இன்றைய ஹிந்துவில் ஹசன் சரூர்
சகிப்பின்மை பற்றி ஒரு முக்கியமான கட்டுரை எழுதியிருக்கிறார் (Strident
Sensitivity Gags Free Speech). சகிப்பின்மை என்றாலே நாம் அதை வலதுசாரிகளுடன் அடையாளப்படுத்துகிறோம்.
ஆனால் பிரிட்டனில் இன்று இடதுசாரிகள் எப்படி சகிப்பின்மை அற்றவர்களாய் மாறி வருகிறார்கள்
என ஹசன் சரூன் பேசுகிறார். ஜெர்மெய்ன் கிரெய்ன் (Female Eunuch எழுதியவர்) எனும் பெண்ணியவாதி
“பால்மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒரு ஆண் ஆணாகவே இருக்கிறான். அவன் பெண் அல்ல”
என்று ஒரு கருத்து சொல்கிறார். உடனே அவரை எதிர்த்து கடுமையான பிரச்சாரம் செய்யப்படுகிறது.
அவர் ஒரு “திருநங்கை வெறுப்பாளர்” என சித்தரிக்கப்படுகிறார். காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
அவருக்கு அளிக்கவிருந்த கௌரவப் பட்டம் ஒன்றை ரத்து செய்கிறது. கார்டிப் பல்க்லைக்கழகத்தில்
அவர் நிகழ்த்தவிருந்த உரையை நூற்றுக்கணக்கான முற்போக்காளர்கள் போராடி தடை செய்கிறார்கள்.
தன் மீதான துவேசமும் தாக்குதல் சாத்தியங்களும் அதிகமாகி வருவதால் இனி பாதுகாப்பு உறுதி
செய்யப்படாத பட்சத்தில் தான் எங்குமே சென்று பேசப் போவதில்லை என கிரெய்ன் தெரிவித்துள்ளார்.
இதற்கும் புதிய தலைமுறையில் பா.ஜ.க விடுத்த மிரட்டலுக்கு பின் ஞாநி கூறியதற்கும் அதிக
வேறுபாடில்லை.
டிம் ஹண்ட் 2001இல் நோபல் பரிசு
வாங்கின விஞ்ஞானி. அவர் ஒரு விருந்தின் போது தன்னுடைய காதலிகளை லேசாய் கிண்டலித்து
ஒரு ஜோக் சொல்கிறார். உடனே அவர் பெண்களை அவமதித்து விட்டார் என ஒரு சேதி காட்டுத் தீ
போல் பரவுகிறது. அவரைப் பற்றி பெண்ணியவாதிகளின் நூற்றுக்கணக்கான புகார்களை அவர் வேலை
செய்யும் நிறுவனங்களுக்கு அனுப்புகிறார்கள். லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரி அவரை வேலை
நீக்கம் செய்கிறது. அவர் பொது மன்னிப்பு கோரிய பின்னரே ராயல் அகாதெமியில் உறுப்பினராக
நீடிக்க அனுமதிக்கப்படுகிறார். நம் நாடு இந்தளவுக்கு பயங்கரமாய் மாறவில்லை என்றாலும்
அதை நோக்கித் தான் போய்க் கொண்டிருக்கிறோம்.
சமீபத்தில் விருது திரும்பத் தரும்
சர்ச்சையில் நான் மாறுபட்டேன் என்பதற்காய் இடதுசாரி தோழர்கள் சிலர் என்னை “பா.ஜ.க”
என அடையாளப்படுத்தி தாக்கினார்கள். ஒருவர் என் முனைவர் பட்ட நெறியாளரை தொடர்பு கொண்டு
என்னைப் பற்றி புகார் செய்தார். அவர் நோக்கம் என்ன? என் ஆய்வை முடக்கி என்னை தண்டிப்பது.
எதற்காய்? ஒரு மாற்றுக்கருத்து சொன்னதற்காக. (என்னுடைய கலை இலக்கிய பெருமன்ற நண்பர்கள்
மட்டும் தான் இவ்விசயத்தில் மிகவும் கண்ணியமாய் நடந்து கொண்டார்கள்.)
நாம் யாரும் ஒத்த கருத்து கொண்டவர்கள்
அல்ல. கட்சி உறுப்பினர்களும் அல்ல. நாம் முரண்படுவோம். அதை வெளிப்படுத்தி உரையாடும்
அவகாசம் நமக்கு மிகவும் அவசியம். இன்று நாம் அதிகமும் பொதுப் பிரச்சனைகளில் கருத்து
சொல்வதால் ஏதாவது ஒரு அணி சார்ந்தே நிற்க நிர்பந்திக்கப்படுகிறோம். முன்பு எந்த அணியும்
சாராது ஒரு எழுத்தாளனோ சிந்தனையாளனோ பேச முடியும். இன்று அப்படி பேச முடியாது. பேசினாலும்
ஒருவர் உங்கள் மீது மை ஊற்றுவார். இன்னொருவர் உங்கள் மீது வலதுசாரி முத்திரை குத்தி
பல்கலைக்கழகங்கள், அலுவலகங்களில் உங்களைப் பற்றி புகார் செய்து எதிர்காலத்துக்கு உலை
வைக்க பார்ப்பார்.
ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் ஒட்டின பார்வை
இருக்கலாம். ஆனால் அப்பார்வையிலும் அவர் மாறுபடும் கோணங்கள் இருக்கும். ஒரு பிரச்சனையின்
போது தன் மாறுபாடுகளை அவர் வெளிப்படுத்தினால் தம் தரப்பு பலவீனமாகும் என கருதி அவ்வணியினர்
அவர் வாயை மூட சொன்னால் அதுவும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது தானே? ஒரே குரலில்
ஒரே தொனியில் ஒன்றுசேர பேசும் ஆட்கள் போதுமென்றால் நாமெல்லாம் ஏன் படிக்கிறோம், சிந்திக்கிறோம்,
உரையாடுகிறோம்?
சரி, நம் சூழல் இப்படி சகிப்பின்மையின்
விளிம்பில் வந்து தள்ளாடி நிற்பது ஏன்? ஊடகங்களின் வளர்ச்சியும், சமூக வலைதளங்களும்
தான் பிரதான காரணம். முன்பு ஒருவருக்கு மாற்றுக்கருத்து இருந்தால் அவர் அதை தன்னுடைய
அந்தரங்கமான நண்பர்களிடம் மட்டும் தெரிவிப்பார். எழுத்தாளர் என்றால் முன்னூறு பேர்
படிக்கக் கூடிய கட்டுரையாக எழுதுவார். இன்று இதே மாற்றுக்கருத்து சுலபமாய் ஆயிரக்கணக்கானோரை
போய் சேர்கிறது. பொது நீரோட்டத்தில் போய் கலக்கிறது. உடனே பொதுப்புத்தி கொண்டவர்கள்
அவரை எதிர்த்து தாக்குகிறார்கள். வாயை மூடச் சொல்கிறார்கள். இந்த கடும் எதிர்வினைக்கு
பயந்து இன்று சிந்திப்பவர்கள் ஒரு உத்தியை பின்பற்றுகிறார்கள். மாற்றுக்கருத்துக்களை
தம் நெருங்கின நண்பர்களிடம் மட்டும் சொல்கிறார்கள். பேஸ்புக் போன்ற பொதுவெளியில் பொதுப்புத்திக்கு
ஒத்த கருத்தை சொல்கிறார்கள்.
இந்த இரட்டை நிலை தான் இன்று பலரின் கருத்து சுதந்திரத்தையும்
பாதுகாக்கிறது. உதாரணமாய் ஒருவர் கடும் பெண் வெறுப்பாளராக இருப்பார். பொதுவெளியில்
தன்னை ஆவேசமான பெண்ணிய ஆதரவாளராய் காட்டிக் கொள்வார். இந்த பாசாங்கு எந்த உரையாடலும்
சாத்தியமற்ற ஒரு மரத்துப் போன நிலைக்கு நம்மை விரைவில் தள்ளி விடும். ஒருவர் தன் தவறான
கருத்துக்களை கூட வெளிப்படையாய் சொன்னால் தான் அவை விவாதித்து திருத்தப்பட முடியும்.
இரு முரண் கருத்துக்களின் மோதல் தான் புது கருத்தாக்கங்களை தோற்றுவிக்கும். ஆனால் ஒத்த
பொதுப்புத்தி கருத்துக்களே வெளியாகும் சூழலில் நாம் கிளிப்பிள்ளைகளாக மட்டுமே இருப்போம்.
ஆனால் பெரும் நிறுவனங்கள் மற்றும் கட்சிகளுக்கு இந்த இரட்டை நிலை கொண்ட கிளிப்பிள்ளைகள்
தாம் வேண்டும். சமீபத்தில் ஸ்டாலின் ராஜாங்கமும் என்னிடம் இதைத் தான் குறிப்பிட்டார்.
ஒருவரின் சொல்லுக்கும் இதயத்துக்குமான தொலைவு அதிகரித்து வருகிறது என்றார்.