முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாதி திறந்த கையை அசைத்தசைத்துப் பேசுபவர்கள்

சுந்தர ராமசாமி - மனித மனதின் உள் அடுக்குகளில் பயணிக்கும் எழுத்தாளர்! கதை  சொல்லிகளின் கதை - பாகம் 35 | Life history of Tamil Writer Sundara Ramasamy  - the story of ...

நான் படிக்கத் தொடங்கிய காலத்தில் சு.ராவின் மொழிநடை மீது பலரையும்போல எனக்கும் பெரும் மயக்கம் இருந்தது. பரந்து பட்டு நான் வாசிக்கத் தொடங்கியபோது சு.ராவைப் போன்ற பிற நடையாளர்களையும் கண்டேன். கருத்தாக்கம், கருத்தியல், தத்துவம், கோட்பாடு என என் வாசிப்பின் நாவு நீண்டு நீண்டு புதிய ருசிகளைக் கண்டது. ரெண்டாயிரத்தில் எனக்கு ஒரு புதிய எண்ணம் உண்டானது - இலக்கிய நடையில் உருவகங்கள் அதிகமாக வருவதால் கருத்துக்களைத் தெளிவாக, கூர்மையாகச் சொல்ல முடிவதில்லை, எதையும் நேராக தெளிவாகச் சொல்ல வேண்டும், அப்பட்டமாக எழுத வேண்டும், 'சொல்லலாம்', 'கூறப்படுகிறது' 'நினைக்கலாம்' எனும் கமறல்கள், நழுவல்கள் தேவையில்லை என்று நினைத்தேன். அதன் பிறகு விமர்சன வாசிப்பும் தத்துவமும் என் பிரக்ஞையில் அதிக இடம் பிடித்த காலம் வந்தது. எதையும் நேரடியாகச் சொல்லி அதன் காரண காரியங்களை விளக்கி, சான்றுகளைத் தொகுத்துச் சொல்லி ஒரு புதிய பார்வையுடன் முடிக்க வேண்டும் என நம்பினேன். முனைவர் பட்ட ஆய்வின் காலம் வந்தது. எதையும் புதிதாக எழுதும் முன்பு அதைக் குறித்து பிறர் என்ன சொல்லியிருக்கிறார்கள் எனத் தெரிந்து அதைத் தொகுத்துச் சொல்லி அதில் இருந்து நான் எப்படி வேறுபடுகிறேன் எனச் சொல்ல வேண்டும் எனும் நம்பிக்கை ஏற்பட்டது. மீண்டும் ஒரு தத்துவத் தேடல் காலம் வந்தது. நான் ஒரு கருத்தை அதன் பின்னுள்ள தத்துவக் கருத்தை, தர்க்கத்தை, அதில் பிடிபடாமல் நழுவும் முரண்களை நாடி விவாதிக்க விரும்பினேன். இப்படி என் உரைநடை கடந்த கால் நூற்றாண்டில் மாறி வந்துள்ளது. தெரியாததைப் பற்றிப் பேசக் கூடாது, பொய் சொல்லக் கூடாது, பாவனை கூடாது என்பதைத் தாண்டி வேறு பல விசயங்கள் மாறிவிட்டன.

அண்மையில் சு.ராவின் ஒரு பழைய கட்டுரையைப் படித்தேன். ஒரு நவீன கற்பனாவாத எழுத்தாளரின் கதைகளைக் குறித்த அவரது நளினமான, அதே நேரம், கடுமையாக விமர்சனம். ஒவ்வொரு சொற்றொடரிலும் ஒரு உருவகம் தோன்றும், உவமைகளின் எதிர்பாராத போக்குவரத்து நெரிசல், யுடர்ன்கள் இருக்கும். அதில் ஒரு சுவையும் அழகும் இருக்கும். ஒவ்வொன்றையும் நின்று படித்து ரசித்தேன். இதைத்தானே ஒரு காலத்தில் எதிர்த்தோம் என்று தோன்றியது. இதுவும் நன்றாகத் தானே இருக்கிறது, இதைத் தவிர்க்க வேண்டும் என ஏன் நினைத்தேன் எனத் தோன்றியது. சு.ரா எதையெல்லாம் பேசத் தவறுகிறார் என்று எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது. இதே போன்ற நடையில் டி.எஸ் எல்லியட் இன்னும் ஆழமாக எழுதிள்ள கட்டுரைகள் நினைவுக்கு வந்தன. ஆனால் எலியட்டிடம் கூட சு.ராவின் திகைப்பூட்டும் அழகு இல்லை. கேரளாவின் குன்றும் பள்ளங்களுமான இருமருங்கும் ஏறி ஏறி நின்று பார்க்கும் மரங்களும், மறைந்து சிரிக்கும் செடிகளும், பலவித வர்ணங்கள் கொண்ட ஆகாயமும் எப்படி இருக்குமே அப்படியான நடை. இன்று அனேகமாக யாரும் இவ்வாறு எழுதுவதில்லை. என் நடை மட்டுமல்ல, தமிழின் உரைநடையே வெகுவாக மாறியிருக்கிறது.
இந்த நடையுடன் சு.ராவிடம் ஒரு உறுதியான நம்பிக்கை இருந்தது. அதையும் அவர் பயமின்றி முன்வைத்தார். தடுமாற்றமே இல்லை. தடுமாற்றம் நம் வாக்கிய அமைப்பிலேயே தெரிந்துபோகும். சுராவிடம் தன் நினைத்ததை உங்களை நம்ப வைக்க வேண்டும் எனும் முனைப்பே அதிகம், அதை நீங்கள் தவறென நினைத்துவிடுவீர்களோ எனும் கவலையில்லை. புனைவில் மட்டுமே வருகிற நுட்பமான் உருவகம் மொழியைக் கொண்டு சில புதிரான விசயங்களை புனைவெழுத்தைக் குறித்துச் சொல்ல முயல்கிறார். இவற்றை நேராகச் சொல்லலாமே எனத் தோன்றினாலும் இது கூட அழகுதானே. இதற்குள் அபிநயம் காட்டி ஒருவரை இழுக்கிற நாட்டியப் பாங்கு இருக்கிறது. மூக்கிலேயே குத்தி காலரைப் பற்றி இழுத்துப் போகக் கூடாது, நைசாக அழைத்து நைசாகச் சொல்லி ஒருவர் தன்னை ஏற்கவும் மறுக்கவும் வெளியைத் தக்க வைக்க வேண்டும் எனும் ஜனநாயக நம்பிக்கை இருக்கிறது.
சு.ராவிடம் இருந்து நிறைய மாறுபடலாம், ஆனால் ரசிக்காமல் இருக்க இயலாது. அவரிடம் உள்ள ஒன்று நம் காலத்தில் இல்லையென்பதால். அழகு. பாதி மலர்ந்த மலரின் அழகு. அந்தி இன்னும் முடியவில்லை, நான் பாதி திறந்த நிலையில் உங்களைப் பார்ப்பேன் எனும் மலரின் பாதி ப்பரிமளித்த அழகு. பாதி அழகு இன்று நமக்குள் ஒருவித பதற்றத்தை அளிப்பதைப் போல, இதற்கு அப்பால் என்ன, ஒன்றுமில்லைதானே எனும் கேள்வியை எழுப்புவதைப் போல அவர் காலத்தில் இல்லை.
பக்கத்தில் உள்ளவரின் கையைப் பிடிவாதமாகத் திறந்து பார்த்து சூனியம்தானே என்று சொல்லி இளிக்கும் போக்கும் அவர்களிடம் இல்லை. பாதி திறந்த கையை அசைத்தசைத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய மொழியும் அவ்வாறே இருந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Counterarts இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை

"There has always been a permanent child within Kafka. Society functions as an extension of the office and the family, constantly monitoring and evaluating people and subjecting them to the examination of its rules. In other words, even when Kafka leaves home to go to work, and even afterwards, he remains within the family. Within the family, he is always a son or a brother. The family preserves itself through continuous self-surveillance and mutual surveillance. The same thing happens outside it." https://medium.com/counterarts/kafkas-diaries-735b74cd0c44

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...