Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஒற்றன் (2)


துக்கத்தை ஏன் பகிர்ந்து கொள்ள முடியாது?

எதை நாம் பகிர்ந்தாலும் அதன் அளவு குறைந்து விடும். உங்கள் தட்டிலுள்ள உணவை நீங்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டால் அது பாதியாகி விடும். ஆனால் உங்கள் மனத்தில் உள்ள உணர்வை என்னிடம் பகிர்ந்து கொண்டால் அது பாதியாக குறையாது. ஏனென்றால் உணவைப் போல நிஜமானது அல்ல உணர்வு. உணர்வு என்பது நாடகம் போல ஒரு நிகழ்த்தல். அதில் நாம் ஒரு பாத்திரமாக பங்கேற்கிறோம். அதற்கு ஒரு திரைக்கதையை அமைக்கிறோம். அதற்கு பார்வையாளர்களை அழைக்கிறோம். பார்வையாளர்கள் நம் துக்கத்தை அங்கீகரிக்க அங்கீகரிக்க நாம் துக்கப்படுவதும் அதிகமாகிறது. கதைசொல்லி இதனால் தான் இலாரியாவிடம் கற்பனையில் வாழாதே என அறிவுரைக்கிறார். ஆனால் அவளால் அதை உட்கொள்ள முடியவில்லை. இப்போது கதைசொல்லி எரிச்சலாகிறார். ‘ஒருவனை காதலிக்கும் முன் அவனுக்கு திருமணமாகி இருக்கிறதா என்பதை கூட விசாரித்து அறிந்து கொள்ள மாட்டாயாஎன கேட்கிறார். இலாரியா கோபத்தில் எழுந்து போய் விடுகிறாள். அதன் பிறகு அவள் அவரை சந்திப்பதில்லை

ஏன் இலாரியாவுக்கு கோபம் வருகிறது? ஏனென்றால் அந்த கணத்தில் கதைசொல்லி தனது பாத்திரத்தை மீறி அவளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்கிறார். அவளை மதிப்பிடுகிறார், அவளைப் பற்றி கருத்தை சொல்லி தான் அவளை ஒரு முட்டாளாக நினைப்பதை வெளிப்படுத்தி விடுகிறார். இது அவளை காயப்படுத்தி விடுகிறது. இப்படி கோபப்படும் இடங்களில் கதைசொல்லி அதற்கு முன்பிருந்த ஆளில் இருந்து மாறுபட்டு விடுகிறார்.
ஆரம்பத்தில் இலாரியா தன் அன்பை பகிர்ந்து கொள்ளும் முயற்சியின் அபத்தத்தையும் அசோகமித்திரன் பேசுகிறார். ஒரு அத்தியாயத்தில் அவள் கதைசொல்லியின் இடத்துக்கு வந்து அவருக்கு காலை உணவு சமைத்துத் தருகிறாள். அவளுக்குத் தெரிந்ததெல்லாம் காரமான மக்கரோனி பண்ணுவது தான். அதை சாப்பிட்டு கதைசொல்லி மிகவும் நொந்து போவார். இது இத்தாலிய உணவு அல்ல, நம்மூர் ஆந்திர சமையல் தானே என அவருக்குத் தோன்றுகிறது.
கதைசொல்லி பின்னர் இப்படி அதிகமாக கோபத்தை வெளிக்காட்டும் மற்றொரு முக்கியமான இடம் ஜிம் பார்க்கர் எனும் ஓவியனைக் காண்பதற்கு அவனது ஊருக்கு அவர் செல்லும் போது நடக்கிறது. ஜிம் அவரை அப்போது தனது காதலியின் முன்னாள் கணவனுக்கு சொந்தமான மாளிகையின் ஒரு கண்ணாடி அறையில் தங்க வைக்கிறான். அந்த அறை என்பது முன்னாள் கணவனின் குடும்பத்தினர் காலங்காலமாக முதலிரவுக்கு பயன்படுத்தும் பிரத்யேகமான அறை. அந்த அறையில் சுவர்கள் மற்றும் கூரையெங்கும் கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருக்கும். ஒருவேளை அங்கே இருவர் நிர்வாணமாக இருப்பது பல கோணங்களில் ரூபங்களில் பிரதிபலித்து ஒரு வினோதமான வியப்புணர்வை தந்திருக்கலாம். எப்படியோ, அங்கே கதைசொல்லி போய் மாட்டிக் கொண்ட பின் விளக்கை அணைத்தாலும் கூரையில் உள்ள கன்ணாடிகள் பிரதிபலித்து அவரை தூங்க விடாமல் தொந்தரவு பண்ணுகின்றன. அப்போது ஜிம் வந்து கதவைத் தட்டி ஒரு சேதியை சொல்கிறான். அந்த முன்னாள் கணவர் கதைசொல்லியை கொல்வதற்காக துப்பாக்கியுடன் வந்து கொண்டிருக்கிறான். அவன் ஏன் இவரைக் கொல்ல வேண்டும்
ஜிம்மின் காதலியிடன் இரண்டாவது காதலன் இவர் என அவரிடம் யாரோ போட்டுக் கொடுத்திருக்கிறார். அதனால் தான் வெகுண்டெழுந்து வந்திருக்கிறார். ஜிம் அவரை அலமாரிக்குள் பதுக்கி வைக்கிறான். அப்போது கதைசொல்லிக்கு அந்த முக்கியமான கேள்வி எழுகிறது: அந்த முன்னாள் கணவன் கொல்ல வேண்டுமானால் முதலில் ஜிம்மைத் தானே கொல்ல வேண்டும்? இந்த இடத்தில் அந்த முன்னாள் கணவனின் மனநிலை மிகவும் தமாஷாகவும் கழிவிரக்கம் பொருந்தியதாகவும் ஆகி விடுகிறது. அவர் நிலைமை எந்தளவுக்கு மோசம் என்றால் அவர் ஜிம்மையே ஏற்றுக் கொண்டு விட்டார். ஆனால் தன் மனைவிக்கு இரண்டாவதாக ஒரு காதலன் அமைவது அவரால் ஜீரணிக்க முடிவதற்கு அதிகமாக உள்ளது. அதனால் தான் கொலைவெறி கொள்கிறார்
இதுவே கதைசொல்லிக்கு உறவுகள் மீதுள்ள அவநம்பிக்கையின் சித்திரம் - ஒவ்வொரு ஆவேசமான உறவும் இப்படியான அபத்தங்களிலே போய் முடியக் கூடும் என அவர் நினைக்கிறார். ஏனென்றால் அவருக்கு ஆவேசமான, மிகை உணர்ச்சிகளாலான உறவுகளில் நம்பிக்கை இல்லை; ஏனென்றால் இவை முழுக்க கற்பிதங்களால் பின்னப்பட்டவை என அவர் நினைக்கிறார். அதனால் தான் அவர் தன் வாழ்வுக்குள் வருகிறவர்களைப் பற்றி பின்னால் யோசித்து ஏங்குவதில்லை. தன் மனைவி, குழந்தைகளைக் கூட அவர் அதிகமாக நினைப்பதில்லை. பூண்டு, கால் புண் ஆகியவை அவருக்கு அதிகமான மன ஆற்றலை கோருகின்றன. மனிதர்கள் தன்னிடம் இருக்கும் போது மட்டுமே அவர்களிடம் நியாயமாக இணக்கமாக இருக்க நினைக்கிறார். முடிந்தளவுக்கு மகிழ்ச்சியாக இருக்க முயல்வதே வாழ்க்கை என நம்புகிறார். அவரது வரலாறு எனும் அன்றாடத்தின் வரலாறு. நினைவேக்கம், பாசம் என்பதெல்லாம் வெறும் செண்டிமெண்டுகள். முடிந்தளவுக்கு அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பதே பெரிய சாதனை என நினைக்கிறார். இதையே வலியுறுத்துகிறார். அதே நேரம் வாழ்க்கை எதேச்சையாக, தர்க்க ஒழுங்கையும் மீறி, பெரும் பிரச்சனைகள், ஆபத்துக்களை கொண்டு வரும் போது அவர் தன் கட்டுப்பாட்டை இழக்கிறார். அந்த முன்னாள் கணவரின் கொலைவெறி அப்படியான ஒன்று. அதைப் பற்றி ஜிம் தீர்க்கமாக சிந்திக்காமல் தன்னை அப்படி ஒரு இக்கட்டில் மாட்டி விட்டானே என அவருக்கு கோபம் தலைக்கு ஏற அவர் அவனது கழுத்தைப் பிடித்து உலுக்குகிறார்
இந்த இருவரில் யார் அதிக நிதானமானவர்? நிச்சயமாக ஜிம் தான். கதைசொல்லி எதை போதிக்கிறாரோ அதை முழுமையாக பின்பற்றுவதில்லை. வாழ்க்கை ஒரு பிசிறற்ற சுருதியுடன் செல்ல வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் வாழ்க்கை, பகுத்தறிவை மீறின திருப்பங்களால், அவரை ஏமாற்றுகிறது. பல வேடிக்கையான அபத்தமான சந்தர்பங்களுக்கு இட்டுச் செல்கிறது. அப்போதெல்லாம் அவர் கோபத்தில் கத்துகிறார், தலையில் அடித்துக் கொள்கிறார். ஆனால் ஜிம் எந்த எதிர்பாராமைகளை சுலபத்தில் ஏற்கிறான். அவன் சின்ன சின்ன வசதிகளுடன் உல்லாசமாக வாழ்கிறான். அபத்தங்களை அபத்தங்களாகவே எதிர்கொள்கிறான். இது போன்ற மிக நுணுக்கமான இடங்கள் தாம் இந்த நாவலின் அழகு - நாம் கதைசொல்லியின் நிலைப்பாடே சிறப்பு என நினைக்கும் போது அவரது பிழைகளை, அவர் விக்கித்து நிற்கும் இடங்களையும் அசோகமித்திரன் காட்டுகிறார்.
அன்பையும் பற்று பிணைப்பையும் அவர் கற்பிதமாக காண்பதாலே அவரால் அனைவராலும் ஒட்டி ஒழுக முடிகிறது; அதனாலே தான் அவரது உறவாடலில் ஒரு வறட்டுத்தனமும் வந்து விடுகிறது. வாழ்க்கை ஒரு தர்க்க ஒழுங்குக்குள் வர வேண்டும் எனும் எதிர்பார்ப்பு அவருக்குள் ஏற்படுகிறது. இதையும் அசோகமித்திரன் போகிற போக்கில் நமக்கு உணர்த்தி விடுகிறார்.

கடைசியாக நாம் இந்தஒற்றன்எனும் தலைப்பைப் பற்றியும் பேச வேண்டும். தலைப்புக்கான நியாயம் ஒரு அத்தியாயத்தில் வருகிறது. ஒற்றன் என்பது அபே தன் நாவலுக்கு வைக்கும் தலைப்பு. அதற்கு அடுத்து பிராவோ எழுதும் நாவலின் தலைப்புமகா ஒற்றன்”. ஆனால் ஏன் மொத்த நாவலுக்கும் அசோகமித்திரன் இத்தலைப்பை நல்க வேண்டும்?
 ஒற்றன் என்பவன் தான் சேர்ந்த நாட்டுக்கும் வெளி ஆள். அவன் தான் உளவு செய்யும் நாட்டிலும் அந்நியன். இருப்பை பொறுத்தமட்டில், அவன் இரண்டு நாடுகளுக்கும் வெளியே இருப்பவன்; அடையாளத்தைப் பொறுத்தமட்டில் இருநாட்டு எல்லைகளுக்கும் நடுவில் அலைபவன். இந்த நாவலில்ஒற்றன்என்பதை அசோகமித்திரன் அந்நியன் எனும் (ஆல்பர்ட் காமு தரும்) பொருளில் தான் பயன்படுத்தி இருக்கிறார் என்பேன்
நாவலின் பாத்திரங்கள் அதிகமும் மூன்றாம் உலக நாடுகளில் இருந்தும் அமெரிக்கா எனும் முதலாளித்துவ சொர்க்கத்துக்கு வருகிறார்கள், தமது சொந்த பந்தங்களை, பழகின பண்பாட்டை வெளிகளை விட்டு, வருகிறார்கள். அமெரிக்காவின் மால்கள், வாழ்க்கை முறை, நுகர்வுக்கலாச்சாரம் ஆரம்பத்தில் ஈர்த்தாலும் போகப் போக அது அவர்களை அந்நியமாக்குகிறது. நுகர்வு கலாச்சாரத்திலும் ஒரு மலிவு விலை நுகர்வு தரப்பு உள்ளதை அசோகமித்திரன் கே-மார்ட் அங்காடிக் காட்சிகளில் காட்டுகிறார். மக்கள் அங்கு போய் வாங்கும் பொருட்களை பிடிக்காவிட்டால் திரும்ப அளிக்கலாம். அப்படி திரும்ப பெறப்பட்டதை அப்படியே மீண்டும் விற்பனைக்கு வைத்து விடுகிறார்கள். இப்படித் தான் வெண்டுரா தவறாக பயன்படுத்தி உடைத்த ஒரு தட்டச்சு எந்திரத்தை மீண்டும் அப்படியே சரி செய்யாமல் விற்பனைக்கு வைத்து விடுகிறார்கள். இது ஒரு முக்கியமான தத்துவப் பிரச்சனையை எழுப்புகிறது - அந்த தட்டச்சு எந்திரம் இப்போது யாருடையது? அது காசு கொடுத்த வாங்கியவருக்கானது அல்ல, அதை அவர் திரும்ப அளித்து மற்றொன்றை பெறுகிறார் என்றால் அந்த மற்றொன்றும் யாரோ ஒருவர் திரும்ப அளித்ததாக இருக்கலாம் தானே? நுகர்வுப் பண்பாட்டில் மனிதன் தன் அடையாளத்தை இப்படியான பண்டங்களைக் கொண்டு நிறுவுகிறான். இந்த பண்டங்களே உங்களுடையது இல்லை என்றால் உங்கள் அடையாளமும் உங்களுடையது அல்லாமல் தானே ஆகிறது?
வெண்டுரா தட்டச்சு எந்திரம் வாங்குவது கூட ஒரு அபத்தமே - அவனுக்கு ஆங்கிலத்தில் எழுதத் தெரியாது. ஆக ஆங்கில தட்டச்சு எந்திரத்தை அவன் பயன்படுத்தவே முடியாது. இருந்தும் அவன் அதை வாங்கி வைத்து அதனுடன் மல்லாடுகிறான். அபே ஒரே ஒரு சூட்டை அதிக விலைகொடுத்து தைத்துக் கொண்டு அதையே துவைக்காமல் போட்டு கொண்டு பைத்தியமாக திரிகிறான். கதைசொல்லி தான் 15 டாலருக்கு சற்று முன்னர் கெ-மார்ட்டில் 15 டாலருக்கு வாங்கிய பேனா கடிகாரம் தன் அங்கியின் பையில் உள்ள ஓட்டைக்குள் விழுந்து உள்ளே லைனிங்கில் மாட்டிக் கொண்டது தெரியாமல் அதைத் தேடி வந்த வழியெல்லாம் அலைகிறார். பேருந்து நிலையத்திலும் சாலையிலும் பனிசகதிக்குள் கையை விட்டு தேடுகிறார். அந்த சொற்ப பணமல்ல தான் வாங்கிய பொருளை பயன்படுத்தாமலே இழந்து விட்டோமே எனும் ஏக்கம் அவரை வருத்துகிறது. கடைசியில் பொருளை கண்டடைந்ததும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார். பிராவோ அடுத்த கட்டத்துக்குப் போய் எழுத்துக்கலையை ஒரு எந்திரத் துல்லியத்துடன் உருவாக்க முயல்கிறான். அது முடியாமல் போக ஒரு பெண்ணை அழைத்து வந்து அவளுடன் அறையில் முடங்கிக் கிடந்து நாவலையும் சரியாக எழுதாமல் சொதப்புகிறான் - வெண்டுராவுக்கு தட்டச்சு எந்திரம், அபேசுக்கு சூட், கதைசொல்லிக்கு பேனா கடிகாரம் என்றால் இவனுக்கு பெண்நுகர்வுப் பண்பாட்டின் கூட்டுப் பாய்ச்சலை, அவசியமின்றி ஜனங்கள் தம் பதற்றத்தை, தனிமையை போக்க நுகர்வில் ஈடுபடுவதை அசோகமித்திரன் இப்படி எல்லா முனைகளிலும் இருந்து தாக்கி பகடி பண்ணுகிறார்
இப்படியான அந்நியமாதலை சார்த்தர், காமு போன்ற ஐரோப்பிய படைப்பாளிகள் தமது இருத்தலியல் நாவல்களில் கையாண்டிருக்கிறார்கள். உலகின் மிக தத்துவக் முக்கியமான கேள்வி நான் இப்போது ஏன் தற்கொலை பண்ணிக் கொள்ளக் கூடாது என்பதே என ஆல்பர்ட் காமு ஒருமுறை சொன்னார். இதன் மூலம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஒரு தேர்வு தான் என அவர் கூறினார். நீங்கள் இப்போது இதைப் படிப்பதும் ஒரு தேர்வே - இதைப் படிக்காமல் நீங்கள் வேறு என்னன்னமோ செய்திருக்கலாம். ஏன் தற்கொலை கூட பண்ணி இருக்கலாம். ஆக வாழும் ஒவ்வொரு கணமும் நாம் சாகாத கண்மும் தான். இந்த கோணத்தில் பார்த்தால் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு முயற்சியும் முக்கியம். இந்த நிலைப்பாட்டை அசோகமித்திரன் தனது பதினெட்டாவது அட்சக்கோடு, கரைந்த நிழல்கள், தண்ணீர் போன்ற நாவல்களில் தனித்துவமாக, முழுக்க இந்தியத்தனமான நோக்கில், கையாண்டிருப்பார்


இருத்தலியல் நெருக்கடியை - என்ன செய்வது, இதையா அதையா தேர்வது எனும் கேள்வியை - அவரது பாத்திரங்கள் தொடர்ந்து எதிர்கொள்கிறார்கள். அப்போது அவர்கள் தமது அன்றாட வாழ்வின் நெருக்கடிகள் காரணமாய் எந்த தேர்வு வாய்ப்புகளும் இல்லாதவர்கள் ஆகிறார்கள். வறுமை அவர்களை சிக்கலான தத்துவக் கேள்விகளிடம் இருந்து காப்பாற்றுகிறது. இந்த நாவலில் அரசாங்கம் அளிக்கிற தொகையில் அவர்கள் ஏழெட்டு மாதங்கள் ஒரு வீட்டுத்தொகுப்பில் தமக்கு அளிக்கப்பட்ட இடத்தில், ஒரு மேலாளரின் பொறுப்பில், வாழ வேண்டும். அந்த பணம், அதை செலவு செய்வது, கூட பல சிக்கல்களை இந்த பங்கேற்பாளர்களுக்கு ஏற்படுத்துகிறது. இருந்தாலும் சொந்த குடும்பம், சொந்த நாடு, சொந்த பண்பாடு ஆகிய கட்டுப்பாடுகள் இல்லாதவர்களுக்கு சொந்தமாக முடிவுகளை எடுப்பது பெருஞ்சிக்கலாகிறது என அசோகமித்திரன் நமக்கு உணர்த்துகிறார். இப்படித் தான் அவர்கள் ஒற்றர்கள் ஆகிறார்கள்.

நன்றி: உயிர்மை.காம்

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...