முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓர் அதிசயம்

 



கடந்த ஆண்டு எனக்கு வலது தோளில் ஒரு சிறு தசைக் காயம் ஏற்பட்டது. ஒரு மாதத்திற்கு தோளிற்கு பயிற்சி அளிக்க வேண்டாம் என்றார் மருத்துவர். அதனால் நான் இடது தோளிற்கு மட்டும் பயிற்சியளித்தேன். டம்பல் பயிற்சி, குத்துச்சண்டை என. போகப்போக என் இடதுகையின் குத்தும் வேகமும் கூர்மையும் அதிகரிப்பதை உணர்ந்தேன். வலது தோள் சரியானதும் நான் தோளின் வலிமைக்காக அதிகப் பயிற்சிகள் மேற்கொண்டேன். குத்துச்சண்டை பயிற்சிக்கு தனியான எடைப்பயிற்சி அவசியம் என இதனால் புரிந்துகொண்டேன். அதன்பிறகு ஒரு சின்ன இடைவெளி விட்டு மைசூருக்கு வந்தேன். இங்கு தனியான மேற்கத்திய குத்துச்சண்டைப் பயிற்சி நிலையங்கள் இல்லை. எல்லாமே கலவைத் தற்காப்புக் கலை (MMA) நிலையங்கள்தாம். அங்கு போவதில் ஒரு தயக்கம் இருந்தது. பெங்களூரைப் போல் அல்லாது இங்கு பயிற்சியாளர்கள் புது ஆட்களைப் பயிற்சிக்கு எடுத்துக் கொள்வதில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள்தாம் என்றில்லை - இங்கு எல்லாருமே அப்படித்தான். அது வேறொரு கதை. நாம் தொடர்ந்து முயன்றால் மட்டுமே பொருட்படுத்துவார்கள். கடைசியாக நான் ஒரு ஜிம்மைக் கண்டுபிடித்தேன். அங்கு கூட நான் மாற்றுத்திறனாளி என்பதால் உங்களுக்குப் பயிற்சியளித்தால் என்னவெல்லாம் பிரச்சினைகள் வருமென யோசித்துவிட்டுச் சொல்கிறோம் என்றார்கள். நான் அவர்களிடம் என் பழைய குத்துச்சண்டைப் பயிற்சிக் காணொளிகளைப் பகிர்ந்து என் முந்தின பயிற்சியாளரிடம் பேசுவதற்குக் கேட்டேன். அதன்பிறகே ஒப்புக்கொண்டார்கள். அங்கு பயிற்சி இன்னும் படிப்படியான, ஒழுங்கமைவுடன் உள்ளது. நான் என்னுடைய பலவீனம் ஸ்லிப் செய்ய முடியாததுதான் என்றேன். அவர்கள் அதில் கவனம் செலுத்தினார்கள். கூடவே அடிப்படையான காம்பினேஷன்களிலும் நிறைய பயிற்சி கொடுத்தார்கள். மூன்று நிமிட பயிற்சி நேரம், அடுத்து அரை நிமிட இடைவெளி, மீண்டும் மூன்று நிமிடங்கள் எனப் போய்க்கொண்டே இருக்கும். என்னுடைய தோள்களின் தாங்குதிறனை மேம்படுத்த இது உதவியது. இந்தப் பயிற்சிக்குப் பின்பே நான் என் பேலியோ உணவுமுறையில் 60-80 கிராம் மாவுச்சத்தைச் சேர்க்கத் தொடங்கினேன். மூன்று வேளை உணவிலும் கவனம் செலுத்தினேன். இல்லாவிட்டால் அங்கு பயிற்சி செய்ய ஆற்றல் இருப்பதில்லை. கொஞ்ச நேரத்தில் சோர்ந்து போனேன். மாவுச்சத்துக்கு (அது தசைகளில் கிளைக்கஜனை அதிகரிப்பதால்) இவ்வளவு முக்கியமான இடம் பயிற்சியில் உண்டென நான் முன்பு உணர்ந்திருக்கவில்லை.

இதற்கிடையே ஒரு சுவாரஸ்யமான விசயம் நடந்தது. என்னோடு ஜோடி சேர்ந்து பயிற்சி செய்வோரில் இருவர் கடந்த சில வாரங்களில் உங்க நேச்சுரல் ஹேண்ட் லெப்டா? நீங்க சவுத் பாவா என்று கேட்டார்கள். என்னுடைய வலுவான கரம் எப்போதுமே வலக்கரம்தான். ஆனால் நான் என் வலக்கையை லோட் செய்து குத்தை விடுவதைப் போல இடக்கையால் செய்வதில்லை. என் இடக்கை தன்னியல்பாக முன்னே பாய்வதால் என்று நினைக்கிறேன், என் இடங்கை குத்தில் இவர்கள் எதிர்பாராத ஒரு வேகமும் கூர்மையும் வந்துவிடுகிறது. இன்னொரு காரணம் அந்த இரண்டு மாதப் பயிற்சியில் என் இடங்கைக்கு கொஞ்சம் வலிமையும் வேகமும் கூடிவிட்டது. இது எனக்கு இன்னொரு விசயத்தை நினைவுபடுத்தியது: நமக்குள் மறைந்திருக்கும் ஒரு அதிசய ஆற்றல்.

சிலருக்கு எதாவது ஒரு உறுப்பு பலமிழந்தாலோ விபத்தில் இழக்க நேர்ந்தாலோ மற்றொன்று அதிக வலுப்பெற்று விடும். இது தானாக நடப்பதல்ல. அவர்கள் அந்த உறுப்பை மட்டுமே இன்னும் தீவிரமாக மும்முரமாகப் பயன்படுத்துவதால் நரம்பணுக்கள் அதற்கு ஏற்ப மாற்றித் தகவமைகின்றன. ஆற்றலை அந்த உறுப்பின் வழியாக ஒருங்கிணக்கக் கற்கின்றன. ஒரு கட்டத்தில் இல்லாத உறுப்பை இருப்பது கிட்டத்தட்ட சமன் செய்கிறது. நான் ஒரு கையை குத்தும் பயிற்சிக்குப் பயன்படுத்துவதைக் கறாராகத் தவிர்த்த காலத்தில் என் மூளை இருக்கிற மற்றொரு கையை வேறு வழியின்றி ஒரே கரமாக ஏற்றுக்கொண்டு பயன்படுத்தக் கற்றுக் கொண்டது. அதை ஓராண்டுக்குப் பின்னரும் அது மறக்கவில்லை. இந்த நெகிழ்வுத்தன்மை நம் உடலியலின் மிகப்பெரிய அதிசயம்.

பி.கு: உடலின் நீட்சியே நம் மனமும் என்பதால் நமது படைப்பாற்றலிலும் மொழித்திறனிலும் இத்தகைய அதிசய ஆற்றல் ஒளிந்திருப்பதை எழுத்தாளர்கள் புதிய சவால்களை மேற்கொள்ளும்போது காண முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Counterarts இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை

"There has always been a permanent child within Kafka. Society functions as an extension of the office and the family, constantly monitoring and evaluating people and subjecting them to the examination of its rules. In other words, even when Kafka leaves home to go to work, and even afterwards, he remains within the family. Within the family, he is always a son or a brother. The family preserves itself through continuous self-surveillance and mutual surveillance. The same thing happens outside it." https://medium.com/counterarts/kafkas-diaries-735b74cd0c44

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...