முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

 




"ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா?

பணம் மீதான அக்கறைதான் நம்மை வேலையிலும் அக்கறையாக இருக்க வைக்கிறது. அதுவே குடும்பத்தின் மீதும் அக்கறை காட்ட வைக்கிறது. அதுவே நம் பெற்றோர், இணையர், குழந்தைகளிடத்தும் அக்கறை காட்ட வைக்கிறது. கேட்க வினோதமாக இருந்தாலும் இதுவே உண்மை. பாசம், அன்பு, ஆர்வம், லட்சயம் எல்லாம் பிறகுதான் வருகின்றன. பணம் நம்மை ஓரிடத்தில், ஒரு குறிப்பிட்ட கால ஒழுங்குக்குள் இருக்க வைக்கிறது. இது இன்றி மேற்சொன்னவை சாத்தியமில்லை. பணத்தை உடைத்ததும் மிச்சமெல்லாம் பொலபொலவென உதிரத் தொடங்கும். ஆனால் இதுதான் அசலான கலகமா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு. ஏனென்றால் அங்கு நாம் பணத்தை 'உடைப்பதில்லை', பணத்தின் பிடிமானத்தை மற்றொருவரிடம் கடத்தி விடுகிறோம். இன்னொருவர் நமக்காக செலவு செய்கிறார். அவர் தான் பணத்தை உடைக்கும் அதிகாரத்தை நமக்காக தியாகம் செய்கிறார்.

அசலான, தீவிரமான கலகம் மொழிக்குள் இருந்து தோன்றுகிறது என நினைக்கிறேன். குறியீடுகளை உடைப்பது (சர்ரியலிஸ இயக்கம்), அகக்கட்டமைப்புகளை தகர்ப்பது (தெரிதா முயன்றது), சாராம்சத்தை மறுப்பது (நாகார்ஜுனரும் எதிர்-எழுத்தாளர்களும் முயன்றது) மிக மிக கடினமான செயல்கள். இலக்கியம் எப்போதுமே எதாவது ஒரு சாராம்சவாதத்தை நோக்கியே பாய்கிறது. இலக்கியத்தில் கதையே / கவிதையே தோன்றாமல் கலைப்பது ஒரு பெரிய கலகம்தான். ஆனால் அப்படிச் செய்யும்போது ஒரு படைப்பாளியாக நம்மை எப்படி முன்வைப்பது? நம்மை எப்படி வாசகரிடம் படைக்கும் தெய்வமாகச் 'சித்தரிப்பது'? இவை மிகப்பெரிய இருத்தலிய நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றன. அதேநேரம், பணத்தை நாம் எதிர்த்து கலகம் செய்யும்போதோ நம்மால் திரும்ப இலக்கியத்தினுள்ளோ பண்பாட்டுக்குள்ளோ குடும்பத்துக்குள்ளோ சமரசங்களுடன் அடைக்கலம் பெற முடிகிறது.

"ஆபீஸ்" நாவலில் வருகிற விக்கிரமாதித்யனை, நம் நேரடி அனுபவங்களில் வருகிற விக்கிரமாதித்யனை நம்மால் ஒரு கலகவாதியாக சித்தரிக்க முடியாது. அவர் வேலைக்கு எதிராக இன்னொரு திசையில் ஓடிக்கொண்டிருக்க முயன்றிருக்கிறார். ஏனென்றால் வேலை ஒரு செயல் அல்ல. அது ஒரு நவீன காலத்தில் எந்திரமயமாக்கலால் விளைந்த விழுமியம். அது வேளாண் சமூகத்திலும் இருந்தது என்றாலும் இந்தளவுக்கு நம் மனதுக்குள் அது நுழைந்து ஆட்டிப் படைக்கவில்லை. வேலையை நம் மனதுக்குள் நிறுத்தும்போது எழுதுவது, வாசிப்பது கூட அவசியமில்லைதான். சும்மா எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருக்கலாம். பட்டும்படாமல் இருக்கலாம். ஆனால் விக்கிரமாதித்யனால் அப்படியே இருக்கவும் முடியாது. அவர் கவிதை எழுத உட்கார்கிறார். வேலை குறித்த பிரக்ஞையில் இருந்து வெளியேற அது உதவுகிறது. குடும்பத்துடன் இருக்கிறார், வேலைக்கு தற்காலிகமாகத் திரும்புகிறார், குடும்பம், வேலை குறித்த பிரக்ஞைகளில் இருந்து வெளியேறவும் கூடுதலாக கசப்படையவும் இது உதவுகிறது. நம் மனம் இப்படித்தான் செயல்படும் - முழுமையாக உடைக்காத ஒன்றுக்குள் இருக்கையில் நாம் அதைச் செய்தே வெளியேற முடியும் என நினைப்போம். இதுவே ஒரு மிகப்பெரிய போராட்டம்தான் என எனக்கு இப்போது "ஆபீஸ்" நாவலை வைத்து யோசிக்கையில் தோன்றுகிறது. அந்நாவலின் கருவே வேலையின் இடைஞ்சல்தானே. அதனாலே தெரிந்தோ தெரியாமலோ விக்கிரமாதித்யனும் தருமு சிவராமுவும் ஒரு பக்கமும் கல்யாண்ஜியும் கலாப்ரியாவும் சமயவேலும் சுப்பிரமணிய ராஜுவும் இன்னொரு பக்கமும் எதிர்மறையாகவும் நேர்மறையாகவும் வேலையுடன் உழன்று கொண்டே இருக்கிறார்கள். இவர்களை வி.மா சந்திக்கும்போது வேலை முடித்து வீட்டுக்குத் திரும்புகிறார்கள். அல்லது விடுமுறையில் இருக்கிறார்கள்.
சுந்தர ராமசாமி இன்னொரு சுவாரசஸ்யமான பாத்திரம் - அவருக்கு வேலை கட்டாயம் அல்ல, கடமை; கடமையை ஒழுங்காக செய்தால் இலக்கியத்தில் நிம்மதியாக உழைக்கலாம் என நம்புகிறவர். வி.மா இவர்களிடம் இருந்து மாறுபட்டு வேலையில் இருந்து கொண்டே தன் நேரத்தை இலக்கியத்தில் உழைக்க மட்டுமே செலவழிக்க முயன்று போராடுபவர். அவருடைய பிரச்சினை வேலையில் இருந்து விடுபடுவது அல்ல, பிடித்த வேலையை (இலக்கியம்) மட்டுமே செய்வது. ஆனால் பிடிக்காத வேலை (ஆபீஸ்) அவருக்கு எதிரில் இருந்து மிரட்டிக் கொண்டே இருக்கிறது. பணமாக அல்ல, அரூபமாக அவரது மனதுக்குள் இருந்து. அதனாலே அவர் வன்முறை மிக்கவராக மாறுகிறார். எடுத்தெறிந்து பேசுவது, அலுவலகத்தில் சின்னச்சின்ன கலகங்கள் செய்வது (விடுப்பெடுப்பது, அதிகாரியின் முன்னால் சிகரெட் பிடிப்பது) என ஒரு பக்கமும், சக-இலக்கியவாதிகளின் பொறுப்பின்மையைக் கண்டித்து கடுமையாக எழுதுவது என இன்னொரு பக்கமும் இருக்கிறார். இந்த இரண்டைச் செய்யும்போதும் வேலை எனும் பூதம் (இலக்கிய படைப்பாக்கம் எனும் பூதம் + குமாஸ்தா எனும் பூதம்) அவரை உள்ளே இருந்து மிரட்டிக் கொண்டே இருக்கிறது. இந்த இரண்டு பூதங்களிடமும் அவர் போராடிக் கொண்டே இருக்கிறார்.

இதுதான் இந்நாவலை முக்கியமானதாக ஆக்குகிறது. இதில் ஒரு வழக்கமான நாவலுக்கான வடிவ ஒழுங்கு இல்லை (பிரச்சினை, மோதல், டிராமா, நெருக்கடி, நிலைகுலைவு, எழுச்சி, மீட்சி). வேலை எனும் அகபூதத்துடன் அவரும் (எழுத்தாளராக) பிற பாத்திரங்களும் (சக எழுத்தாளர்களாக) மேற்கொள்ளும் சமரின்போது தோன்றும் அபத்தங்களும் நகைச்சுவையும் நாவலை சுவாரஸ்யமாகக் கொண்டு செல்கின்றன. உ.தா., தருமு சிவராமு எனும் பிரமிள் அம்பைக்கு ஒரு காதல் கடிதத்தை கவிதை வடிவில் எழுதுகிறார். (அந்தக் காலத்தில் அம்பை ஒரு அழகான புத்திசாலியான பெண் எழுத்தாளராக ஆண் எழுத்தாளர்களில் சிலரால் மனதுக்குள் கொண்டாடப்பட்டார் என்று வி.மா எழுதுகிறார்.) அம்பை அதைப் படித்துவிட்டு கவிதை நன்றாக உள்ளது, ஆனால் உன்னைக் காதலிக்க முடியாது என்று மறுத்து விடுகிறார். உடனே பிரமிள் சென்று "நான் வேணாமில்ல என் கடிதத்தைத் திரும்பக் கொடு" என்று கேட்கிறார். அம்பை அசந்து போகிறார். அவர் அதை எங்கேயோ மறந்து வைத்து விடுகிறார். பிரசுரிக்க மறுத்த பதிப்பாளரிடம் படைப்பாளி தன் படைப்பைத் திரும்பக் கேட்பதைப் போலுள்ளதல்லவா? எனக்கும் இத்தகைய அனுபவம் உண்டு.
நான் என் கல்லூரிக் காலத்தில் ஒரு பெண்ணைத் தீவிரமாகக் காதலித்தேன். அவளுக்கு அனேகமாக தினமும் பத்து பக்கங்கள் கடிதம் எழுதுவேன். பயங்கர கவித்துவமான, ஆவேசமான கடிதங்கள். என்னுடைய நம்பிக்கைகள், பயங்கள், வாழ்க்கை அவதானிப்புகள், குழப்பங்கள், கனவுகள் எல்லாம் நிரம்பியிருக்கும். அவளும் அக்கடிதங்களை வரிக்கு வரி கவனமாகப் படித்து விடுவாள். அவளுடன் பேசும்போது இப்படி எழுதிய கடிதத்தின் வரிகளை நான் மேற்கோள் காட்டி விவாதிப்பதும் உண்டு. ஒருநாள் எனக்கும் அவளுக்கும் ஏதோ அற்ப பிரச்சினையால் சண்டை. நான் அவளிடம் போய் “என் கடிதங்களை மொத்தமாகத் திரும்பக் கொடு. நான் தந்த புத்தகங்களையும் கொடு” என்றேன். அவள் அசந்து விட்டாள். அதை ஒரு பெரிய பையில் இட்டுத் தூக்கி வர வேண்டும் என்பது முதல் பிரச்சினை. அடுத்து அவை அவளுடைய சொத்து என்று நினைத்திருந்தாள். ஆனால் என் மனதுக்குள் அவை என்னுடைய படைப்பாக்கம். அதன்பிறகு நாங்கள் சமாதானமாகி பழையபடி காதலிக்கத் தொடங்கினோம். என்னால் பிரமிளைப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால் இந்த அணுகுமுறை பயங்கர அபத்தமானது. வேடிக்கையானது. சம்மந்தப்பட்ட படைப்பாளியால் மட்டும் அப்போதைக்கு தான் செய்யும் வேடிக்கை வினோதத்தைப் புரிந்துகொள்ள முடியாது. எழுத்து ஒரு வேலை மட்டுமல்ல, அது ஒரு தீராத வேலைப் பூதமாக உள்ளுக்குள் இருந்து உருட்டி மிரட்டிக் கொண்டே இருக்கிறது. அதன் காலடியில் அவன் எல்லா எழுத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கோருகிறது. அது காதலிக்காக எழுதியதோ தனக்காக எழுதியதோ. தீவிரமாகக் காதலிக்கும்போது கூட அவன் அந்தப் பூதத்துக்காகவே இன்னொரு பக்கம் பணி செய்கிறான். காதலிப்பது, பிரிவது, மனம் உடைந்து தற்கொலைக்கு முயல்வது எல்லாமே வேலைதான் அவனுக்கு. அவன் அவற்றைச் சொல்லில் வடித்தாக வேண்டும் எனப் பூதம் கோருகிறது. அதனாலே எழுத்தாளர்கள் எப்போதுமே இரண்டு பேர்களாகத் தமக்குள் உடைந்து இருக்கிறார்கள். இந்த உள்-மோதலே சில நேரங்களில் எழுத்தாளர்களைப் பைத்தியம் பிடிக்க வைக்கிறது.

இந்தப் பூதத்திடம் எழுத்தாளன் ஒப்பற்ற சுதந்திரத்தை அடைகிறான். அதைக் குறித்து சதா கவலைப்பட்டுக் கொண்டிருந்தாலும், அதனிடம் மனமுவந்து சரணடைகையிலே அவன் இன்மையை அறிகிறான். அவன் இதை விரும்புகிறான் என்பதாலே அவன் எழுத்தாளராக இருக்கிறான். எழுத்தாளர்களால் ஒருபோதும் கலகம் பண்ண முடியாது, ஏனென்றால் இலக்கியமே ஒரு ஆபீஸ்தான் என “ஆபீஸ்” நாவல் மறைமுகமாகச் சொல்கிறது. எனக்கு இதுதான் “ஆபீஸில்” சற்று கூடுதலாகப் பிடித்திருந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Counterarts இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை

"There has always been a permanent child within Kafka. Society functions as an extension of the office and the family, constantly monitoring and evaluating people and subjecting them to the examination of its rules. In other words, even when Kafka leaves home to go to work, and even afterwards, he remains within the family. Within the family, he is always a son or a brother. The family preserves itself through continuous self-surveillance and mutual surveillance. The same thing happens outside it." https://medium.com/counterarts/kafkas-diaries-735b74cd0c44

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...