ஜெயகாந்தன் நம் பண்பாட்டுச் சூழலில்
ஒரு புயல் போல் வீசிய காலத்தில் நான் வாசிக்க துவங்கவில்லை. அவரது தாக்கத்தை நான் நேரடியாக
உணர்ந்ததில்லை. வெகுஜன எழுத்தை பொறுத்தமட்டில் நான் சுஜாதா, பாலகுமாரன் காலகட்டத்தை
சேர்ந்தவன். அதே போல நான் ஜெயகாந்தனை முற்றுமுழுதாக படித்ததும் இல்லை. சில நேரங்களில்
சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள், பாரிசுக்கு போ போன்றவை, சில குறுநாவல்கள், பல
சிறுகதைகள், கூர்மையான கட்டுரைகள் இது தான் நான் வாசித்தவை. ஆக ஜெயகாந்தன் பற்றி ஒரு
முழுமையான மதிப்பீடு வைக்கும் தகுதி எனக்கில்லை. படித்த மட்டில் அவர் மீதான என் மனப்பதிவை
மட்டும் இங்கு எழுதுகிறேன்.
நான் பாலகுமாரன், சுஜாதா படித்து
விட்டுத் தான் மௌனி, ல.சா.ரா, சு.ரா, அசோக மித்திரன், ஜெயமோகன், எஸ்.ரா, கோணங்கி மற்றும்
பல மேற்கத்திய எழுத்தாளர்களைப் படித்தேன். அதனால் எனக்கு ஆரம்பத்தில் பாலகுமாரன், சுஜாதா
மீது ஒரு பிரமிப்பு இருந்தது; அது இலக்கியம் படிக்க ஆரம்பித்ததும் சோப்பு நுரை போல்
உடைந்து விட்டது. ஆனால் ஜெயகாந்தன் விசயத்தில் நேர்கீழ். நான் தீவிர இலக்கிய எழுத்தை
படித்து சற்றே முதிந்த பின் தான் ஜெயகாந்தனுக்கு வந்தேன். அதனால் சற்றே ஏமாற்றம் தான்
ஏற்பட்டது.
“அக்னி பிரவேசம்” இன்று இணையத்தில்
யாரும் எழுதி விடக் கூடிய ஒரு கதை தான். அப்பெண் பின்னர் தன்னை வன்புணர்வு செய்தவனைத்
தேடி அவன் மீது ஒரு மென்மையான ஆனால் முதிர்ந்த பிரியத்துடன் இருக்கிறாள் என விவரிக்கும்
“சில நேரத்தில் சில மனிதர்கள்” எனக்கு கொஞ்சம் மிகையான கதை எனப் பட்டது.
பெண்கள் தம்
மீதான வன்மத்தை தம்மை அறியாது ரசிக்கிறார்கள் என்பது உண்மையே. ஸ்டாக்ஹோம் சிண்டுரோம்
என்று ஒரு மனநிலையை உளவியலில் குறிப்பிடுவார்கள். கடத்தப்பட்ட பெண்கள் தம்மை கடத்தியவர்கள்
மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு அவர்களுடனே இருக்க விரும்புவது. ஆனால் இது அனைத்துப் பெண்களுக்கும்
பொருந்தாது. இந்திய பெண்களிடம் இந்த ஸ்டாக்ஹோம் சிண்டுரோம் இருப்பதாய் ஜெ.கெ நினைத்திருக்கலாம்.
அவர் பார்த்த சம்பிரதாயமான பெண்கள் பலர் உள்ளார தம்மை யாராவது ஆட்கொண்டு கட்டுப்படுத்த
மாட்டார்களா என ஏங்கி இருக்கலாம். ஆனால் இது மற்றொரு விதமாகவும் இருக்கும்.
சற்றே பொருளாதார
சுதந்திரமும் அதிகாரமும் பெற்ற பெண்கள் தாம் அடக்கியாண்டு அதிகாரம் பண்ண ஒரு ஆண் கிடைக்க
மாட்டானா என ஏங்குவார்கள். இன்றைய காலத்தில் இத்தகைய பெண்கள் தாம் அதிகம். “சில நேரங்களில்
சில மனிதரகள்” நாயகியைப் போன்றவர்கள் இன்று அருகி விட்டார்கள். அதே போல் பெண்கள் இன்று
ஜெயகாந்தன் காலத்தை விட பலமடங்கு அதிகம் வெளியே சென்று வெளியுலகில் புழங்குவதால் அவர்கள்
மிக அதிகமாய் பாலியல் ஒடுக்குமுறையை, சுரண்டலை நேரிடுகிறார்கள். தம் உடல் மீதான தொடர்ச்சியான
அத்துமீறல் அவர்களுக்கு தொடுகை பற்றிய ஒரு அச்சத்தை, வெறுப்பை உண்டாக்கி உள்ளது. தன்
கணவனால் தினமும் அடித்து உதைக்கப்பட்டு அழுது ஆர்ப்பரித்து, பிறகு ரகசியமாய் அந்த மனப்புண்ணை
நக்கி ருசி காணும் வகையான பெண்கள் இன்று வெகுவாய் குறைந்து விட்டார்கள்.
பொருளாதார,
சமூக சூழலின் ஒரு பின்விளைவான ஒரு மனநிலை மட்டுமே “சில நேரத்தில் சில மனிதர்கள்” நாவலின்
நாயகியிடம் உள்ளதோ என தோன்றுகிறது. இதுவே அந்நாவலின் குறை. அப்பெண்ணின் மனநிலையின்
பல பின்னணி பரிமாணங்களை ஜெயகாந்தனால் அலசி பதிவு செய்ய இயலவில்லை. ஒரு நல்ல படைப்பு
எக்காலத்திலும் உண்மை மங்காது இருக்க வேண்டும். ஆனால் “சில நேரத்தில் சில மனிதர்கள்”
இன்று சற்றே வெளிச்சம் குறைந்த ஜீரோ வால்ட் பல்ப் ஆகி விட்டது.
ஒரு பெண்ணின் நேரடி வர்ணனையில்
நகரும் அந்நாவல் மொழியின் தடுமாற்றங்களை, மனதின் பல வர்ணங்களை, உளவியலின் நுண்பார்வைகளை கொண்டிருக்கவில்லை
என்பது எனக்கு படிக்கிற வேளையில் ஆச்சரியமாக இருந்தது. குறிப்பாக நீங்கள் வெர்ஜினியா
வூல்ப் படித்தவர் என்றால் “சில நேரத்தில் சில மனிதர்கள்” நாவலின் பெண் மொழி ரொம்ப தட்டையாக
உங்களுக்கு தோன்றும். அவர் காலத்தில் மிக பிரபலமாக திகழ்ந்த நனவோடை உத்தியின் சிறுதாக்கம்
கூட அந்நாவலில் இல்லை என்பது முதலில் வியப்பாக இருந்தது. அது படிக்கையில் ஒரு பெண்
பேசுவது போன்றே இல்லை. ஒரு தட்டையான அறிக்கை மொழியாக படுகிறது. கடந்த முப்பது வருடங்களில்
அம்பை துவங்கி பல பெண் எழுத்தாளர்கள் இதை விட நுணுக்கமாய், உளவியல் பார்வையுடன் பெண்
மொழியை, பெண் மனதின் தத்தளிப்பை, போக்கை சித்தரித்திருக்கிறார்கள்.
“சில நேரத்தில் சில மனிதர்கள்”
நாவலின் தாக்கத்தை ஜெயமோகனின் “கன்னியாகுமரியில்” பார்க்கலாம். அதிலும் கற்பழிக்கப்பட்ட
பெண் தன்னை தாக்கியவனைத் தேடி பல வருடங்களுக்கு பிறகு போகிறாள். அவன் சயரோகம் பிடித்து
உடல் நலிந்து ஒரு முதியவனாக தோன்றுகிறான். அவள் அவனுக்கு பணமும் மருத்துவ ஆதரவும் அளித்து
உதவுவதன் வழியாக தன் மனதின் ஆற்றாமையை தணித்து கொள்கிறாள். “கன்னியாகுமரி” நாவலுக்கு
அதற்கான சில குறைகள் உண்டு என்றாலும் ஜெயகாந்தனின் நாயகியை இன்னும் எதார்த்தமாய் அவர்
உருமாற்றியிருக்கிறார். இதைப் படிக்கையில் ஜெயகாந்தனின் மூலப்படைப்பின் போதாமைகள் விளங்கும்.
அதை விட முக்கியமாய் ஜெயகாந்தன் வாசகர்கள் விர்ஜினியா வூல்பின் “மிஸிஸ் டேலொவேய்” படித்துப்
பார்க்க வேண்டும். அது முடித்து விட்டு நகுலனுக்கு வந்து பாருங்கள். இருவரும் First
person எனும் கதைசொல்லியின் தரப்பில் இருந்தே பேசும் பாணியை எவ்வளவு கூர்மையாய், ஆழமாய்
பார்வையுடன் பயன்படுத்தி இருக்கிறார்கள், ஜெ.கெ எப்படி கோட்டை விட்டிருக்கிறார் எனப்
புரியும். அது கூட வேண்டாம் சு.ராவின் First person கதையாடல் பாணியிலான சு.ராவின் “ரத்னாபாயின்
ஆங்கிலம்” படித்து விட்டு ஜெயகாந்தனின் First person கதையாடலோடு ஒப்பிட்டு பாருங்கள்.
இன்னும் சுலபமாய் வித்தியாசம் புரியும்.
ஜெயகாந்தனின் அடிப்படையான குறை
அவர் மொழியை துடைப்பம் போல் பயன்படுத்தினார் என்பது. மொழி என்பது ஆபரேசன் கத்தி போல்
ஒரு நுணுக்கமான கருவி என்பது அவருக்கு புரியவில்லை. அவரைப் பற்றி யோசிக்கையில் எனக்கு
அடிக்கடி அவரைப் பற்றி மனுஷ்யபுத்திரன் சொன்னது நினைவு வரும். நான் முதன்முதலாய் மனுஷிடம்
ஜெயகாந்தன் பற்றி குறிப்பிட்ட நாள் அவர் வாயில் இருந்து வந்த வாக்கியம் இது: “ஜெயகாந்தன் ஒரு பிரசங்கி”. எவ்வளவு அழகான துல்லியமான சொல். இன்றும் கிறித்துவ போதகர்களை பிரசங்கியார்
என அழைப்பார்கள். ஜெயகாந்தன் எழுத்தை ஒரு போதனை மேடையாகத் தான் பார்த்தார். மொழியின்
பல அடுக்குகளை திறந்து பார்ப்பதிலோ, மனித உளவியலின் புதிர்கள் பற்றி வியந்து அதனுள்
பயணிக்கவோ அவருக்கு அவகாசம் இல்லை.
ஜெயகாந்தன் பற்றி தமிழவன் சொன்னதாய்
கேட்ட ஒரு கருத்தும் முக்கியமானது. சுஜாதாவின் வருகையை மிக கவனமாய் அறிந்து கொண்டு
விலகி நின்றவர் ஜெயகாந்தன் என்கிறார் தமிழவன். சுஜாதா எழுத வரும் காலத்திலேயே ஜெ.கெ மெல்ல மெல்ல எழுத்தில் இருந்து அகன்று கொள்கிறார். பிறகு அந்த இடத்தை சுஜாதா தன் மரணம்
வரை ஆட்சி செய்கிறார். இலக்கியத்தில் இது போல் இடத்தை காலி பண்ணி கொடுப்பதெல்லாம் இல்லை.
ஆனால் வணிக பத்திரிகைகளில் நாகராஜ சோழன்கள் வந்தால் மணிகள் உடனே நாற்காலியில் இருந்து
எழுந்து பின்னால் போய் விட வேண்டும்.
ஜெயகாந்தன் முழுக்க வணிக எழுத்தாளரும்
அல்ல, அவர் ஒரு கராறான இலக்கிய எழுத்தாளரும் அல்ல. அவருக்கு பின் வந்த சுஜாதா, பாலகுமாரன்
இருவரும் கூட இலக்கிய திறன்கள் கொண்ட வணிக எழுத்தாளர்கள் தாம். ஆக இவர்களை வணிக பரப்பில்
செயல்பட்ட இடைநிலை எழுத்தாளர்கள் எனலாம். பின்னிருவரோடும் ஒப்பிடுகையில் ஜெயகாந்தனின்
கதைகூறலில் நுட்பமும் வாசகனை ஊகிக்க அனுமதிக்கும் புதிர்த்தன்மையும் இல்லை. இதற்கு
காரணம் ஜெயகாந்தனின் மேற்கத்திய வாசிப்பின் போதாமையாக இருக்கலாம். அவர் எழுத்தை படிக்கையில்
அவர் முழுக்க உள்ளூர் மண்ணில் உள்ளூர் வெயிலில் வளர்ந்த தாவரம் எனத் தோன்றுகிறது. சுஜாதா,
பாலகுமாரனுக்கு உள்ள பரவலான வாசிப்பு அவருக்கு இல்லை.
ஆனால் இயல்பான கலைத்திறன் ஜெயகாந்தனுக்கு அபாரமாக
உண்டு. வாழ்க்கை மீதான ஒரு ஒட்டுமொத்த விசாலமான பார்வையும் அவரது மிகப்பெரிய பலம்.
இது சுஜாதா மற்றும் பாலகுமாரனிடத்து இல்லை. அவ்விதத்தில் ஜெயகாந்தன் தொழில்நுட்பத்தில்
கசாப்புக்காரர் என்றாலும் கலைப்பார்வையில் இருவருக்கும் மேலானவர். இந்த கலைப்பார்வை
ஒருவர் தன் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து புரிதல்களில் இருந்து பெறுவது. ஜெயகாந்தன்
எனும் ஒரிஜினல் கலைஞனுக்கு அது அபரிதமாகவே இருந்தது.
ஜெயகாந்தனின் சிறுகதைகளின் மொத்தத்
தொகுப்பு தொண்ணூறுகளின் இறுதியில் வந்த போது வாங்கி வாசித்து விட்டு ஜெயமோகனிடம் பேசியது
நினைவுள்ளது. “ரொம்ப சுமார் தான், பெரும்பாலான கதைகள் தேறாது” என அவர் கூறினார். எனக்கு
அன்றும் சரி இன்றும் சரி ஜெயகாந்தன் சிறுகதைகளைப் படிக்கையில் அவை அடிப்படையில் கதைகள்
(tales) தாம், சிறுகதைகள் அல்ல எனத் தோன்றுகிறது. இன்னொரு புறம் ஜெயகாந்தன் சிறுகதைகள்
சமூகத்தில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியவை என்பதையும், அவரது சிறுகதைகளை இப்போதும்
பலர் வழிபடுகிறார்கள் என்பதையும் அறிவேன். ஆனால் இந்த வரலாற்று மதிப்பு என்பது எனக்கு
முக்கியம் அல்ல. இப்போது படிக்கையில் ஒரு எழுத்தாளன் எனக்கு எப்படி தோன்றுகிறான் என்பது
முக்கியம். தான் வாழ்ந்த காலத்தில் ஜெயகாந்தன் சமூகத்தை என்ன செய்தார் என்பது அப்போதுள்ள
சமூகத்தின் அக்கறை. ஒரு இலக்கிய வாசகனாக அது என் அக்கறை அல்ல.
எனக்கு விகடனில் வெளிவந்த ஜெயகாந்தனின்
ஒரு புகைப்படம் இன்றும் நினைவுகளில் திகைப்பூட்டுகிறது. ஜெயகாந்தன் ஜுப்பாவும் வேஷ்டியும்
அணிந்து கையில் மல்லிகைப்பூ சுற்றி ஒரு ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு புகைப்படக் கருவியை
முதலிரவுப் பெண்ணின் உதடுகளைப் போல் காமத்துடன் பார்க்கிறார். என்னவொரு தோரணை! ஜெயகாந்தன்
கஞ்சா புகைத்தபடி இறுமாப்பாய் பேசுவது, அவரது ஹிப்பி மனப்பான்மை பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஒருவேளை அன்று அதெல்லாம் புரட்சிகரமாய் நம் நடுத்தர மனோபாவத்துக்கு தோன்றியிருக்கலாம்.
இன்று பதிமூன்று வயது பையன்களே கஞ்சா அடித்து விட்டுத் தான் வகுப்புக்கு வருகிறார்கள்.
நகர்வாழ் பையன்களுக்கு 16 வயதிலேயே மது, பெண் இவையெல்லாம் அலுப்பூட்ட துவங்குமளவுக்கு
பழகிப் போகின்றன. இவர்களுக்கு இன்று ஜெயகாந்தன் எல்லாம் பொருட்டாகவே தோன்ற மாட்டார்.
மேற்கில் அன்று புகழ்பெற்றிருந்த
ஹிப்பி வாழ்வை அவர் இந்திய சூழலில் வைத்து சின்ன அதிர்வுகளை உண்டாக்கும் கதைகளை எழுதி
இருக்கிறார். ஆனால் அவை அசலான ஹிப்பி கதைகள் அல்ல. ஜேக் கெரவக்கின் On the Road படித்தால்
ஜெயகாந்தன் எழுதியது மேம்போக்கான ஹிப்பி மனப்பான்மை எனத் தோன்றும். அதற்கு அவரை குற்றமும்
கூற இயலாது. எழுதுவதற்கு இந்தியாவில் ஹிப்பி வாழ்க்கை என்ற ஒன்று என்றுமே இயல்பாக பரவலாக இருந்ததில்லை.