முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு லட்சம் சொற்கள்





 

தற்போது எழுதிக் கொண்டிருக்கும் இரு நாவல்களில் ஒரு லட்சம் சொற்களைக் கடந்து விட்டேன். பெரும்பாலும் இந்த ஆண்டுக்குள் ஒரு நாவலை முடித்து அடுத்த ஆண்டு திருத்தங்கள் செய்து கொண்டு வருவேன் என நினைக்கிறேன். இதற்கு இடையே அடுத்த நாவலையும் முடிப்பதுதான் திட்டம். ஒரு நாவல் சமகால உலகம் குறித்த ஒரு மிகுபுனைவு. இதன் களம் புதுமையானது. யாரும் இதுவரை எனக்குத் தெரிந்து எழுதிப் பாராதது. மற்றொன்று மும்முனைக் காதல், ஆணுலகம், குத்துச்சண்டை, ஆண் நட்பு எனப் போகும் மற்றொரு சமகாலக் கதை.

மிகுபுனைவு நாவலை இந்த ஆண்டு ஆரம்பித்தேன். குத்துச்சண்டை நாவலை நான்காண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தேன். அதன் இறுதிப் பகுதியில் ஒரு சிக்கல் வந்ததும் அதை சரிசெய்த பின்னர் முடிக்கலாம் என்று எடுத்து வைத்து அடுத்த நாவலுக்குள் போனேன். அதன்பிறகு அவ்வப்போது எடுத்து வைத்துப் படித்து சில திட்டங்கள் போடுவேன். அப்படி இப்படி இரண்டு நாவல்களையும் மாற்றி மாற்றி எழுதத் தொடங்கினேன். ஜிம்மில் குத்துச்சண்டை பயிலும்போது அல்லது டிவியில் பார்க்கும்போது ஒரு ஐடியா வரும். எழுத ஆரம்பிப்பேன். அப்படியே உள்ளே புகுந்து கதையைத் திருத்துவது, புது அத்தியாயங்கள் என்று போய்க்கொண்டே இருப்பேன். புதிய நாவலின் மொழியும் உணர்வும் வேறு என்பதால் அதிலிருந்து இது ஒரு புத்துணர்ச்சியான மாற்றமாக இருக்கும்.
எனக்குத் தெரிந்து நாவலை எழுதுவதை விட அதைச் 'சரியாக' வெளிப்படுத்துவது கடினம். என்னதான் நாம் திருத்தி எழுதினாலும், பலமுறைகள் முயன்றாலும், கதையமைப்பை வலுப்படுத்தினாலும் நாவலின் மையம் அரூபமான சில கருத்துக்களாலும் உணர்வுகளாலும் ஆனது. இன்னதென்று சொல்ல முடிவது நாவலின் கரு. இன்னதென சொல்லில் வடிக்க முடியாதது நாவலின் ஆன்மா. நாவலை எழுதுவது இந்த ஆன்மாவைத் தழாவி, கையால் பற்றிப் பிடித்து மீண்டும் மீண்டும் தவற விடுகிற காரியம். அதனாலே நாவலை முடித்து திருத்தும் வரையிலும் அது எப்படி வருகிறது என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. அதுதான் நாவலின் சுவாரஸ்யமும். இதே காரணத்தால்தான் நான் நாவலின் சொல் அளவை (word length) வைத்து அதை முடித்ததாக நம்புவதில்லை. அதாவது இன்று ஆரம்பித்து மூன்று-ஆறு மாதங்களில் 180 பக்கங்களை எட்டினால் கதையை முடித்து வைத்து நாவல் முடிந்துவிட்டது என நான் நம்புவதில்லை. அது புறவடிவம் மட்டுமே. புறவடிவம் நாவல் அல்ல.
அதனாலே மேற்சொன்ன திட்டத்தையும் நான் நிபந்தனைக்குட்பட்டதாகவே இங்கு வைக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...