு அப்பால் அவர் விளக்குகிறார். உ.தா., நீங்கள் ஒரு பழுத்த மாம்பழத்தை சாறு வடியக் கடிக்கையில், மாடிப்படிக்கட்டில் பதைக்கப் பதைக்க ஏறும்போது அங்கு எதிரிடைகள் வெறும் சொற்களாக மட்டுமே பின்னர் வருகின்றன. அங்கு நீங்கள் அறிவது மாம்பழத்தின், படிக்கட்டின் அர்த்தங்களை அல்ல, உங்கள் உடல் இந்த வெளியிலும் காலத்திலும் தன்னை முன்னேகும்போதும் தோன்றும் திகைப்பும் எதிர்பாராமையும் அதை ஒட்டிய ஆழமான அனுபவமுமே. இவ்வாறு ஒவ்வொரு கணத்தையும் நான் நீட்சே சொல்கிறபடி வாழ முடியுமா என்பதே கேள்வி. நீங்கள் அடிவானத்தின் கீழே பூத்திருக்கும் மலர்க்காட்டைப் பார்க்கையில் அதை இறைவனின் ஆசீர்வாதம், இயற்கையின் பூரிப்பு என்று வர்ணிக்கலாம், ஆனால் அந்த அழகை நீங்கள் எதிர்கொள்ளும்போது அங்கு இறைவனோ இயற்கையோ இருப்பதில்லை. அங்கு நீங்களும் மலர்களையும் செடிகளையும் மண்ணையும் காற்றையும் உள்ளடக்கிய தோற்றப்பாடுகளுமே இருக்கின்றன. நீங்கள் ஒரு மலரைப் பறிக்கையில் அல்லது ஒருவரைக் கன்னத்தில் அடிக்கையில் அச்செயல்களின் அடையாளங்கள் அல்ல உங்கள் கையில் (உங்கள் உலகின் இருத்தலில்) அம்மலர் வருவதும், உங்கள் உடலின், காலத்தின் இருத்தல் நீங்கள் அடிப்பவரின் உடலுடன், காலத்துடன் மோதுவதே நிகழ்கிறது. இதுவே நீட்சே சொல்லும் “நன்மைக்கும் தீமைக்கும்” அப்பாலான உலகம்.

இந்த உலகின் மானுடவாத விழுமியங்கள், கருத்தாக்கங்களுக்கு அப்பால் இருத்தலை வைக்கிறது என்பதாலே பல தத்துவவாதிகளும் சிந்தனையாளர்களும் இதை ஏற்க விரும்புவதில்லை. அவர்களையே நீட்சே காலவதியான ஒழுக்கப் பண்பாளர்கள், மேலாதிக்கவாத சிந்தனையாளர்கள் (dogmatists) என்று நீட்சே சாடுகிறார். இவர்கள் சாக்ரடீஸ் / பிளேட்டோவின் சாராம்சவாத கோட்பாட்டில் இருந்தே தோன்றுகிறார்கள் என்பது நீட்சேயின் நம்பிக்கை என்பதாலே அவர் சாக்ரடீஸிடம் இருந்தே “ஜாரதுஷ்டிரன்” நூலை ஆரம்பிக்கிறார் (வயதான ஞானியைக் கடந்து மலையிறங்கி வரும் ஜாருதுஷ்டிரன் கடவுள் இறந்துவிட்டார் என்பது இவருக்குத் தெரியதோ என்று வியக்கிறார்.); இப்புத்தகத்தையும் அவர் அவ்வாறே தத்துவத்தின் அடிப்படையில் சாராம்சவாதிகள் செய்து வைத்துள்ள பிழைகளையும் அடுத்தடுத்து வந்தவர்களும் விஞ்ஞானிகளும் மனித இருத்தலின் சாரத்தை விளக்கிய விதத்திலும் உள்ள பிரச்சினைகளையும் விமர்சித்தே ஆரம்பிக்கிறார்.

முதல் அத்தியாயத்தில் (“தத்துவவாதிகளின் மனச்சாய்வுகள்”) 23 பிரிவுகள் உண்டு. சின்னச்சின்ன பிரிவுகள் எனினும் நீங்கள் வேகமாகப் படித்துக் கடந்துவிட இயலாது. ஒவ்வொன்றிலும் அவர் கருத்துக்களை மிகவும் சுருக்கியும் பகடியும் கிண்டலும் சேர்த்தும் குறிப்பிடுகிறார்; பல்வேறு குறிப்புகளும் வருகின்றன. சில வாக்கியங்கள் அவரது காலத்தில் இருந்த பிரபலமான வாதங்கள் மீதான பகடி என்பதால் அவற்றின் பின்னணியும் தெரிந்திருக்க வேண்டும். ஆகையால் அவரைப் படிக்கப்படிக்க நீங்கள் இன்னொரு பக்கம் அதை விரித்து ஆய்வு செய்து கொண்டும் இருக்க வேண்டும். இதுவே ஒரு திகைப்பான சுவாரஸ்யமான அனுபவம்தான் என்றாலும் நிறைய நேரத்தையும் ஆற்றலையும் உறிஞ்சக் கூடும். சும்மா படித்துக் கொண்டு போகிறவர்களுக்கு ஒன்றுமே புரியாமல் போகலாம்.

ஆகையால் முதல் அத்தியாயத்தின் இந்த பிரிவுகளை நான் சுருக்கமாகவும், எளிதாகவும் சொல்ல முயல்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Counterarts இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை

"There has always been a permanent child within Kafka. Society functions as an extension of the office and the family, constantly monitoring and evaluating people and subjecting them to the examination of its rules. In other words, even when Kafka leaves home to go to work, and even afterwards, he remains within the family. Within the family, he is always a son or a brother. The family preserves itself through continuous self-surveillance and mutual surveillance. The same thing happens outside it." https://medium.com/counterarts/kafkas-diaries-735b74cd0c44

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...