முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீட்சே ஆன்லைன் வகுப்பு

 


நீட்சே ஆன்லைன் வகுப்பு

"இவ்வாறு சொன்னான் ஜாரதுஷ்டிரன்" நூல் நீட்சேயின் புத்தகங்களில் மிகவும் கவித்துவமானது. அதனாலே அது மிகவும் பிரசித்தமானது. தமிழிலும் மொழியாக்கப்பட்டு வந்தபோது பரவலாகப் படிக்கப்பட்டது. ஆனால் ஒரு சிக்கல் எழுந்தது. மக்கள் அதிலுள்ள உருவகங்களைப் புரிந்து கொள்ள இயலாமல் ஒரு கதையைப் போலப் படித்துக் குழப்பிக் கொண்டனர். அதன் எதிர்-கருத்துக்கள், எகத்தாளமான அறிக்கைகள், தலைகீழாக்கம் மக்களுக்குப் பிடித்திருந்தன. மத-எதிர்ப்பாளர்கள், இறை மறுப்பாளர்களுக்கும் அவை பிடித்திருந்தன. ஆனால் அந்நூலின் ஆழமான பொருள் கணிசமானவர்களைப் போய்ச் சேரவில்லை. நீட்சேயின் பிற நூல்களைப் படித்தும், அவரைக் குறித்து ஆய்வாளர்கள் சொல்வதைத் தெரிந்து கொண்டும் அவரது உருவகங்களைப் பார்க்கையில் முற்றிலும் வேறொரு பொருள் புலப்படுகிறது. நீட்சேயை ஷோப்பன்ஹெர், ஹசர்ள், ஹைடெக்கரின் தத்துவத் தளத்தில் வைத்துப் படிப்பதும், இருத்தலியல் கோணத்தில் விரித்துப் புரிந்து கொள்வதும் நமக்கு பெரிய மனத்திறப்பை அளிக்கக் கூடியவை. இன்னொரு பக்கம், இந்திய தத்துவங்களில் ஆர்வமுள்ளோரும் நாம் மனித பிரக்ஞை, ஆன்மீகம், அக-விழைவு (will) குறித்து என்னவெல்லாம் பேசியிருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு அதை வைத்தும் நீட்சேயை ஆழமாகப் படிக்க இயலும். சும்மா கீதையைப் படித்துக் கொண்டு அதன் நீட்சியாகக் கூட "ஜாருதுஷ்டிரனை" ஒப்பீட்டு ஆய்வு செய்ய முடியும். அதன் பூர்வ நூலான பௌத்தத்தில் இருந்து ஒப்பிட்டு வாசிக்க இயலும். ஏனென்றால் நீட்சேயும் ஷோப்பன்ஹெரும் ஹசர்ளும், ஹைடெக்கரும் இந்திய தத்துவத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு வாசித்தவர்கள்.
இன்னொன்று, பின்னமைப்பியல், பின்நவீனத்துவம் சார்ந்தும் நீட்சேயைத் தீவிரமாக வாசிக்க இயலும்.
தமிழில் 40-80கள் வரையிலும் நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் நாம் தூய இலக்கியமாக எல்லாவற்றையும் படித்தோம். திருக்குறளைக் கூட வெறுங்கவிதையாகப் படித்து "இதில் கவித்துவமே இல்லையே" என்றவர்கள் நம்மவர்கள். இதன் விளைவாக பல்வேறு அறிவுப்புலங்கள் சார்ந்து இலக்கியத்தைப் படிக்கும் பரிச்சயம் அறுந்து போனது. அதனாலே மேற்கில் இருந்து எது நம்மிடம் வந்தாலும் அதைப் பின்புலமோ தத்துவக் கோணமோ அற்று அனுபவமாகப் படிக்கக் கூடிய மோசமான வழமை தோன்றியது. நீட்சேயும் அதற்குப் பலியானார்.

என் வாசிப்பை ஒட்டி நீட்சேயை இன்னும் ஆழமாகப் படித்துப் பகிர வேண்டும் எனும் விருப்பம் எனக்கு நீண்ட காலமாக உண்டு. அவரை அறிமுகப்படுத்தும் தொடரை முன்பு எழுதி (உடல் நலப்பிரச்சினையால்) முடிக்காமல் விட நேர்ந்தது. வருங்காலத்தில் அதைத் தொடரும் திட்டம் உண்டு. தற்போதைக்கு "இவ்வாறு சொன்னான் ஜாரதுஷ்டிரன்" நூலை மட்டும் யுடியூபில் நேரலையாக விளக்கலாம் என இருக்கிறேன். அதற்கு எழுதும் குறிப்புகளையும் தனியாகப் பிரசுரிக்கிறேன்.

நான் ஒரு தத்துவ ஆய்வாளரோ தத்துவ மாணவரோ அல்லன். நான் தத்துவத்தில் ஆர்வம் உள்ள ஒரு எழுத்தாளர். ஆகையால் என்னுடைய அணுகுமுறை ஆய்வுக் கருத்துக்களின் தொகுப்பு, மேற்கோள்களின் அடிப்படையிலான விளக்கம் என்று வகுப்பறை விரிவுரையாக இருக்காது. என் வாசிப்பு, புரிதல், என் கற்பனை என்றுதான் போகும். நான் எங்கிருந்து சில புரிதல்களைப் பெற்றேன் என்பதை மேற்கோள் காட்டுவேன். நீட்சேயைப் படிப்பது ஒரு வாழ்நாள் பணி. ஆயிரக்கணக்கான நூல்களும் கட்டுரைகளும் எழுதப்பட்டும் எழுதப்பட்டுக் கொண்டும் வருகின்றன. நான் அங்கிருந்து சிறு துளியை எடுத்துக் கொண்டு வந்து பகிர்கிறேன். அவ்வளவுதான். என் இலக்கு என்னைப் போன்ற தத்துவ ஆர்வம் கொண்ட இலக்கிய வாசகர்களிடம் பகிர்வதுதான். எழுத்தாளர்களுக்கு பல்வேறு துறைகளில் ஆர்வமிருக்கும்; ஆனால் அவர்கள் துறைசார் நிபுணர்கள் அல்லர். நிபுணர்களால் சொல்ல முடியாத ஒரு தரப்பும் பார்வையும் எழுத்தாளர்களிடம் இருக்கும் என ஜெயமோகன் ஓரிடத்தில் சொன்னதை இங்கு நினைவுபடுத்துவது பயனுள்ளது. என்னுடைய வாசிப்பும் அப்படியானதே.

இனி விசயத்துக்கு வருகிறேன் - நேரலையை மாலையில் நடத்தவே திட்டம். 6-7, 7-8, 8-9 ஆகிய நேரங்களில் எது சரியாக வரும்? உங்கள் கருத்துக்களை இங்கு பகிருங்கள். புத்தகத்தை ஓரளவுக்குப் படித்து விட்டு நேரலையில் கலந்து கொள்வது பயனளிக்கும். இல்லாவிட்டால் ஒன்றும் புரியாது. நான் பவாவைப் போல கதை சொல்லப் போவதில்லை. விளக்கம் மட்டுமே. அதனால் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் அந்நூலை மேம்போக்காகப் படித்தாலே 10 நாட்களில் முடிக்கலாம். என் நேரலை ஆரம்பிக்கும் முன்பு முதல் 10 அத்தியாயங்களைப் படித்தால் கூட போதும். நேரலையில் பார்வையாளராக நீங்கள் வருவதன் அனுகூலம் பின்னூட்டத்தில் நீங்கள் உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் பகிர முடியும், அதற்கு நான் பதிலளித்து உரையாட முடியும் என்பது. வெறும் பதிவு பண்ணப்பட்ட காணொளிகளில் அது சாத்தியப்படாது. ஒரு சின்ன குழுவொன்று தொடர்ந்து என்னுட கலந்து கொண்டாலே போதும். தொடர்ச்சியாக வாரம் ஒருமுறை படித்து முடித்துவிடலாம். உற்சாகமாக என்னால் நேரலையைத் தொடர முடியும். யாரும் வராவிட்டால் நேரலையை பாதியில் விட்டுவிடுவேன்.

ஆகையால் கலந்து கொள்ள விருப்பமுள்ளோரும் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

தமிழாக்க நூலின் தொடுவழியைப் பகிர்கிறேன். வாங்கிப் படியுங்கள்: https://www.panuval.com/jarathshtra-ivaru-kurinar-10004221?srsltid=AfmBOopZO_jf-z6NDlVyE_se_rYgkVNjB8TrpoOp8pCIowVgeaYAjmcw

நேரடியாக ஆங்கிலத்தில் படிப்பவர்களுக்கு
https://ia601704.us.archive.org/5/items/thusspakezarathu00niet/thusspakezarathu00niet.pdf

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Counterarts இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை

"There has always been a permanent child within Kafka. Society functions as an extension of the office and the family, constantly monitoring and evaluating people and subjecting them to the examination of its rules. In other words, even when Kafka leaves home to go to work, and even afterwards, he remains within the family. Within the family, he is always a son or a brother. The family preserves itself through continuous self-surveillance and mutual surveillance. The same thing happens outside it." https://medium.com/counterarts/kafkas-diaries-735b74cd0c44

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...