கேள்வி: ஐயா பல சிறப்பு மாணவர்களுக்கான பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லைன்னு ஒரு புகார் இருக்கு...
சொல்லின் செல்வர் அமைச்சர் ராஜ்மோகன்: பள்ளி இல்லாத கழிப்பறையால் பயனுண்டு. கழிப்பறை இல்லாத பள்ளிகளால் பயனில்லை. கவிதை இல்லாத கவிஞனால் பயனுண்டு, கவிஞன் இல்லாத கவிதையால் பயனில்லை. முத்தம் இல்லாத உதடுகளில் சுத்தம் இல்லை, ஆனால் சுத்தம் இல்லாத முத்தத்தில் பயனில்லை, முத்தம் இல்லாத சுத்தத்தில் சத்தமுண்டு. கப்பம் கட்டாதவருக்கு கிடைக்கும் அப்பத்தினால் பயனில்லை. ஆனால் அப்பம் கிடைத்தவருக்கு விதிக்கப்படும் கப்பத்தினால் பயனுண்டு. (இப்படியே பேசிக்கொண்டு போகிறார்.) ஆகையால் இதைக் குறித்து நிறைய ஆய்வுகள் செய்யப் போகிறோம். (கழிப்பறையை எப்போது கட்டுவோம் எனச் சொல்வதில்லை.)
கேள்வி: ஐயா, பல அரசுப் பள்ளிகளில் மாணவர்களை வைத்து கழிப்பறையைச் சுத்தம் செய்வதாகத் தகவல்கள் வருகின்றனவே...
சொல்லின் செல்வர்: மாணவர்கள் தமிழ்நாட்டின் மாணிக்கங்கள். அவர்கள் இந்த அரசுக்காக காணிக்கைகள். யார் இங்கே ஆட்சியில் இருக்கிறது என்று தெரியாமல் இப்படியெல்லாம் செய்வீர்களா? இதையெல்லாம் பொறுப்போம் என நினைத்து தருக்கம் செய்வோரின் நாவை நறுக்கென்று துண்டிப்போம். அதைச் சிந்திப்போம், நிந்திப்போம், அடுத்து சந்திப்போம், திதோம் திதோம் திதோம். ஆகையால் இதைக் குறித்த தகவல்களை வாங்கி ஆய்வு செய்ய உடனே சொல்கிறேன். (ஏன் அப்பள்ளிகளுக்கு துப்புரவுப் பணிக்கு நிதி ஒதுக்கவில்லை என்று பதில் சொல்லவில்லை.)
எல்லா கல்விப் பிரச்சினைகளையும் ராஜ்மோகன் ஒரு டி.ஆர் படக் காட்சியாக மாற்றிவிடுகிறார். கேட்டுக் கொண்டிருப்போருக்கு விரைவில் பைத்தியம் பிடித்து ஓடுவதால் பிரச்சினையும் தீர்ந்தது என முடிவு செய்கிறார். பள்ளிக் கல்வித் துறையைப் புரிந்துகொள்ள கல்வியியல் குறித்த புரிதலும் நடைமுறை அணுகுமுறையும் அவசியம். மொக்கை கவிதை சொல்வதல்ல. கவிதை மொக்கையென்றால் கவிஞரால் பயனில்லை. ஆனால் அமைச்சரே மொக்கைக் கவிஞரென்றால் அந்த அமைச்சகத்தாலே பயனில்லை. ஐயோ எனக்கே பைத்தியம் பிடிக்குதே...
கருத்துகள்