முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லாட்டரிக் கொள்ளைக்காரர்களை எதிர்ப்பது

 


மக்களாட்சியில் ஒரு நிலைகுலைவு - தேர்தல் மோசடி, வாக்கு எந்திர மோசடி, சினிமாக்காரர்களை வைத்து அரசியலைக் கைப்பற்றும் லாட்டரித் தொழிலதிபர் மோசடி - வரும்போது கிடைக்கிற ஊடகங்களைப் பயன்படுத்தி மக்கள் அரசியல் பேசுவது நல்லது - அதனால் மக்களுக்கு நேரடியாகப் பணம் வரப் போவதில்லை. மக்கள் அரசியல்வாதிகள் அல்லர். அரசியல் அவர்களுக்குத் தொழில் அல்ல. ஆனாலும் அரசியல் அவர்களுடைய வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கிறது. உதாரணமாக, ஒரு அரசாக நீங்கள் அமெரிக்க சார்பா, ரஷ்ய சார்பா என்பது உங்கள் நாட்டின் எண்ணெய் இறக்குமதியை பாதிக்கும். அது பொருளாதார நெருக்கடிக்கு, விலைவாசி உயர்வுக்கு இட்டுச் செல்லும். அண்மையில் நாட்டின் பிரதமரே இதை ஒப்புக் கொண்டார். மக்கள் மட்டும் அரசியல் பேசாமல் தம் போக்கு இருந்தால் அவர்கள் வேறு நாட்டுக்குத்தான் குடிபெயர வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாதபோது மக்கள் பேசியே ஆக வேண்டும்.

மக்களாட்சி ஒழுங்காக நடக்கும்போது மட்டுமே மக்களால் - பொழுதுபோக்கு, படைப்பாக்கம், வாசிப்பு என - கொஞ்சம் சுயநலமாக இருக்க ஈயலும்.

சினிமா அரசியலுக்குள் வரும்போதெல்லாம் சாக்கடை நம் தண்ணீரில் கலக்கிறது, பின்வாசல் வழியாக பொருளாதார குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளைக்காரர்கள், மோசடிக்காரர்கள் வந்து பிரதிநிதிகளையும் ஊடகங்களை விலைக்கு வாங்கி மாநிலத்தை கைப்பற்றப் போகிறார்கள் எனப் பொருள். அவர்களுக்கு அரசியல் என்பது நீண்ட காலத் தொழில் அல்ல. அது தற்காலிக அஸைன்மெண்ட். ஒரு கொள்ளைக் கூட்டம் வந்து உள்ளே புகுந்து பல ஆயிரம் கோடிகளை அபகரித்து விட்டுப் போய்விடுவார்கள். அவர்கள் இவ்வாறு ஏற்படுத்தும் பாதிப்பு மோசமாக இருக்கும். அவர்கள் யாருக்கும் கடமைப்பட்டவர்கள் அல்லர் என்பதால் நீங்கள் அவர்கள் மீது குற்றம் சுமத்தி நடவடிக்கை எடுப்பது கடினம். குரோனி தொழிலதிபர்கள் ஊழல் அரசியல்வாதிகளை விட ஆபத்தானவர்கள். குரோனி தொழிலபதிபர்களே (மார்ட்டின் குடும்பத்தினர்) இன்று தமிழ்நாட்டை நேரடியாக ஆள்கிறார்கள்.

லாட்டரியின் விளைவுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்: ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவரது அப்பா தினசரி லாட்டரி வாங்கும் போதைக்கு ஆட்பட்டிருந்தார். சில ஆயிரங்களைத் தவிர அவர் எதையும் லாட்டரி மூலம் வெல்லவில்லை. பல லட்சங்களை இழந்துவிட்டார். அப்பணம் இருந்திருந்தால் அவர் ஒரு வீடு கட்டியிருக்கலாம், தன் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்திருக்கலாம். இம்மாதிரி குடும்பங்களை ஏமாற்றிப் பறித்த பல லட்சம் கோடிகளையே மார்ட்டின் இன்று அரசுகளை விலைக்கு வாங்கப் பயன்படுத்துகிறார். அவர் மீது பல ஆயிரம் கோடி முறைகேடு குற்றச்சாட்டுகள், வழக்குகள் உண்டு. ஆனால் பணத்தை அள்ளி இறைத்து தப்பித்து விடுகிறார். ஒரேயடியாக அதிகாரம் தம் வசம் இருந்தாலே வழக்குகள் இன்றி கொள்ளையடிக்க முடியும் என்றே அவர் அரசையே கைப்பற்றுகிறார். அவரது பணத்தின் துணிச்சலைக் கொண்டே இன்று ஆதவால் ஒரு கட்சியைத் துவங்கி, அதில் விஜய்யை பொம்மைத் தலைவராக்கி ஆட்டுவித்து, அப்பணத்தைக் கொண்டே விகடன், தந்தியையே வாங்க முடிந்தது என்கிறார்கள். யோசித்துப் பாருங்கள் - எப்படியான ஊடக நிறுவனங்கள் இவை. அப்பணத்தைக் கொண்டே அவர் திமுக கூட்டணிக் கட்சிகளை வாங்குகிறார். அதிமுக எம்.எல்.ஏக்களை பதவி விலக வைக்கிறார். ஊழல் பணத்தை வைத்து அரசியல் செய்வதை விட லாட்டரிப் பணமான மக்களின் குருதிப் பணத்தை வைத்து ஆட்சி நடத்துவது கொடூரமானது. எத்தனையோ கோடி பேர்களின் சாபம் அப்பணத்தின் பின் உள்ளது.
ஒரு குற்றவாளி வந்து மிகச் சுலபமாக இதையெல்லாம் சாதிக்கிறார். மக்கள் விஜய், விஜய் என்று சாதாரணமாக இதைக் கண்டு ஏமாறுகிறார்கள். அறிவுஜீவிகள் இது இளைஞர் புரட்சி, வெகுமக்களின் வருகை, தூய லட்சியவாதம் என மயங்குகிறார்கள்.

பாதிக்கப்படும் மக்கள், பொறுப்புணர்வுள்ள குடிமைச் சமூகம் எச்சரிக்கையாகி இதை எதிர்க்க வேண்டும். நான் எழுதினால், பேசினால் என்ன நடந்துவிடும் என நினைக்கலாகாது. சார்த்தர் சொன்னதைப் போல ஒரு தனிமனிதர் ஒன்றைக் குறித்து நினைப்பது, அதை நோக்கிச் செயல்படுவது, ஒரு சொல்லைச் சொல்வது, ஒரு விரலை அசைப்பது கூட அரசியல்தான். அது ஏதோ ஒரு சலனத்தைச் சமூகத்தில் ஏற்படுத்தும். ஒன்றுமே செய்யாமல் இருப்பதற்கு அது மேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.