முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (2) - இலக்கிய மடங்களின் விபரீதங்களும் ஒரு நன்மையும்



 "ஆபீஸ்" நாவலில் இருந்து அந்த காலத்திலேயே இலக்கிய மடங்கள் குறித்த புகார்கள் இருந்ததாகத் தெரிந்து கொண்டேன். அதில் எல்லா மடங்களும் ஒன்றாக இருப்பதில்லை. சில மடங்கள் வெறுமனே பாய்ஸ் கிளப்பாக இருக்கின்றன. ஜெயகாந்தனின் ஆழ்வார்பேட்டை மடம் அப்படியானது.

அங்கு ஜெயகாந்தன் தனியுரைகள் ஆற்றிக் கொண்டே இருக்கிறார். கஞ்சா சிலும்பியை எல்லாரும் பகிர்ந்து கொண்டு சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஜெயகாந்தன் தன்னை ஒரு ஆல்பா மேலாக கருதிக் கொள்கிறார். தன்னுடைய அறிவுப் போதாமை (வாசிப்பின்மை), படைப்பாற்றல் குறைவு (எழுதுவதை நிறுத்திய கட்டம்) குறித்த சீண்டல்கள் அவரைக் கடுமையாகச் சினம் கொள்ள வைக்கின்றன. அவரிடம் தம் ஈகோவை முழுக்க கழற்றி வைக்காத ஒருவரால் மடத்தில் பங்கேற்க முடிவதில்லை. சமத்துவம், நீர்மையான கருத்துருவாக்கங்களில் ஆர்வம் இல்லாத தாராளவாத சிந்தனைக்கு முன்பான ஒரு மனிதராக அவர் இருந்திருக்கிறார். 'கெர்ள்ஸை பிக் அப்' பண்ணுவது, இரவு நெடுநேரம் தண்ணியடிப்பது, விடிகாலையில் எழுதுவது குறித்து அவர் சிலாகிக்கும்போது, அங்கங்கே பந்தா பண்ணும்போது இதெல்லாம் ஒரு பெரிய விசயமா என்று நமக்குத் தோன்றுகிறது. வணிக எழுத்து தந்த பணம், மனைவியின் பள்ளி வேலை போன்ற ஆதரவு அவருக்கு இருந்ததால் இரவெல்லாம் இப்படி குடித்து எழுதிவிட்டு நண்பகல் வரைத் தூங்க முடிந்திருக்கிறது. அவர் தன் நாவல்களில் திருத்தி சரியாகக் கட்டமைக்கவோ பரிசோதனைகள் செய்யவோ பிரயத்தனிக்க முயன்றவர் அல்லர். அதனாலே அந்த கிடைத்த நேரத்தில் போன போக்கில் எழுதுவது போதுமானதாக இருந்தது. தன் காலத்தில் உலகளவில் சிறந்த படைப்பாளிகள் என்ன எழுதினார்கள் என்பதைக் குறித்தும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அதனாலே அரைபோதையில் உபதேசம் பண்ணுவதைப் போல அவரால் பக்கம் பக்கமாக எழுத முடிந்தது. இன்றைய சூழலில் அவர் பிறந்து வளர்ந்திருந்தால் எழுதியிருக்க மாட்டார். சினிமா இயக்குநராக முயன்றிருப்பார். ரீல்ஸ் போட்டிருப்பார், ஆம் ஆத்மியில் சேர்ந்திருப்பார். பாஜகவினருடன் பட்டும் படாமல் உறவாடியிருப்பார். கொஞ்சம் இடதுசாரி பார்வை, நிறைய இந்துத்துவா என்று குழப்பி அடித்திருப்பார். ஆனால் உருப்படியாக எழுத முயன்றிருக்க மாட்டார். அவரிடம் ஒரே நல்ல விசயம் அரசியல் சரித்தனத்தை அவர் பொருட்படுத்தவில்லை என்பது. ஆனால் status quoவை (மதம், பண்பாட்டு சாராம்சவாதம், அறிவொளிக்கால விழுமியங்கள்) எதிர்க்கும் துணிவிருக்கவில்லை. ஆனால் இதுவே பெரிய விசயம் என்று இன்றைய சூழலை வைத்துப் பார்க்கையில் தோன்றுகிறது.
ஜெயகாந்தனின் நீட்சியாக ஜெயமோகனை இன்று பார்ப்பது சுலபம் - அவரும் தன்னைச் சுற்றி அடிமைகளை வைத்துக் கொள்ளவும் அவர்களுக்கு தான் ஏதோ விட்டோ கார்லியானோ போல இருப்பதாக பாவனை செய்வதும் பிடித்திருக்கிறது. தன்னுடைய வாசிப்பு, சிந்தனைக்கு அப்பால் அவர்கள் போகக் கூடாது எனும் கவனமும், தன்னை எதிர்ப்போரை அவமதித்து கட்டுப்படுத்துவதும் இருவரின் மடங்களிலும் உண்டு. இன்னொரு 30-50 ஆண்டுகளுக்கு முன்னால் போனால் இவர்களுடைய அச்சில் இன்னொருவரையும் நாம் அந்த காலத்துக்கு, சைசுக்கு ஏற்பக் கண்டுபிடிக்க இயலும் எனத் தோன்றுகிறது. இப்படியே ஒவ்வொரு சில பத்தாண்டுகளுக்கும் ஒருவர் நம் பண்பாட்டுச் சூழலில் வந்து கொண்டிருப்பர் என நினைக்கிறேன்.
இதே "ஆபீஸ்" நாவலில் தனிநபர் மடங்களைப் பற்றி கவிஞர் விக்கிரமாதித்யன் கிண்டலடிப்பதும் வருகிறது. இளம் படைப்பாளிகள் எதாவது ஒரு எழுத்தாளரைத் தொடர்ந்து சந்தித்து தம் கருத்துக்களைப் பகிர்ந்து மெல்ல மெல்ல அந்த எழுத்தாளரின் ஆளுமையையும் எழுத்தையும் லட்சியமாக ஏற்கும்போது அது ஒரு தனிநபர் மடமாகிறது. இந்த எழுத்தாளர் தன்னைத் தொடர்ந்து நாடுகிற இளம் படைப்பாளிகளுக்கு சில பயணங்கள், உறைவிடக் கூட்டங்களுக்குப் பரிந்துரைப்பதும் நடக்கிறது. இவை நம் இலக்கியச் சூழலில் வழக்கமானவை. ஆனால் எல்லா காலங்களிலும் இளம் படைப்பாளிகளுக்கு தம் தடத்தைக் கண்டறியவும், அவர்களை ஆறுதல்படுத்தி கரைத்தேற்றவும் இது உதவுகிறது என்றாலும் அவர்களுடைய இறகுகளை முறித்தும் போட்டுவிடுகிறது. தனிநபர் மடங்களுக்கு நீங்கள் தொடர்ந்து செல்லும்போது அந்த மடாதிபதி தன் நடையை உங்கள் மீது மறைமுகமாகத் திணிக்கத் தொடங்கினால் (இந்தக் கதை நலல இருக்கு, அது நல்லா வரல, இவர்களைப் படிங்க, அவங்க வீண்) அது உங்கள் சுயதேடலை மண்போட்டு மூடிவிடும். நீங்கள் அவர்களுடைய அச்சில் உருவாகத் தொடங்குவீர்கள். எனக்கு சில நேரங்களில் தன்னைத் தேடி அறியும் தன்னம்பிக்கை இல்லாதவர்களே தனிநபர் மடங்களிடம் சென்று தம்மை ஒரு நகலாக மாற்றிக் கொள்கிறார்களோ எனத் தோன்றுகிறது. இவர்கள் ஒரு மடாதிபதியிடம் போய் "உங்களையே சிறந்த எழுத்தாளர் என்று நம்புகிறேன், உங்களைத் தாண்டி இன்னொருவர் இல்லை" என்று கொண்டாடும்போது "என்னைத் தாண்டியும் வெளியே படியுங்கள்" என்று அவர் கூறினால் இவர்கள் அதற்கு மேல் மடாதிபதியிடம் போக மாட்டார்கள். இவர்களுக்குத் தேவை ஒரு அடைக்கலம். தன்னிடம் இருந்து தப்பிக்க ஒரு அடைக்கலம். இத்தகைய 'அடைக்கலங்களுக்கும்' காலங்காலமாக இருந்து கொண்டிருப்பர் என்று "ஆபீஸ்" படிக்கையில் தோன்றியது. (அதே சமயம், இன்று மடாதிபதிகளைப் பயன்படுத்தி முன்னேற மட்டும் உத்தேசிக்கிற சந்தர்ப்பவாதிகளும் பெருகிவிட்டார்கள் என்பதையும் சொல்ல வேண்டும். இவர்களுக்கு இலக்கியம், மடம் எல்லாமே ஒரு கருவிதாம்.)
இத்தகைய மடாதிபதிகளிடம் சிக்காதவர்களே தமக்கான தனியான எழுத்துத் தடத்தை, நடையை, தத்துவத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். மனம் அடிப்படையில் ஒரு ஆறாத ரணம். அதன் வலியே நம்மை வாழ்க்கையை மேலும் மேலும் ஆழமாகப் பரிசீலிக்க, புனைவிலும் கவிதையிலும் ஒரு புது உலகைக் கட்டமைக்க வைக்கிறது. இது கடினமான உள்நோக்கிய பயணம். மடங்கள் இந்த வலியில் இருந்து நம்மைக் காப்பாற்றி ரணத்திற்கு ஒரு 'வலி நிவாரணியைத்' தருகின்றன. அப்போது நமக்கு எழுதும் தேவை இல்லாமல் போகிறது. எழுத்து அதன் பிறகு கோபத்தைப் போல, காமத்தைப் போல பீறிட்டு வராது. அது மென்மையான ஒரு 'கலாச்சார செயல்பாடு' ஆகிறது. இந்த எழுத்தும் ஒரு வயது வந்ததும் நின்று போய் கூட்டங்களுக்குச் செல்வதும் கூட்டங்களை ஒருங்கிணைப்பதும் இலக்கியச் செயல்பாடு ஆகிறது. கூட்டங்களில் நாம் காணும் திரள் ஒரு நிவாரணம் ஆகிறது. இவர்களை நாம் இந்து, கிறித்துவ மடங்களில் உள்ள துறவிகளுடன் ஒப்பிடலாம். இவர்களால் யாரையும் எதற்கும் கேள்வி கேட்கவோ விட்டுச் செல்லவோ புதிய பரிசீலனைகளை மேற்கொள்ளப்வோ முடியாது. அமைதியாக ஒரே விசயத்தைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள். ஒரே சொல்லை திரும்பத் திரும்பச் சொல்வார்கள். ஏனென்றால் நடைமுறை அவர்களுக்கு ஒரு வலி நிவாரணி ஆகி விடுகிறது.
இலக்கியத்துள் எத்தனையோ விதமானவர்கள் வருகிறார்கள் - நகலெடுப்பவர்கள், நிவாரணம் தேடுவோர், ஒரு கட்டமைப்பை, 'சந்நியாசத்தை' நாடுவோர். இலக்கியம் இல்லாவிடில் இவர்கள் ஆன்மீகத்தை நாடியிருப்பார்கள். அல்லது சிதறியிருப்பார்கள். இவர்கள் எல்லாரும் அசல் எழுத்தாளர்கள் அல்லர். இவர்களைச் சற்று கருணையுடன் நோக்க வேண்டும் என எனக்கு இந்நாவலைப் படித்தபோது தோன்றியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Counterarts இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை

"There has always been a permanent child within Kafka. Society functions as an extension of the office and the family, constantly monitoring and evaluating people and subjecting them to the examination of its rules. In other words, even when Kafka leaves home to go to work, and even afterwards, he remains within the family. Within the family, he is always a son or a brother. The family preserves itself through continuous self-surveillance and mutual surveillance. The same thing happens outside it." https://medium.com/counterarts/kafkas-diaries-735b74cd0c44

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...