முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு வளரும் தேசத்தின் சீரழிவு


 

"பெட்ரோ பரோமா" நாவலைக் குறித்து இப்படியொரு தகவல் உள்ளது: "Initially, the novel met with cool critical reception and sold only two thousand copies during the first four years." அதாவது நாவலை ஆரம்பத்தில் வாசகர்களுக்குப் பிடிக்கவில்லை. சரியான கவனம் இல்லை. அதனால் 2000 பிரதிகள் இரண்டாண்டுகளில் விற்பனையாகின. இதுவே தமிழ்நாடு என்றால் இந்த 2000 பிரதிகள் எவ்வளவு பெரிய வெற்றியாகக் கொண்டாடப்பட்டிருக்கும்? மெக்ஸிக்கர்களுடன் ஒப்பிடுகையில் நாம் எவ்வளவு பண்பாட்டு நுண்ணுணர்வற்றவர்களாக இருக்கிறோம் பாருங்கள். இந்த நாவல் அங்கு எழுதப்பட்டபோது நாம் தியாகராஜ பாகவதருக்கு அடுத்தபடியாக எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக ஏற்றுக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். "பொன்னியின் செல்வன்" போன்ற மேலோட்டமான பொழுதுபோக்கு நாவல்கள் தொடராக கல்கியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருந்தன. பு.பி போன்றவர்கள் அப்போது எழுதி சாப்பிட முடியாமல் சினிமாவில் எழுத முயன்று பசியில் இறந்தார்கள். சி.சு செல்லப்பா கல்லூரி கல்லூரியாக பண்டல் பண்டலாகத் தன் நூல்களைத் தூக்கிக் கொண்டு போய் விற்று கஷ்டப்பட்டார்.

இந்தளவுக்கு மலிவான ரசனை கொண்டவர்கள் எப்படி ஒரு காலத்தில் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், திருக்குறள் எல்லாம் இயற்றினார்கள் என்பது ஒரு புரியாத புதிராக உள்ளது.
1950களில் மெக்ஸிக்கோவும் ஒரு மூன்றாம் உலக நாடுதான். நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்? உண்மையில் பணத்திற்கும் வளர்ச்சிக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
19ஆம் நூற்றாண்டு முதலே வாசிப்பு, படிப்பு குறித்த விழிப்புணர்வும் வலுவான பண்பாடும் மெக்ஸிக்கோ மக்களுக்கு இருந்தாலும் 1920களில் நடந்த மெக்ஸிக்கப் புரட்சிதான் திருப்புமுனை. புரட்சிக்குப் பின் வந்த அரசு பொதுக் கல்வியிலும் நூலகங்களிலும் பெரும் முதலீட்டைச் செய்தது. கல்வி ஒரு தேசிய இலக்கானது. அதை அவர்கள் ஒரு புரோஜெக்டாகவே எடுத்து நடத்தினார்கள். José Vasconcelos எனும் கல்வி அமைச்சர் இதில் முக்கியப் பங்காற்றினார். மெக்ஸிக்கோ மட்டுமல்ல க்யூபா, கோஸ்டா ரிக்கா போன்ற நாடுகளிலும் கல்வியிலேயே பெருமை கண்டார்கள். 1940-70கள் வரை அங்கு இதனால் ஒரு மத்திய வர்க்க அதிசயம் எனப்படும் சமூகப் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. இம்மக்கள் நம்மூர் மத்திய வர்க்கத்தினரைப் போல சினிமா, சம்பாத்தியம், பைக், டிவி எனப் பெருமைப்படாமல் கல்வியையும் வாசிப்பையும் முதன்மைப்படுத்தினார்கள். படிக்கும் பழக்கம் அங்கு தனிமனிதப் பெருமையாகப் பார்க்கப்பட்டது. வாசிப்பு குடிமக்களின் கடமையாகியது. குடிமைச் சமூகத்தின் அடையாளமாகியது. இந்திய அரசோ சுதந்திரத்துக்குப் பின் தொழில்மயமாக்கலிலும் தேசிய உணர்வைப் பரப்புவதிலும் மட்டுமே கவனம் செலுத்தியது. கல்வி பின்னுக்குச் சென்றது. இந்தியாவில் தொழில் வளர்ச்சியால் வளம் பெற்ற மாநிலங்களில் மட்டுமே (தனியார் முதலீட்டாலும் பொதுக்கல்வியாலும்) கல்வியும் அதை ஒட்டிய வளர்ச்சியும் சாத்தியப்பட்டது என்றாலும் நம் துவக்கமே தவறாக இருந்ததால் தேசப்பற்றும் செல்வச் செழுமையுமே குடிமை அடையாளமாகியது. மேலும், பொதுக்கல்வி, வாசிப்பு, சுயசிந்தனை, பண்பாடு மீது ஒன்றிய அரசு நீண்ட காலமாகவே பாராமுகம் காட்டுவதால் ஏற்றத்தாழ்வான, பண்பற்ற சமூகத் திரள்கள் இங்கு தோன்றின. இந்தியர்கள் மீது உலகெங்கும் அருவருப்பு நிலவுகிறது - எங்கு போனாலும் குடித்து நடனமாடி பான்பராக் துப்பி குப்பையை வீசி எரிச்சலூட்டுகிறார்கள். அவர்களுக்குத் தம்மிடம் உள்ள பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனத் தெரியவில்லை. பணமுள்ள நாட்டுப்புறத்தான்களாக படித்த இந்தியர்கள் உள்ளனர் என்றால் பணமில்லாதவர்களோ சினிமாவினால் தம் வாழ்க்கையின் பிரச்சினைகள் தீரும், வெறுமைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறார்கள்.
ஒரு நாடு மூன்றாம் உலகத் தேசமாக இருந்தாலும் அது முன்னேற அவசியம் பரவலான கல்வியும் வாசிப்பைக் குறித்த பெருமிதமுமே. இந்தியாவின் இன்றைய பொருளாதார வளர்ச்சி மேலானதாக இருந்ததாலும் பண்பாட்டையும் அறிவையும் பொறுத்தமட்டில் நாம் காட்டான்களாகவே இருக்கிறோம். ஒரு சிறிய நாட்டில் உள்ள ஜனங்களைப் போல உயர்-பண்பாட்டு ஆர்வத்துடன் இவ்வளவு பெரிய நாட்டில் வாழ்வோரால் முடியவில்லை. எப்போதும் பண்பாடு, அடையாளம் எனப் பெருமைப்படும் தமிழர்களோ மட்டமான ஒரு நடிகரை முதல்வராக்கி அவரைப் பார்த்துப் பெருமைப்படுகிறார்கள். அதிலும் இளைஞர்களில் கணிசமானோருக்கு 'சங்கம்' எனும் வார்த்தையே தெரியாது. அவர்கள் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களுக்கோ தமிழைத் தவறின்றி படிக்கவே தெரியாது. ஆங்கிலம் அதைவிட மட்டம். ஆங்கில மீடியாவிடம் ஒரே ஐ ஸ்பீக் இங்கிலீஷ், ஐ வாக் இங்கிலீஷ்தான். (வீட்டுக்குள் புகுந்து கட்டையெடுத்து அடிக்க மட்டுமே தெரியும்).
நாம் நிஜத்தில் தமிழ்நாடு அல்ல, சினிமா நாடுதான். இம்மாநிலத்தின் பெயரை அப்படி மாற்றினால் நான் புகார் சொல்ல மாட்டேன்

கருத்துகள்

nithilan இவ்வாறு கூறியுள்ளார்…
Unami

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...