தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்கள் எனப் பூடகமாக ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்தினார், உடனே எதிர்க்கட்சியினரும் அந்த வலையில் விழ மோடி மீதான ஊடக கவனம் திரும்பியது என்கிறார். தமிழ்நாட்டிலும் ஒவ்வொரு சட்டப்பேரவை விவாதத்தின்போதும் தவெகவின் நிர்வாகச் சொதப்பல்கள் மீது திமுக கண்டனம் எழுப்புகிறது, உடனே தவெக அதைத் திசைத் திருப்ப தனிப்பட்ட கேலி, கிண்டல்கள், ஆபாச சைகைகளைக் கொண்டும் பழைய சர்ச்சைகளைத் தோண்டி எடுத்துப் பேசியும் விவாதத்தை திமுக சார்ந்ததாக மாற்றித் தப்பிக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெடுகிறது, ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று விமர்சித்தால் திமுகவைக் குறித்து சர்க்காரிய கமிஷன் என்ன சொன்னது தெரியுமா, ஸ்டாலின் எப்படி மிஸாவின் போது மோவாய் உடைபட்டார் தெரியுமா என விஜய் கேலி செய்யும், ஆவேசமாகக் கத்தியும், சைகை செய்தும் ‘பதிலடி’ கொடுக்கிறார். அதற்கு இது பதில் இல்லையே என்று கேட்க அவர் நின்று கொடுப்பதில்லை. சட்டமன்றத்தில் அவருக்கு எதிராகக் கேள்வி கேட்க அவர் அனுமதிப்பதில்லை - அனுமதிப்பதாகச் சொல்லிவிட்டு சபாநாயகரை வைத்து மறுத்து விடுகிறார்.
விஜய்யின் இந்த கவனம் திருப்பும் போக்கை ஒருபோதும் எதிர்க்கட்சியால் முறியடிக்க முடிவதில்லை. மாறாக, அவர்கள் அவரது சீண்டலால் உடனடியாகத் தூண்டப்படுகிறார்கள். அவரது பொறியில் போய் விழுகிறார்கள்.
இதை இப்படிப் புரிந்து கொள்ளலாம் - ஒருவர் ஜேப்படித்ததற்காக மாட்டிக் கொள்கிறார். அப்போது பார்த்து அவரது நண்பர்கள் இன்னொரு பக்கமிருந்து பெரிதாகச் சத்தம் போட்டு மக்களின் கவனத்தைத் திருப்புகிறார்கள். மக்கள் அங்கு ஓட ஜேப்படித் திருடன் தப்பிக்கிறார்.
நாம் மோடியும் விஜய்யும் முன்னெடுக்கும் எந்த ஒரு உத்தியையும் வரலாற்று ரீதியாகப் புரிந்துகொள்ள ஹிட்லர் இதை எப்படிச் செய்தார் எனக் கேட்டால் போதும்?
ஹிட்லர் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களை பயன்படுத்தினாரா? ஆம். எப்படிப் பயன்படுத்தினார்? 1933இல் ஜெர்மனியில் ஹிட்லர் தலைவராக நியமிக்கப்பட்டு ஒரு கூட்டாட்சி அரசை நடத்திக் கொண்டிருந்தார். கூட்டணிக் கட்சிகளுக்கு அவர் மீது நம்பிக்கையோ விருப்பமோ இல்லை. ஆட்சி எந்நேரமும் கவிழும் நிலை இருந்தது. இவ்வாறு அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்த சமயத்தில் ஹிட்லர் ஆட்சியைக் கலைத்து தேர்தலை அறிவிக்கும்படி ஜனாதிபதி ஹிண்டென்பெர்கைக் கேட்டுக் கொண்டார். தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்தது. ஆனால் மக்களின் மனநிலையோ ஹிட்லரின் கட்சிக்கு எதிராக இருந்தது. கம்யூனிஸ்டுகள் கடுமையாக அவரை எதிர்த்துக் களமாடிக் கொண்டிருந்தனர். ஹிட்லரிடமும் தேர்தல் செலவுக்கான நிதி குறைந்து கொண்டு வந்தது. அப்போது பார்த்து ஜெர்மனியில் உள்ள ரெயிஷ்டேகில் ஜெர்மானிய பாராளுமன்றத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதை ஹிட்லர் நன்குப் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தார். உடனே ஹிட்லர் தன் பிரச்சார அமைச்சகத்தைக் கொண்டு அந்தத் தீயை மூட்டியது கம்யூனிஸ்டுகள், அவர்கள் ஒரு புரட்சியைத் திட்டமிடுகிறார்கள், ஜெர்மனியைக் கிளர்ச்சி மூலம் கைப்பற்றத் திட்டமிடுகிறார்கள் எனத் தொடர்ந்து பேசிப் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தினார். இப்பொய்ச் செய்தியை அவரது கட்சிக்காரர்கள் தீவிரமாகப் பரப்பினார். மக்கள் இதை நம்பத் தொடங்கினர். இப்போது ஹிட்லர் ஜனாதிபதியைச் சந்தித்து ஒரு நெருக்கடி நிலைச் சட்டத்தை நிறைவேற்ற வைத்தார். இதைக் கொண்டு ஊடகங்களின் கருத்து உரிமைகளைப் பறித்துவிட்டு 4000 கம்யூனிஸ்டுகளுக்கு மேல் கைது பண்ணினார். அடுத்து வந்த தேர்தலில் அவர் எதிர்க்கட்சிகளின்றி சுலபமாக எதிர்கொண்டு வென்றார்.
ஆறு வருடங்களுக்குப் பிறகு ஹிட்லருக்கு போலந்தை ஆக்கிரமிக்கும் தேவை வருகிறது. ஆனால் உலக நாடுகள் இதை எதிர்க்கிறார்கள். அவர் உடனே தன் ராணுவ வீரர்களை போலந்து ராணுவ சீருடை அணிந்து கொடி ஏந்தி ஜெர்மனி எல்லையில் உள்ள கெய்பிட்ஸ் எனும் சிறுந்கரத்தில் உள்ள வானொலி நிலையத்தைக் கைப்பற்ற வைக்கிறார். அடுத்து அவர்கள் வானொலி நிலைய ஒலிபெருக்கி வழியாக ஒரு சேதியைப் பரப்புகிறார்கள்: "நாங்கள் போலந்து தேசத்தவர் கெய்விட்ஸைக் கைப்பற்றி விட்டோம்." ஜெர்மனி முழுக்க பீதி பரவுகிறது. இந்நேரம் தாம் முந்தின நாளே கைது பண்ணின ஹொனியோக் எனும் ஜெர்மானிய விவசாயியை ஜெர்மனிய படைவீரர்கள் மயக்க மருந்து ஊட்டி வானொலி நிலையத்துக்குக் கொண்டு வருகிறார்கள். வதை முகாம்களில் இருந்து மேலும் சில யூதக் கைதிகளைக் கொண்டு வருகிறார்கள். இவர்களைச் சுட்டுக் கொன்று போலந்து சூருடை அணிவித்து அப்புகைப்படங்களை ஆதாரமாக பத்திரிகைகளில் பிரசுரிக்கிறார்கள். மக்கள் இதை நம்பிக் கொந்தளிக்க ஹிட்லர் அடுத்த நாளே போலந்துக்கு எதிராகப் படையெடுக்கிறார். நீங்கள் இதே பாணியை மோடியின் கோத்ரா ரயில் எரிப்பு பொய்ப்பிரச்சாரத்திலும் அதை ஒட்டி நடத்தப்பட்ட மதக்கலவரத்தைப் பயன்படுத்தி அவர் வென்ற முறையிலும் காண முடியும். இதன் மென்வடிவை கரூர் நெரிசல் விபத்தில் இறந்தவர்களை திமுகவின் சதியாலோசனையால் கொல்லப்பட்டவர்களாக தவெக பிரச்சாரப் படையினர் சித்தரித்து விஜய் மீதான பழியை நற்பெயராக, இரக்கமாக மாற்றியதிலும், "ஜனநாயகன்" படக் கசிவை திமுகவின் பழிவாங்கலாகச் சித்தரித்ததிலும் இப்போது சட்டப்பேரவையில் அவர் செய்யும் கவனத் திருப்பல் தந்திரங்களிலும் காண முடியும். ஹிட்லர், மோடியில் இருந்து விஜய் மாறுபடுவது அவர் நேரடியாக வன்முறையைக் கையில் எடுப்பதில்லை என்பதில் மட்டுமே. அவருடைய உத்தி மொழி சார்ந்த வன்முறை. பொய் பிம்பங்களைச் சித்தரிப்பது, பொய்யைப் பரப்புவது, சீண்டுவது, கோபப்படுத்தி விட்டு ஒளிவது, உடல் அவமதிப்புகளில் ஈடுபடுவது, பிறரின் சாதனைகளைத் தனதாகக் காட்டுவது, பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திருப்பித் தப்பிப்பது. இதை ஒரு பிந்தை உண்மைக் காலத்தின் வன்முறைப் பிரயோகம் எனலாம் - உண்மையைத் தொடர்ந்து சிதைத்து பொய்யின் கேளிக்கைகளால் எதிரிகளைத் துன்புறுத்துவது.
எனக்கு இதற்கு திமுகவினர் பலியாவதற்குத் தவெகவின் பிரச்சார அணியினர் இச்செய்திகளைப் பரவலாகப் பரப்பக் கூடும் எனும் அச்சமும் சட்டப்பேரவையில் விஜய் எதையும் எதிர்கொள்ளாமல் வெளியேறுவதும் அமைதி காப்பதும் முக்கிய காரணங்கள் எனத் தோன்றுகிறது.
திமுகவின் முன்னுள்ள முக்கிய சவாலே இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த கவனத் திருப்பல் பேராயுதங்களுக்கு அவர்கள் இரையாகப் போகிறது என்பதுதான் - விட்டால் விஜய் அடுத்த ஐந்தாண்டுகளையும் ஒரு தேர்தல் பரப்புரையாக மாற்றி திமுகவின் ஊழல்களை அம்பலப்படுத்தி எதிர்ப்பதே தன் இலக்கு, ஆட்சி செய்வதல்ல என நிறுவி விடுவார். அதுவும் ஒரு மலினமான பொழுதுபோக்காக இருப்பதால் எல்லாருமே அதில் ஈடுபடுவர். இது மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் வீணடித்து அரசையும் தன் பொறுப்பை ஏற்காமல் ஊழல் செய்ய அனுமதிக்கும்.
(செப்டம்பர் 8, 2026)
கருத்துகள்