முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இருளின் காலம்

ஊடகவியலாளர்களைக் கொத்துக்கொத்தாகக் கைது பண்ணுகிறார்கள் எனும்போதே நெருக்கடி நிலை ஆரம்பித்துவிட்டது ஊர்ஜிதம் ஆகிறது. அதுவும் போராட்டங்களைப் பதிவு பண்ணுவதற்குப் போனவர்களை. ஒட்டுமொத்தமாக போராடுபவர்களைத் தூக்கிச் சிறையில் வைப்பது, அவர்களைக் குறித்த விபரங்கள், காணொளிகள், செய்திகள் வெளிவராமல் பார்ப்பதே பாஜக அரசின் திட்டம். இனி அடுத்து என்னவெல்லாம் செய்வார்கள்? எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டாளர்களை கண்ட இடத்தில் கைது, மறைமுகமாக பல ஊடகங்கள் முடக்கம், மக்கள் சில பகுதிகளில் பயணிக்க மறைமுகத் தடை, எந்தெந்த விசயங்கள் ஊடகங்களில் பேசப்படலாம் என்பதற்கான மறைமுக அறிவுறுத்தல் எனப் போகும். முடிவில் எதிர்க்கட்சிகள் தாம் ஆளும் மாநிலங்களில் போராடினால் ஆட்சிக் கலைப்பு நடக்கும். ஆளுநர் ஆட்சி வரும். இப்போதைக்கு நீதிமன்றங்கள் பிணை வழங்குவதால் சிறிது அவகாசம் போராளிகளுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் கிடைத்துள்ளது. வெளிவர முடியாத சட்டங்களில் கைது நடக்கும்போது நிலைமைத் தீவிரமாகும்.
ராகுல் காந்தி இப்போராட்டங்களை முன்னறிந்து பாராளுமன்றத்தில் பேசியது நினைவுக்கு வருகிறது. அதாவது கரப்பான்கள் தோன்றும் முன்பே இப்படியான போராட்டங்கள் நடக்க இருக்கின்றன என அவர் சொன்னார். இரண்டு போராட்டங்கள் நடந்துவிட்டன. மூன்றாவதாக ஒன்று இவ்வருட இறுதிக்குள் இருக்கும் என்கிறார்கள். அல்லது அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகலாம். வருடத்திற்குச் சில போராட்டங்கள் என்பதே திட்டம் என நினைக்கிறேன். ஒவ்வொரு போராட்டமும் இந்த அரசை சர்வாதிகார நிலையை நோக்கி இன்னும் இன்னும் நெருக்கித் தள்ளுகிறது. இனிமேல் பல்லாயிரம் பேர்கள், குறிப்பாக இளைஞர்கள், சிறையிலேயே வருடக்கணக்கில் இருக்க நேரிடலாம். காயங்கள், வலி, சிறை வாழ்க்கை, எதிர்காலம் பறிபோவது என இழப்புகள் ஏராளம். ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னால் போகிறோம். அதைவிட படுமோசமான ஒரு காலகட்டத்தை நோக்கிப் போகிறோம்.
நேற்று கவிஞர் சங்கர ராமசுப்பிரமணியனிடம் பேசும்போது "படைப்பாளர்கள் இச்சூழலில் என்ன செய்ய முடியும்" எனக் கேட்டேன். இருவருமே எழுத்தில், குறிப்பாக புனைவிலோ கவிதையிலோ மூழ்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதில் உடன்பட்டோம்.
முதலில், எழுதுவதைத் தவிர எழுத்தாளர்களால் ஒன்றும் பண்ண இயலாது.
அடுத்து, தெருவில் முழக்கமடுவதைவிட ஆற்றல் மிக்கது எழுதுவது.
அடுத்து, எழுத்து பல ஆண்டுகளுக்குப் பின்பும் நடந்த தீங்குகளுக்கு சாட்சியமாக நிற்கும். ஆக எழுத்தாளர் காலத்தின் சாட்சியாகவும் இருக்கிறார்.
அடுத்து, எழுத்தாளர்கள் உணர்வுரீதியாக மிகவும் பலவீனர்கள். வெளியே நிகழும் அநீதிகள் அவர்களை உள்ளுக்குள் உடைந்து போக வைக்கிறது. ஆதனாலே சிலர் எதையும் பார்க்க விரும்பாமல் மணலில் முகம் புதைத்துக் கொண்டு இயற்கை, அருவி, நிலா என்று எழுதுகிறார்கள். கனவுகளை எழுதுகிறார்கள். எழுதுவது மட்டுமே அவர்களைக் காப்பாற்றும். அரசியல் கூருணர்வு கொண்ட படைப்பாளிகள் தம் கருத்துக்களை, உணர்வுகளை படைப்பூக்கத்தைக் கொண்டு பரிசீலிப்பதே ஒரே வழி.

நாம் இப்போது வாழ்வது இருளின் காலத்தில். நீண்ட நெடிய அந்தகாரம் ஆரம்பித்துவிட்டது. அது மிகவும் அன்றாடத் தன்மை கொண்டதாக உள்ளதே இன்னும் அச்சுறுத்தலாக உள்ளது. ஓரளவுக்கு சமூகப் பிரக்ஞை கொண்டோர் கூட வரும் ஆண்டுகளில் மனம் உடைந்து போக, மன அழுத்தத்தில் விழ வாய்ப்புள்ளது. எழுதுவது மட்டுமே எல்லோரையும் காப்பாற்றும். உலகம் முழுக்கப் படைப்பாளிகள் இதையே செய்கிறார்கள். நாமும் எழுதுவோம். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...