முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அடிமைகளின் உடல்மொழியும் அதிகாரத்தின் உடல்மொழியும் (3)



பெண்கள் எந்த சூழலையும் பளிச்சென்று, துடிப்பானதாக மாற்றி விடுவார்கள். இதற்குக் காரணம் அவர்களின் ஆளூமை மட்டுமல்ல, அவர்களுக்கு இந்த சமூகம் அனுமதித்துள்ள கலக உடல்மொழியும் தான்
பெண்களின் சமூக இயக்கம் என்பது தொடர்ந்து பல பிரச்சனைகள், விமர்சனங்கள், கண்டனங்கள், ஒடுக்குமுறைகள், தாக்குதல்களுக்கு நடுவில் தான் சாத்தியாகிறது; இதற்குக் காரணமும் அவர்களுக்கு இதே சமூகம் அனுமதிக்கும் கலக உடல்மொழி தான்; கலகம் செய்யும் அவர்களின் உடம்புக்கு சமூகம் அளிக்கிற தனியான வெளியும் தான்.

இதைப் புரிந்து கொள்ள நாம் இப்பெண்களை கன்னியாஸ்திரிகளுடன் ஒப்பிட வேண்டும். ஆர்ப்பாட்டமான, கண்ணைப் பறிக்கும் தோற்றத்துடன் செல்லும் ஏராளமான பெண்களுக்கு நடுவே ஒதுக்கமான, சுய-ஒடுக்கமான உடல்மொழியுடன் செல்லும் கன்னியாஸ்திரிகளை நான் கவனிப்பதுண்டு. அவர்களில் அழகிகள் உண்டு, ஆனால் அந்த அழகு யாருக்கும் பாதகமற்ற மழுங்கடிக்கப்பட்ட கத்தி. அந்த கத்தியினால் அவர்களுக்கும் சாதகம் இல்லை, பிறருக்கும் பாதகமில்லை; அவர்களின் உடம்பென்னும் கத்தியினால் அவர்களுக்கும் பாதகமில்லை; சமூகத்துக்கும் சாதகமில்லை. சமூகப் பண்பாடு அளிக்கும் பல குறியீடுகளை ஒரு பெண் எடுத்து பயன்படுத்துவதே அவளை அதிகாரத்தை நொறுக்கும் உடல்மொழி கொண்டவளாக்குகிறது. தன்னளவில் ஒரு பெண்ணுக்கு எந்த ஆற்றல் இல்லை. கலாச்சாரக் குறியீடுகளை கைவிடுகிறவளே ஒரு கன்னியாஸ்திரி - அவள் வெறுமனே பாலியலையோ உடைமைகளின் மீதான உரிமையையோ துறப்பவள் மட்டும் அல்ல. தன் அடியாழத்தில் ஒரு கன்னியாஸ்திரி பிறந்து வளர்ந்த குழந்தையைப் போன்றவள். ‘வெறுமனேதன் உடம்பை வைத்து என்ன பண்ணுவது எனப் புரியாமல் அவள் திகைக்கிறாள்; பிறகு மதத்துக்குள், அதன் சடங்குகளுக்குள் (ஒரு ஆண் சமூக இருப்பிடம் தன் உடம்பை ஒப்படைப்பதைப் போல) போய் ஒடுங்கிக் கொள்கிறாள். இதனாலே அவர்களிடம் சுலபமாக ஆண்மொழி தோன்றி விடுகிறது. இந்த இடத்துக்கு வந்து சேரும் கன்னியாஸ்திரி தேவாலயமும் மடமுமே தன் மொழி என நம்ப தலைப்படுகிறாள். இப்போது அவளுக்கு ஒரு விசயத்தில் ஆறுதல் கிடைக்கிறது - லௌகீக வாழ்வில் இருக்கும் பெண்களை விட தான் அதிக சுதந்திரம் கொண்டளாக உள்ளதை அவள் அறிகிறாள். உடம்பின் மீதுள்ள உரிமையினால், அது தரும் தனித்துவத்தினால் ஒரு பெண் இழக்கும் சுதந்திரத்தை மற்றொரு பெண் முன்னதை இழந்து பெறுகிறாள்
ஒரு கன்னியாஸ்திரி தன் அங்கியை அணிந்து சிலுவையை மாரில் அணியும் போது பெறும் அந்த பாலியலற்ற தேகத்தின் சுதந்திரத்தையே ஆணும் சிறுவயது முதலே அனுபவிக்கிறான். அவனால் தெருவில் ஒன்றுக்கு போக முடியும்; நடைபாதையில் முழுபோதையில் லுங்கி விலகியது கூடத் தெரியாமல் படுத்து தூங்க முடியும். ஆனால் அதைக் கடந்து நோக்கினால் அவனுக்கு இந்த சமூகத்துடன் உறவாட ஒரு மொழி இல்லை, பண்பாட்டு குறியீடுகளை எடுத்தாள ஒரு பயிற்சியோ சாத்தியமோ வெளியோ இல்லை. இதனாலே ஒரு ஆணும் கன்னியாஸ்திரியும் ஒரே உடல்மொழியை கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சூழலுக்குப் பொருந்துகிற உடல்வெளிப்பாடு என்பதையே நவீன அதிகாரம் நம்மிடம் கோருகிறது. இதை வலியுறுத்துகிற அதே சமயம் ஒரு சூழலுக்கு பொருந்தாத உடல் வெளிப்பாட்டை அது பெண்களுக்கு மட்டுமே அனுமதிக்கிறது (ஜிம்முக்கு இறுக்கமான டிராக்பேண்ட், டிஷர்ட் அணிந்து வரும், கோயிலுக்கு பளீரென பட்டுச்சேலையில் வரும் பெண்களை நினைவில் கொள்ளுங்கள்). பெண்களின் உடல் இயல்பாகவே எந்த ஒரு தர்க்க ஒழுங்குக்குள்ளும் ஒடுங்காத பேரொழுக்கு (அதுவே அவர்களின் மொழியாக இலக்கியத்திலும் உள்ளது), ஆனால் ஆண்களின் உடல்மொழியும், சமூக மொழியும் இருமைகளுக்குள் சிறைப்பட்ட இறுக்கமான ஒன்று என ஹெலன் சிக்ஸூ எனும் பெண்ணியவாதி தனது The Laugh of the Medusa எனும் கட்டுரையில் சொல்கிறார். அதாவது கலகம் என்பது பெண் இருப்பின் அடிப்படையாக இயல்பாகவே உள்ளது. அதனால் தான், ஆண்களைப் போன்றே, formal attire அணியும் சந்தர்ப்பம் வரும் போது அவர்கள் சேலை அணிந்து வந்து அதிகாரத்தின் நோக்கத்தை முறியடிக்கிறார்கள்; கார்ப்பரேட் அலுவலகங்களில் சட்டை, கால்சராய் அணிந்து வரும் பெண்களும் தமது லிப்ஸ்டிக், கூந்தலின் ஸ்டைல், ஆளை அடிக்கிற ஒப்பனை, வாசனை திரவிய, உள்ளாடை மூலம் மாரை மேலெடுத்துக் காட்டுவது என அலுவலக வேலை கோரும் தர்க்கத்துக்கு நேரெதிரான அரசியலை தம் உடல்மொழியால் நிகழ்த்துகிறார்கள். கராறான ஆவணங்கள், பி.பி.டியுடன் ஆண்கள் முறுக்கான எந்திரத்தனத்துடன் நடத்தும் அலுவலக கூட்டங்களில் வந்து விடும் இப்பெண்கள், அக்கூட்டங்களில் தம் சீரான பங்களிப்பை வழங்கியபடியேஒரு நொடியில் அதன் அரசியலை நேர்கீழாக மாற்றி விடுகிறார்கள்.

பகுதி நான்கைப் படிக்க:

https://thiruttusavi.blogspot.com/2019/11/4.html


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...