முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேலியே பயிரை மேய்வதைப் போல...



சட்டமன்றத்தில் கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ ஆர். செல்லசாமி பேசியது எனக்குப் பிடித்திருந்தது (இவர் தன் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் கூட). சும்மா சினிமாத்தனமாகப் பேசாமல் அன்றாடச் சிக்கல்கள், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு இன்மை, தொழில் வளர்ச்சியில் அரசு காட்டும் மெத்தனம் ஆகியவற்றை (இதுவரையிலான எல்லா கன்னியாகுமரியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் புலம்புவதைப் போல) புலம்பிவிட்டு (எல்லா அரசுகளையும் போல இந்த அரசும் கன்னியாகுமரி மாவட்டத்தை ஒரு கேரள மாநிலமாகவே பார்த்துப் புறக்கணிக்கும் என மனதார ஏற்றுக் கொண்டதைப் போல) அடுத்தடுத்த பிரச்சினைகளுக்கு வந்தார்.

கனிம வளத்திருட்டைத் தடுக்க வேண்டும் என அவர் கேட்டதை தவெக பண்ணாது. தவெக அவர்களிடம் பணம் வாங்கி தன் கட்சியில் சேர்த்துக் கொண்டு கூடுதலாக் கொள்ளையடிக்கும். மற்ற மாவட்டங்களிலும் இதையே அவர்கள் செய்யத் தொடங்கியுள்ளார்கள்.
அரசே ஒரு கல்குவாரியை கன்னியாகுமரியில் நடத்த வேண்டும் என அவர் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, அரசு உதவிப் பேராசிரியர் நியமனம் என்று பேசிவிட்டு அப்படியே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களை அதிகமாக தவெகவினரே செய்து வருவதை மறைமுகமாகக் குறிப்பிட்டு "வேலியும் பயிரை மேய்வதைப் போல" என்று தவெக அரசை ஒரு இடி இடிக்க வந்த அவர் (ஐயய்யோ நம் கட்சித் தலைவர்கள் நல்ல சோபாவில் இருக்கிறார்களே என நினைவுக்கு வந்ததைப் போல) வண்டியை வளைத்து நடைபாதையில் விட்டார்: "வேலியும் பயிரை மேய்வதைப் போல .... க்கும் இந்த அரசு குற்றங்கள் நடக்காம்ல தடுக்க வேண்டும்" என்றார். அவர் சொல்லாமல் விட்டது பலருக்கும் புரிந்திருக்கும்.
நான் கேட்டதில் நல்ல பேச்சு அவருடையதுதான்.

கருத்துகள்