முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய டி20 அணியின் உண்மையான சவால்

 


அயர்லாந்துடன் இந்தியா தோற்றதில் பெரிய துயரம் இல்லை. கடந்த முறை இந்தியா அங்கு டி20 ஆடியபோதும் அயர்லாந்தினர் நன்றாகவே ஆடினார்கள். இம்முறை ஆட்டச்சூழலும் மைதான அமைப்பும் மட்டையாட்டத்துக்குச் சாதகமாக இல்லாதது அவர்களுடைய ஆட்டபாணிக்குப் பொருத்தமாக இருந்தது. பெரிய சவால்கள் இன்றியே வென்றார்கள். இரண்டு ஆட்டங்களிலும் எந்த நிலையிலும் இந்தியா அவர்களை நெருக்கித் தள்ளவில்லை. இதெல்லாம் பலரும் விவாதிப்பதுதான். இங்கிலாந்துடனான அடுத்து வரும் தொடரில் இதே அணி மேலும் நன்றாக ஆடுவார்கள், ஏனென்றால் அப்போது ஆடுதளம் இன்னும் சாதகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இங்கிலாந்து மட்டையாட்டக்கார்கள் இன்னும் ஆவேசமாக மட்டையாடுவார்கள், அவர்களுடைய பந்து வீச்சாளர்கள் நிறைய ரன்களை நமக்குக் கொடுப்பார்கள் என்பதால் ரன்களைக் கட்டுப்படுத்தும் கவலையே நம் அணிக்கு இருக்கும். விக்கெட் கொடுக்காமல் ஆடுவது அல்ல. மேலும் தட்டையான ஆடுதளங்களிலேயே பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் திறன்கள் தேவையுள்ளது - துல்லியமான யார்க்கர்கள், நல்ல பவுன்சர்கள், மெதுப்பந்துகள், அகலமான திசை என நிறைய சவால்கள். அயர்லாந்தில் குறிப்பிட்ட நீளத்தில் வீசிக்கொண்டே இருக்கலாம், பந்து நின்று வரும் என்பதால் வீச்சாளர்களுக்கு ஆபத்து குறைவு. இது ஒன்றிரண்டு நல்ல வீச்சாளர்களை வைத்தே அவர்களால் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த உதவியது. இந்த ஆட்டச்சூழலுக்குப் பழகாத இந்திய மட்டையாளர்களைத் திணறடிக்க முடிந்தது. இவையெல்லாம் ஆட்டச்சூழலைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தி வெல்கிற உத்தி அடிப்படையிலான ஆட்டம். அதனாலே உலக சாம்பியன் இந்தியாவை வென்றதால் யாரும் அயர்லாந்தை சிறந்த டி20 அணி எனக் கூறப் போவதில்லை. ஆகையால் இது இயல்பான நிலைமையில் நடக்கக் கூடியதல்ல, இதற்காக யாரும் மண்டையை உடைத்துக் கொள்ளவும் போவதில்லை.

உண்மையான பிரச்சினை அதுவல்ல - ஐயர்லாந்தில் நடந்த போட்டிகளே ஷ்ரேயாஸ் ஐயருக்கு அணித்தலைவராக முதல் தொடர். ஐம்பத்து சொச்சம் போட்டிகளுக்குப் பிறகு அவர் டி20 அணியில் இடம்பெறுகிறார். இந்த அணி அவர் இல்லாமலே கடந்த இரு ஆண்டுகளாக சேர்ந்து ஆடி பல வெற்றிகளைக் குவித்தது. உலகக்கோப்பையை வென்றது. இப்போது அணித்தலைவர் சூர்யகுமாரை நீக்கிவிட்டு ஷ்ரேயாஸை அணித்தலைவர் ஆக்கி உள்ளார்கள். இதை அணி வீரர்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவர்கள் மைதானத்தில் நடந்து கொள்ளும் விதம், விக்கெட் விழும்போது அதைக் கூட்டாகக் கொண்டாடாதது, பந்துவீச்சாளர்களை தடுப்பாளர்கள் ஊக்கப்படுத்தாதது, வீரர்கள் ஷ்ரேயாஸை சுற்றிக் கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதது காட்டுகிறது. ஆட்டம் முழுக்கவே ஷ்ரேயாஸும் பெருமளவு அமைதியாக இருந்தார். இதுதான் இத்தோல்வியை விட மோசமான அறிகுறி. இதுவே பெரிய சவால்.

இதற்கான காரணங்கள் இரண்டு:
1) தேர்வாளர்களும் பயிற்சியாளர்களும் ஷ்ரேயாஸை அணிக்குள் முதலில் சேர்த்து ஆட வைத்து அவர் சில போட்டிகளை வென்றளித்த பின்னர், அணிக்குள் அவர் ஏற்கப்பட்ட பின்னர் அவரைத் தலைவராக்கி இருக்க வேண்டும். ஐ.பி.எல் அணியில் சேர்ந்து தலைவராகி ஒரு ஆண்டு ஆடுவதற்கும் இந்திய அணியில் தலைவராவதற்கும் உள்ள வித்தியாசம் இதுதான் - ஐ.பி.எல்லில் யாரையும் ஏற்றுக் கொள்வார்கள். அவ்வீரர்கள் பணத்துக்காக ஏலத்தில் எடுக்கப்படுவோர். ஒரு ஆண்டு சரியாக ஆடாவிட்டால் அடுத்த ஆண்டு இன்னொரு அணிக்கு பரிமாற்றம் செய்யப்படுவர். ஆனால் இந்திய அணியில் ஒருவர் நன்றாக ஆடி நிலைப்பெற்றால் அவர் அங்கு 10 ஆண்டுகள் ஆடுவார். அதனாலே ஐ.பி.எல் பாணியில் அங்கு ஒருவரைத் தலைவராக்கி உடனே அவர் வெல்வார் என தேர்வாளர்கள் எதிர்பார்த்தது பிழைத்து விட்டது.

2) சஞ்சு சாம்ஸன், இஷான் கிஷன், திலக் வர்மா என அணிக்குள் ஏற்கனவே தலைவராகும் தகுதியுள்ள போட்டியாளர்கள் இருக்கையில், முன்பு எம்.ஜி.ஆர் காலமானதும் ஜானகி அதிமுகவின் தலைமையைக் கோரியது போல, ஷ்ரேயாஸை கம்பீரும் அகார்க்கருமாக அதிரிபுதிரியாகத் தலைவராக்கியது ஏதோ ஒரு கசப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை அணிக்கு ஹர்த்திக்கைத் தலைவராக்கியதை இதனுடன் ஒப்பிடலாம்.

இப்பிரச்சினை தொடருமானால் இந்தியா மேலும் சில தொடர்களை இழக்கும். இதற்கு இரண்டு தீர்வுகள் உண்டு:

1) ஷ்ரேயாஸ் தன் மட்டையாட்டத்தில் கவனம் செலுத்தி ரன்களைக் குவித்து ஆட்டங்களை வென்றளித்து அணியில் மரியாதையை ஏற்படுத்தி தன் சகவீரர்களின் ஏற்பையும் அன்பையும் பெறுவது.

2) அக்ஸர் பட்டேலை இடைக்காலத் தலைவராக்கி விட்டு ஷ்ரேயாஸ் தன்னை ஒரு சர்வதேச டி20 வீரராக நிறுவுவதற்கு கால அவகாசமளிப்பது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Counterarts இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை

"There has always been a permanent child within Kafka. Society functions as an extension of the office and the family, constantly monitoring and evaluating people and subjecting them to the examination of its rules. In other words, even when Kafka leaves home to go to work, and even afterwards, he remains within the family. Within the family, he is always a son or a brother. The family preserves itself through continuous self-surveillance and mutual surveillance. The same thing happens outside it." https://medium.com/counterarts/kafkas-diaries-735b74cd0c44

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...