முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

 



காங்கிரஸுடன் கூட்டணி, விசிக, ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது. அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு, தமிழ்நாட்டு நலன், சினிமாத்தனமான தோரணைகள், ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம். இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள், ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள், நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும். அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள். பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல. திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது. அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்களால் அங்கு ஒரு அரசியல் அரங்கைக் கட்டமைத்து புதிய அரசியலை, அரசியல் கதையாடல்களை அரங்கேற்ற முடியும் என உத்தேசிக்கிறார்கள். எப்படி, யாருடன் என்பதெல்லாம் இவை நடந்து முடிந்தாலே நாம் பார்க்க முடியும். ஆனால் காங்கிரஸ் என்ன கதியாகப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.


நகல்விளையாட்டு’ 

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இது ஒரு நகல்விளையாட்டுமட்டுமே. வெறுமனே நகலாக்கம் அல்ல என்பதுதான். நகலின் பொறுப்பே தான் நகலென ஒப்புக் கொள்வது. நீங்கள் ஒரு புத்தகத்தை நகலெடுத்தால் அது அப்பட்டமாகத் தெரியும். ஆனால் நகல் விளையாட்டு அப்படி அல்ல. அங்கு நீங்கள் வேறுபாட்டையே காண முடியாது. அப்போது நகல்களுக்கு பொறுப்பை எடுத்துக் கொள்ளும் அவசியம் இல்லாமல் போகிறது. பொறுப்பாக இருப்பதாக நடித்தால் போதும். அதைப் பார்த்து மக்களும் தாம் அப்பொறுப்பை வியப்பதாக நடித்து கிளர்ச்சியடைவர். .தா., தவெகமாநில சுயாட்சி எங்கள் கொள்கைஎன்று சொல்லலாம், ஆனால் அது அசலைப் போன்ற அச்சுஅசலான நகலாக இருக்கும்வரை மட்டுமே. மற்றொரு உண்மையைப் போலச் செய்து அவர்கள் புதிய ரூபமெடுத்தால் இந்த வசனம் தேவையில்லை. பாஜகவும் அவ்வாறே தவெக எதிர்ப்பு வசனங்களைப் பின்னர் பேச வேண்டியிருக்காது. யாரும் ஏன் என்று கேட்கப் போவதில்லை. அவர்களுடைய நோக்கம் தவெகவும் பாஜகவும் பிரதான எதிரிகள் என்று காட்டுவது அல்ல. அதை யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. பாஜகவை திமுக எதிர்க்கிறது எனும் இருமையை உடைப்பதுதான். திமுக தன்னை உண்மையான கருத்தியல் என்று காட்டிக் கொள்ள அது பாஜகவின் கருத்தியலை எதிர்த்தது (திமுக = உண்மை - பாஜக = நகல்). தவெக தன்னைத் திமுகவெனக் காட்டி நிரூபித்துக் கொண்டதும் மேற்சொன்ன நகலதன்மையை பாஜக இழந்துவிடும். மாறாக பாஜகவும் ஒரு திமுக நகலாகிவிடும். அதாவது கருத்தியல் அளவில் அல்ல. ஆனால்எதிர்க்கட்சி எனும் கருத்தாக்கத்தைஒட்டி அது திமுகவிடம் இடத்தை அபகரிக்கப் பார்க்கும். இவ்வாறு ஒரு சுயமான கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் திமுக இந்தநகல் விளையாட்டைஎதிர்கொள்ள வேண்டும். அப்போது இங்குள்ள பாஜக ஆதரவாளர்களும் திமுக எதிர்ப்பாளர்களும் திமுக என்பதே ஒரு போலிதான், அது நீர்த்துவிட்டது, அது கார்ப்பரேட் ஆகிவிட்டது என்று கூறி தவெகவின்உண்மைத்தன்மையைஆதரிப்பார்கள். ஆனால் அப்போது மக்களே நகல் உண்மையை விட உண்மையாக இருப்பதாக எண்ணி தவெகாவேபளபளப்பாகஇருக்கும்போது திமுக இருக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது, அது அவசியமா என நினைக்கத் தொடங்குவார்கள் என்பதே திட்டம் (நகல் நகையை சில பெண்கள் ரசிப்பதைப் போல). 


ஒரு உதாரணத்திற்கு, முதல்வர் விஜய் மாற்றுத்திறனாளிகளைச் சந்திப்பது, சால்வை போர்த்துவது, விவசாயிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவது, 14 வயது சிறுமியின் ட்விட்டர் பரிந்துரைக்குச் செவி சாய்ப்பது போன்ற காணொளிகள், போலிச் செய்திகள் இன்று அணை உடைந்த வெள்ளம் போல எங்கும் நிரம்பி வருகின்றன. இது போலிச் செய்தி என மக்கள் அறிந்து கொள்ளும் முன்பு அதைப் போன்ற நூறு செய்திகள் வந்துவிடுகின்றன. இதை தவெக ஒரு தனியார் நிறுவனத்தைக் கொண்டு தன்னியக்கமாகச் செய்து வருவதால் தனிமனிதர்களால் இதைச் சமாளிக்க இயலாது திணறி வருகிறார்கள். (ஸிஸெக் சொல்வதைப் போல) போலிச் செய்திகளின் உபரி உண்மையின் நேர்த்தியை, ஒற்றைத் தன்மையைப் போல் அல்லாது பரவசத்தை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சாரப் பெருக்கத்தின் நோக்கம் உணர்ச்சிகளைத் தூண்டுவதும், மக்கள் தொடர்பும் மட்டுமல்ல - திமுக இதை ஒருபோதும் செய்யவில்லை, மக்கள் குரலுக்குச் செவி சாய்க்கவில்லை, ஆனால் தவெக செய்கிறது, திமுக செய்யத் தவறியதை திமுகவை விட மேலாகச் செய்கிறது எனக் காட்டி நகல் தங்கம் நிஜத்தங்கத்தை விட அதிக மினுமினுப்பானது, மதிப்பானது எனக் காட்டுவதும்தான். இன்னொரு உதாரணம், தலித்துகளை அமைச்சரவையில் இடம்பெற வைப்பது. தவெக அமைச்சரவையில் ஏற்கனவே தலித்துகள் உள்ளனர். ஆனால் அவர்கள் இணையும்போது வராதபரவசம்தவெக ஆதரவாளர்களுக்கு விசிகவினர் இணையும்போது வருகிறது? ஏனென்றால் அப்போது திமுகவை விட விசிக அதிகமாக ஜொலிப்பதாக அவர்களுக்குத் தோன்றுகிறது. திமுகவை விட அதிகத் திமுகவாக தவெக மாறுவதே அவர்களைப் பரவசம் கொள்ள வைக்கிறது


திமுகவின் பேயுரு தரும் பரவசம்

இன்னும் ஒரு படி சென்று இதை ஒரு அழிவின்பம் எனலாம். திமுகவை விடக் கூடுதலான திமுக தோன்றும்போது, அது (திமுக எதிர்ப்பு நோக்கில் செய்யப்படுவதால்) திமுக அல்லாமலும் ஆகும்போது அங்கு திமுகவின் பேயுரு (spectre) தோன்றுகிறது. இதைக் காண்கையில் விஜய் ரசிகர்களுக்கும் திமுக எதிர்ப்பாளர்களுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் சிலநேரங்களில் பொதுப்பார்வையாளர்களுக்கும் ஒரு கிளர்ச்சி ஏற்படுகிறது. இந்த அழிவின்பத்தை நான் நகலையும் (தவெக) அசலையும் (திமுக) சேர்த்து ஒற்றை உடலில் பார்க்கையில் வரும் திகைப்பினால் வருவது என்றும் கூடக் கூறுவேன். இரட்டை வேடப் படங்களில் ஆள்மாறாட்ட நகைச்சுவைக் காட்சிகள் வரும்போது நாம் விழுந்து விழுந்து சிரிப்பது இந்த விருப்பத்தினால்தான்


இதன் இன்பம் மக்களை ஆட்கொள்ளும்போது அவர்கள் அதில் நிறைவுகொள்கிறார்கள். இதைச் சரியாகப் புரிந்துகொள்ள நாம் சமூகவலைதள உணவு ரெவ்யூயர்களிடம் சென்றால் போதும் - அவர்கள் ஒரு உணவை ரசித்து உண்டுஆஹா ஓஹோஎனும்போது நம் முன் உணவு இல்லாதபோதும் உணவை உண்பதைவிட மிகுதியான இன்பம், பரவசம் நமக்குக் கிடைக்கிறது. இது பார்வையின்பம் அல்ல. இது இல்லாத ஒன்று தற்காலிகமாக ஏற்படுத்தும் இடைவெளியை நாம் முழுமையாக நிரப்பும்போது கிடைக்கும் இன்பம். தான் செய்வதெல்லாம் உண்மை, சரி எனும் நம்பிக்கையுடன் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இதைச் செய்யும்போது நமக்கு இது வருவதில்லை. ஆனால் தான் செய்வதெல்லாம் நடிப்பு எனும் தோரணையில் தற்போதைய முதல்வர் விஜய் செய்யும்போது வருகிறது.


இரட்டையர்களின் சாகசம்


காங்கிரஸும் விசிகவும் பிற கூட்டணிக் கட்சிகளும் தவெக ஆட்சியில் பங்கேற்றால் மேற்சொன்னதிட்டத்தின்முதற்கட்டம் நிறைவுபெறும். அடுத்து, திமுக இந்த மோதலிலே இல்லை, அது தவெகவின் நகல்தான் எனப் பிரச்சாரம் மூலம் சித்தரிக்கப் பார்ப்பார்கள். இதைப் புரிந்துகொள்ள நீங்கள் டூமாவின் The Man in the Iron Mask படித்தால்போது. அல்லது சாப்ளினின் The Great Dictator, சிவாஜியின் "உத்தம புத்திரன்" போன்ற படங்களைப் பார்த்தால் போதும். இக்கதைகளில் உள்ளது இரட்டையர் உருவக வழக்கு (doppelganger trope). அதாவது மன்னரின் இடத்தில் அவரது தவறிப் போன இரட்டையரைக் கொண்டு வருவார்கள். மன்னர் திரும்ப வந்து தன் இடத்தைக் கோரினால் நீ அவர் அல்ல, நீ வேறு ஆள் என்பார்கள். இப்போது பார்க்கக் கூடியவர்களுக்கும் இருவரும் அசல் அல்ல, நகல்தானே எனத் தோன்றும். இதுதான் இரட்டையரின் மயக்கம். ஒரே போன்ற இரண்டு நிலைகளை, தோற்றப்பாடுகளைக் காட்டினால் அவற்றில் எது அசல், எது நகல் எனக் கேட்க மாட்டோம். இரண்டுமே ஒன்றுதானே, ஆகையால் முதலாவது என ஒன்று இல்லை, அசலானது என ஒன்று இல்லை என்று தோன்றும். ஒரு கட்டத்தில் இடமே (அரியணை) உண்மையைத் தீர்மானிக்கும்


ஒரு கட்சி தோன்றுகிறது, அது கட்சி அல்லாமலும் இருக்கிறது. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து ஆள்கிறது. ஆனால் அது ஆட்சி செய்வதுமில்லை. தவெகவாக அது இருக்கிறது. ஆனால் திமுகவும் இருக்கிறது. கூடுதல் திமுகவாக பாவனை செய்யுந்தோறும் அது கூடுதல் தவெகவாகி விட்டதாக மக்களுக்குத் தோன்ற கொண்டாடுகிறார்கள். ஏனென்றால் ஒரு கட்சி தான் இருப்பதாக பாவனை செய்யும்போது அது மறைந்து வெளிப்படும் திருடன் (ஆட்சியில் இல்லை) போலீஸ் (ஆளுகிறோம்) ஆட்டத்தை ஆடுகிறது. அப்போது மக்கள் தாம் விடுதலையாக இருப்பதாக உணர்கிறார்கள். அரசின்மையின் விடுதலையும் இவ்வாறு இந்த ஒப்புருவாக்கத்தினால் (simulation) மக்களுக்கு கூடுதல் பொழுதுபோக்காகிறது. நீங்கள் வேறெந்த ஆட்சியும் இப்படி ஒவ்வொரு செயலையும் ஒரு ரியாலிட்டி ஷோவாக்கிப் பார்த்ததில்லை. பாஜக கூட இந்தளவுக்குப் போனதில்லை. இதன் ஒரு முக்கிய பிரச்சினை இவர்கள் எதையும் பொறுப்பேற்க மாட்டார்கள் என்பது. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரும் விஜய்யிடம் வெளிப்பட்ட திமுக எதிர்ப்பு கருத்தியல் அதைத்தான் காட்டியது - “நாங்கள் திமுகவாக இருப்போம், ஆனால் நாங்கள் செய்யும் தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது, அது திமுகதான்.”: திமுக கஜானாவைக் காலி செய்தது. திமுக அறிவித்த தூர் வாரும், வண்டல் மண்ணெடுக்கும் திட்டத்தை அவர்கள் சரியாகச் செயல்படுத்தவில்லை. நாங்கள் அதை எங்கள் பெயரில் திட்டமாக மறு-அறிவிப்பு செய்கிறோம். எதிர்காலத்தில் அது சரியாக செயல்படவில்லை என்றால் அது திமுகவால்தான். திமுகஇன்னும்அவ்வாறு சொதப்பவில்லை என்பதால் இத்திட்டம் நன்றாகவேஇதுவரைக்கும்நடக்கிறது. கேட்கவே குழப்பமாக இல்லை? இப்படித்தான் இருக்கும் ஒத்திருவாக்கக் கட்சியின் ஆட்சிஆனால் சில அறிவுஜீவிகள் இப்போதே இதை ஏற்றுக் கொண்டு விட்டார்கள்

நகலாக்க அரசியல் விளையாட்டின் வரலாறு

நகல்களின் இயல்பு அவற்றுக்கு தன்னியல்பு இல்லையென்பதே. தன்னியல்பு இன்மையே அவற்றின் வலிமை. தலைவர் எந்தப் பிரச்சினைக்கும் கருத்து சொல்லாமை, எல்லாவற்றையும் தலைவர் பார்த்துக் கொள்வார் என்பது எல்லாம் இத்தகைய அமைப்புகளின் 'இயல்புதான்'. திமுக என ஒன்று இல்லாவிடில் அவர்கள் வேறு ஒரு பெரிய அமைப்பை, கட்சியைப் போலச் செய்வார்கள். காலி பண்ணுவார்கள். இப்போதே அவர்கள் கேரளா, வடமாநிலங்கள் என்று ரீல்ஸ்களைப் பரப்பி ஒரு காங்கிரஸ் குளோனாக தவெகவை மாற்ற முடியுமா எனப் பார்க்கிறார்கள்


இது வரலாற்றில் ஏற்கனவே நடந்துள்ளது


  1. நான் விஜய்யிடம் ஹிட்லரின் ஆளுமைக் கூறுகள் உண்டு என ஏற்கனவே எழுதியுள்ளேன். ஹிட்லரின் தேசிய சோஷலிஸ ஜெர்மனிய தொழிலாளர் கட்சி (National Socialist German Workers' Party) அக்காலத்தில் தன் எதிரிகளாக கம்யூனிஸ்டுகளைக் கண்டது. ஆனால் ஹிட்லர் நேரடியாக கம்யூனிஸ்டுகளை எதிர்க்கவில்லை. மாறாகப் போலச் செய்தார். முதல்வேலையாக அவர் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களான தொழிலாளர்களைத் தன்வயப்படுத்தும் நோக்கில் முதலீட்டியத்திற்கு எதிரான கதையாடல்கள், தொழிலாளர் குறியீடுகளை, சோஷலிஸ சொல்லாடல்களை, புரட்சிகர அழகியலை, மக்கள் நல உத்தரவாதங்களைப் போலச் செய்தார். இதைக் கண்ட தொழிலாளர்கள் - கம்யூனிஸ்ட் கட்சியின் பேயுருவைக் கண்டு பரவசமுற்று - இந்த நிகழ்த்துதலில் இணையத் தொடங்கினர். ஹிட்லர் இவர்களைத் தன் வசம் கொண்டு வந்து கம்யூனிஸ்ட் கட்சியைப் பலவீனப்படுத்தி விட்டு அவர்களைத் தாக்கி அழித்தார், தடை செய்தார். அடுத்து அவர் இத்தொழிலாளர்களை தீவிர தேசியவாத, இனவாத அரசியலை நோக்கித் திருப்பினார் என்று வரலாற்றாசிரியர் இயன் கெர்ஷா சொல்கிறார்.    
  2. இத்தாலியில் முசோலினியும் இதையேதான் செய்தார்
  3. அர்ஜெண்டினாவில் 1940களில் தோன்றி மிக நீண்ட காலம் (80 ஆண்டுகள்) ஆட்சி செய்தவர்களே பெரோனிஸ்டுகள். யுவான் பெரோன் என்பவரே பெரோனிஸம் எனும் இந்தக் கருத்தியலை உருவாக்கினார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இடதுசாரி பரப்பியல்வாத அரசியல் என்றும் பாசிச அரசியல் என்றும் இது ஒரே சமயத்தில் அறியப்படுகிறது. மைய-இடது என்றும் மைய-வலது என்றும் ஒரேசமயத்தில் கூறும்படி இவர்களுடைய கட்சியில் தீவிர இடதுசாரிகளும், கடுமையான இடது எதிர்ப்பு வலதுசாரி பாசிஸ்டுகளும் இருப்பார்கள். இந்த முரணைத் தாண்டி பெரோனிஸ்டுகளிடம் கல்ட் அமைப்பின் இயல்பு, தீவிர தேசியவாதம், தாராளவாத எதிர்ப்பு, கம்யூனிஸ எதிர்ப்பு போன்ற பாசிசக் கூறுகள் வலுவாக இருந்ததாக  மார்க்கஸ் பால்கோன் தன் கட்டுரையில் சொல்கிறார் (Peronism

The Rise and Persistence of Fascism in Argentina). சுவாரஸ்யம் என்னவென்றால் தொழிலாளர் நலன், மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவையும் இவர்களுடைய கொள்கையில் இருக்கும். நாம் மைய-இடது கட்சிகள் வலதுசாரிப் பண்புகளை உள்வாங்கியதைக் கண்டுள்ளோம் (டோனி பிளேரின் லேபர் கட்சி, இந்தியாவில் காங்கிரஸ் கட்சி, ஓரளவுக்கு தமிழ்நாட்டில் திமுக). ஆனால் பெரோனிஸக் கட்சி அவ்வாறானது அல்ல. அது உள்வாங்குவதோ செரிப்பதோ இல்லை. அது எல்லா பக்கங்களிலும் இருப்பதாகப் பாவனை செய்து அதிகாரத்தைக் குவித்து மக்களைச் சுரண்டியது என்கிறார் பால்கோன்

விஜய் ஒரு பக்கம் லாட்டரி மார்டின் குடும்பத்தை வைத்துக் கொண்டே ஊழலற்ற ஆட்சியைக் கொடுப்பது, பெரும்பணக்காரரான ஆதவ் அர்ஜுனா பாட்டாளியாகவும் இருப்பது, கல்வி அமைச்சர் ராஜ் மோகன் ஒரே சமயத்தில் தான் புது வீட்டுக்குக் குடிபோனதாக காணொளியைத் தன் மனைவியுடன் வெளியிட்டுக் கொண்டு தான் வாடகை வீட்டில் வசிப்பதாகவும் கூறி இரண்டுமே ஒரே சமயத்தில் சாத்தியமில்லாததால் அவர் எந்த வீடுமே இல்லாதவராக மாறியது, விஜய் ஒரே சமயத்தில் டாஸ்மாக் கடைகளை மூடிக்கொண்டும் திறந்து கொண்டும் இருப்பதாகச் செய்திகள் வருவது, கடைகள் திறந்தும் மூடியும் ஒரே சமயத்தில் இருப்பதால் கடைகளே இல்லை என அவரது ஆதரவாளர்கள் நம்புவதும், மது விற்பனையாளர்களும் பயனர்களும் புகாரின்றி எதுவும் மாறவில்லை என நம்புவதும் என தவெக பெரோனிசத்தையும் கடந்த அடுத்த நிலை குழப்படி பாசிசக் கட்சியாக உள்ளது. இக்கட்சியில் அமித் ஷாவுக்கு நெருக்கமான கிரானைட் கொள்ளையர், தொழிலதிபர் விஷ்ணு ரெட்டியும் ஆட்சியமைக்க விஜய்யுடன் போவார், காலில் செருப்பில்லாமல் எம்.எல். பஸ்ஸில் ஏறியும் போவார்.

வைரஸ் தாக்குதலும் அணுக்களின் தற்பாதுகாப்பும்

வைரஸ் போன்ற நுண்கிருமிகள் இப்படித்தான் நம் உடலில் உள்ள ஆரோக்கியமான அணுக்களை குளோன் செய்து தம்மைப் பெருக்கும் (அதாவது அணுவைக் கடத்தி தன் மரபணுவைக் கொண்டு அதன் புரத உற்பத்திக் கட்டமைப்பைத் தன் தேவைக்காகப் பயன்படுத்தும்.). மனிதர்களிலும் இத்தகைய நடத்தை உண்டு. தமிழில் இதை பிராமணியம் என்கிறார்கள். எனக்கு பிராமணியம் என்பது சரியான சொல்லாடல் அல்லவென்று தோன்றுகிறது. இதை நகல் உயிரியச் செயல்பாடு என்பதே சரிபோத்ரியர் இந்த நகல் செயல்பாட்டின் நோக்கம் உண்மையை மறைப்பதல்ல, உண்மை இல்லை என்பதை மறைப்பதே என்றார். அதாவது நாம் இங்கு தமிழ் தேசியம், மாநில சுயாட்சி, மதசார்பின்மை, மக்கள் நல அரசியல், இந்தித் திணிப்பு எதிர்ப்பு உள்ளதாக நம்பும்போதே நாம் நம்புவது சரிதானா எனும் ஐயத்துடனே இருப்போம். அதேநேரம் இல்லையென்றும் நம்மால் வரையறுக்க இயலாது. இதை போத்ரியர் ஒப்புருருவாக்கம் (simulation) என்கிறார். ஒரு அசலுக்கு ஒப்பாக ஒன்றை உருவாக்கி அதைக் கொண்டே அசலை இல்லாமல் ஆக்குவது


இதை இப்படிப் புரிந்துகொள்ளலாம் - ஒரு அரசியல் கூட்டம் நடக்கிறது. சிலர் அதை நேரில் பார்க்கிறார்கள். நீங்கள் அதை காணொளியாகப் பார்க்கிறீர்கள்அடுத்து  ஒரு அரசியல் கூட்டம் நடக்கிறது. அதை யாருமே நேரில் பார்ப்பதில்லை. காணொளியாக மட்டுமே பார்க்கிறார்கள். எல்லாரும் காணொளியைப் பற்றி மட்டுமே பேசுவதால் அது நிஜத்தின் இடத்தை எடுத்துக் கொள்கிறது. மெல்ல மெல்ல நாம் அது நடந்தால்தான் என்ன நடக்காவிட்டால் தான் என்ன, காணொளிதான் இருக்கிறதே எனும் இடத்தை அடைகிறோம். போத்ரியர் தன் “Simulacra and Simulations” நூலில் லெட்ரா எனும் தத்துவ ஞானியை மேற்கோள் காட்டுகிறார்: ஒருவர் தனக்கு வியாதி உள்ளதாக பாவனை செய்யும்போது அவரும் அசலான நோயாளியும் அங்கு (இருமையாக) இருக்கிறார்கள். ஆனால் அவர் தனக்கு நோயுள்ளதாக நம்பி நோய்க்குறியை வெளிப்படுத்தினால் என்னவாகும்? ஒரு குழந்தை தனக்கு ஜுரம் வந்துவிட்டதாக நடித்து உடலைக் கொதிக்க வைக்கிறது. அது வாந்தி எடுக்கிறது. இப்போது குழந்தைக்கு ஜுரம் உள்ளதா இல்லையா? ஜுரம் உள்ள குழந்தைக்கும் இக்குழந்தைக்கும் எதாவது வேறுபாட்டைக் கண்டறிய இயலுமா? இயலாது. நோய்த்தாக்குதல் இல்லையென ஒரு ரத்தப் பரிசோதனை மூலம் அறிவிக்கலாம். ஆனாலும் ஜுரம் வந்த குழந்தைதான் அது. ஜுரத்தின் அறிகுறிகளை விளைவித்ததன் மூலம் ஜுரம் எனும் உண்மையையே இல்லாமல் பண்ணிவிடுகிறது குழந்தை


 இரண்டு விசயங்கள் வேறுபாடே இல்லாதபடிக்கு ஒன்றாகத் தெரிவதாலே நாம் இந்த முடிவுக்கு வருகிறோம், நம் அறியாமையால் அல்ல என்பதை கவனிக்க வேண்டும். உண்மையிடம் (திராவிட கட்சிகள்) இல்லாத ஒரு மிகையும், தளுக்கும் நகலிடம் (தவெக) எப்போதும் இருக்கும் (ஒரு தலித்தை அமைச்சராக்கிய முதல் கட்சி எனப் பொய்ப் பிரச்சாரம் செய்வது, விசிகவை அமைச்சரவையில் இணைத்துவிட்டால் அதைக் கொண்டு அது தன்னை திமுகவை விட மேலான திமுக என நிரூபிக்கப் போவது). நமக்கு உண்மையை விட நகலே வசதியாக, கவர்ச்சியாகத் தோன்றக் கூடும். இது ஏனென்றால் உண்மை நம்மை ஒரே இடத்தில் கட்டிப் போடுகிறது. அதில் ஒருவித இறுக்கம் உண்டு. ஆகையால் நாமும் இந்த ஒப்புருவாக்கத்தில் ஈடுபடுகிறோம். விரைவில் நகல்கள் மட்டுமே குவிந்த நகலகமாக மாநிலமே மாறும்போது நாம் அஞ்சத் தொடங்குகிறோம். இதனாலே உண்மை இனிமேல் உண்மையல்ல என்றார் போத்ரியர். உண்மை அழிந்துவிட்டது எனப் பொருள் இல்லை. உண்மையும் தன்னைப் போல ஒரு கட்டமைப்பே என நகல் நம்மை நம்ப வைத்துவிட்டதால், நகலின் தொடர் இருப்பே இதை நிரூபிப்பதால் நமக்கு உண்மையே உண்மையல்லாமல் ஆகிவிட்டது


திமுகவுக்கு இது மிகப் பெரிய நெருக்கடி என்று தோன்றுகிறது. திமுக சில வழிகளில் இதை எதிர்கொள்ள முடியும். உயிரியல் என்ன சொல்கிறது? ஒரு அணுவை ஒரு வைரஸ் கைப்பற்றினால் பிற அணுக்கள் என்ன செய்யும்?

1) அவை பிற அணுக்களை ரசாயனம் கொண்டு எச்சரிக்கும். திமுக ஆகையால் இச்சிக்கலைக் குறித்து பேச ஆரம்பிக்க வேண்டும்


2) அணுக்கள் தன் புரத உற்பத்தியை குறைக்கும் / நிறுத்தும். இது வைரஸின் பரவலை மட்டுப்படுத்தும். திமுக தன்வசம் உள்ள நகலெடுக்கத்தக்க விசயங்களை மட்டும் - கருத்தியலை, அரசியல் தோரணைகளை - மிகையாகப் பேசி வெளிப்படுத்தாமல் குறைக்க வேண்டும்


3) அணுக்கள் தம்மை அடையாளப்படுத்துவதற்காக சில அடையாளக் குறிகளை அணிந்து கொள்ளும். திமுக தம்மிடம் உள்ளதில் தவெகவால் நகலெடுக்க இயலாதவை எவை எனக் கணித்து அவற்றைப் பிரதானப்படுத்த வேண்டும். உதாரணமாக தெருவில் இறங்கிப் போராடுவது, மறியல் செய்வது, தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையைப் போன்று தீவிர தேசியவாத அரசியலைக் கையில் எடுப்பது, இப்போதைய கார்ப்பரேட் பாணியைக் கைவிடுவது (திமுகவை விட தவெக பயங்கர கார்ப்பரேட்டாக உள்ளது). 


4) இவை எதுவுமே வேலை செய்யவில்லை என்றால் வைரஸ் பரவலைத் தடுக்க அணுக்கள் தற்கொலை செய்துகொள்ளும். தம்மையே அவை அழித்தால் வைரஸும் அழிந்தே ஆகும். இதன் பொருள் மரணம் அல்ல. உடல் புத்திருவாக்கம் பெற அணுக்களின் தற்கொலை அவசியம்திமுக தன்னை முழுக்க ஒரு புது கட்சியாக மாற்றியமைக்க வேண்டும். இது நடக்குமா என்று எனக்குச் சந்தேகம் உண்டு. ஆனால் அதிமுகவிடம் தன் கட்சியின் உறுப்பினர்களையும் சிறு தலைவர்களையும் கூடவே ஆட்சியையும் இழந்த நிலையில் திமுக இவ்வாறு கலைஞர் தலைமையில் "செங்கல் செங்கல்லாக" தன்னைப் புத்துருவாக்கம் செய்ததாக அருணன் "எம்.ஜி.ஆர் - நடிகர் முதல்வரான வரலாறுஎனும் நூலில் எழுதியுள்ளார். ஆக, இது சாத்தியமே


மிமிக்றி அரசியல் மக்களாட்சிக்கு கேடானது

நான் இதையெல்லாம் திமுக அனுதாபியாகக் கூறவில்லை. திமுகவின் இடத்தில் எக்கட்சி இருந்தாலும் இதையே சொல்வேன். ஏனென்றால் மிமிக்றி மக்களாட்சி அரசியலுக்கு கேடானது. இதனால் இப்போதைக்கு சில சிறு கட்சிகளுக்கு அதிகாரம் கிடைக்கலாம். ஆனால் தவெக விரைவில் தலித் அரசியல், மார்க்ஸியம், தமிழ் தேசியம், மாநில தன்னுரிமை, பெண்ணுரிமை, விவசாயிகள், மக்கள் நலக் கொள்கை, மதசார்பின்மை எனக் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் குளோன் செய்து அழித்துவிடும். நம் ஆட்களும் இப்போதைக்கு அவை ஏற்கனவே காலிக் குறிப்பான்கள்தாமே என நியாயப்படுத்தக் கூடும். குறிப்பான் காலியாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒரு மக்களாட்சி குடிமைச் சமூகமாக நம்மை 'காலி' பண்ணிவிடுவார்கள் என்பதுதான் பிரச்சினையே.

ஓஷோவில், நித்தியானந்தா, ஜக்கி வாசுதேவ்விஜய்

 நான் ஆரம்பத்தில் இதைக் குறித்து எழுதிய கட்டுரை ஒன்றில் தவெகவை ஒரு கல்ட் அமைப்பு, அது கட்சியல்ல என்றேன். பொதுவாகவே கல்ட் அமைப்புகளுக்கு வசீகரமான தலைமையும், தீவிர சடங்குகளும் இருக்கும் (நம்பிக்கைகளை சடங்காக மாற்றி விடுவார்கள்), அமைப்புக்குள் யாரையும் சிந்திக்க அனுமதிக்காமல் தலைவரை போலச் செய்யக் கேட்பார்கள். இந்த தலைவருக்கும் சுயசிந்தனை இருக்காது. அவரும் ஒரு நகல்தான். இதை நீங்கள் எந்த கல்ட் அமைப்பை எடுத்துப் பார்த்தாலும் புரியும் (ஓஷோ, ஜக்கி). "டிரான்ஸ்" போன்ற படங்களைப் பார்த்தாலும் புரியும். இவர்கள் ஏற்கனவே உள்ள ஒரு அமைப்பைப் (மதம்) போலச்செய்து ஒரு நகல் கட்டமைப்பை (கல்ட் ஆன்மீக அமைப்பு) உருவாக்குவார்கள். மக்களை ஏமாற்றுவார்கள். இவ்வமைப்புகள் எப்போதுமே "காலியாகத்தான்" இருக்கும். ஆனால் பிரச்சினையே நகல் அமைப்புகள் எப்போதுமே சமூகத்துக்கு கேடானவை என்பதுதான்.     


மக்களாட்சியின் அடிப்படையே தனிமனித அடையாளம்தான். அங்கிருந்துதான் வாக்குரிமை பிறக்கிறது. வாக்குரிமையில் இருந்து நிபந்தனைக்குட்பட்ட சமத்துவம் வருகிறது. தனிமனித எண்ணம் / தன்னிலையே இதன் மையம். கல்ட் அமைப்புகள் இதை அழித்துவிடும். அவை முரணியக்கத்தை ஒழித்துவிடும். ஆகையால் தவெக போன்ற ஒரு கட்சி மக்கள் வாக்களிப்பதை ஒரு வெற்றுச் சடங்காக்குவார்கள். அது ரீல்ஸ் பதிவேற்றுவதற்கு ஈடான ஒன்றாக்குவார்கள். இருப்பதைப் போலச் செய்து இல்லாத ஒன்றை உருவாக்கும்போது கிடைக்கும் இன்பத்தை பிரதானப்படுத்துவார்கள். மக்கள் செயல்படும் அரசைவிட அதை நிரந்தரமாக ஒத்தி வைக்கிற (தெரிதாவின் differrance - differ + defer - வேறுபடு, தள்ளிப்போடு) அரசை மனதுக்குள் விரும்ப ஆரம்பிப்பார்கள். இது ஒரு பின்நவீனத்துவ பிரச்சினை. நம் இளைஞர்கள் எந்த வேலையையும் செய்ய விரும்பாமல் எதிலும் தங்க விரும்பாமல் நகர்ந்து கொண்டே இருக்கிற பின்நவீனப் பண்பாட்டில் வருகிறார்கள். அதை அவர்கள் அரசியல் நிர்வாகமாகப் பார்க்க விரும்புகிறார்கள். ஒன்றை முடக்கும்போது, அப்போது தோன்றும் இடைவெளியை கொண்டாட்ட வெளியாக்கும்போது அவர்கள் அதிகார இன்பத்தை அனுபவிக்கிறார்கள். வாக்களிப்பதை அவ்வாறு மாற்ற முடியும் என விஜய் அவர்களுக்குக் காட்டிக் கொடுத்து விட்டார். மக்களாட்சியின் அடிப்படையையே குழிதோண்டிப் புதைப்பது இது. இயல்பாகவே மக்களாட்சியின் பேயுருவம் உங்களை முற்றதிகாரத்தை நோக்கியே நகர்த்தும். அதுவே வரலாறு (ஹேனா ஆரெண்ட் தன் Origins of Totalitarianism நூலில் எப்படி இந்த மனநிலை ஹிட்லரிடம் கொண்டு சேர்த்தது என்பதை அந்த கால ஜெர்மானிய வரலாற்று, சமூகப் பண்பாட்டுச் சூழலை வைத்து விளக்குகிறார்.). நீங்கள் எந்த கல்ட் அமைப்பையும் எடுத்துப் பாருங்கள் - அங்கு முற்றதிகாரம் மட்டுமே இருக்கும். இருக்க முடியும். இன்று நாம் ஒருப் கல்ட் அமைப்பிடம் ஆட்சியை ஒப்புவித்து விட்டோம்


இதனாலே நான் தவெகவை மக்களாட்சிக்கு எதிரான ஒரு அலையென நினைக்கிறேன். இந்த வைரஸ் ஒரு கட்சியை, அமைப்பைத் தாக்கினால் நாம் அவர்களுக்காக பிராத்தனை செய்யலாம். அவர்கள் தம்மைப் பாதுகாப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். அவர்களை ஆதரிக்கலாம். கொரோனா தொற்று கூட இவ்வளவு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என நினைக்கிறேன். மற்றபடி, அடுத்தடுத்து நடப்பவற்றைப் பார்த்தால் கலக்கம் ஏற்படுகிறது.

முடிவாக ஒரு ஒப்புதல் வாக்குமூலம்

நான் ஒரு கட்சி அனுதாபி அல்லன் என்று கூறிவிட்ட நிலையில்நீ எத்தரப்பை எடுத்துக் கொண்டு இவ்வளவையும் சொல்கிறாய்?’ என்று கேட்டால் ஒருவர் தன்னை ஒரு கட்சியின் அனுதாபி அல்லன் என்று கூறுவதே அவர் தன்னை குறிப்பிட்ட கருத்தியல்களுக்கு வெளியே நின்று செயல்படும் முகமை கொண்ட மனிதராகக் காட்டிக் கொள்ளத்தான், அதுவே ஒரு கருத்தியல்தான் என்று ஸிஸேக் சொல்வாரே அதையே என் பதிலாகவும் வைப்பேன். அவ்விதத்தில், என்னுடைய கருத்தியல் தனிமனித முகமையையும், சமத்துவத்துவமும் இந்த உலகில் இன்னும் கொஞ்சம் மீந்திருக்க வேண்டும் என்கிற ஒரு கருத்தியல், அதை அழிக்க நினைக்கிறவர்களை மூர்க்கமாக எதிர்த்தடிக்க விரும்புகிற கருத்தியல் என்று கூறுவேன்.


நன்றி: உயிர்மை, ஜூன் 2026

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...