சமீபத்தில் புத்தக
புரொமோஷனின் சங்கடங்களையும் அதில் எழுத்தாளனுக்கு உள்ள பிரச்சனைகளையும் பகடியான தொனியில்
எழுதியிருந்தேன். அதில் இணையத்தில் எழுதுகிறவர்கள் புரொமோஷன் செய்யும் முறையும் இணையத்தில்
ஜனரஞ்சகமாய் எழுதுபவர்களுக்கு புரொமோஷன் எப்படி சுலபமாய் அமைகிறது என்பதையும் சொல்லி
இருந்தேன். அதை ஒரு பதிவர் நான் அவரை கேலி பண்ணினதாய் கருதிக் கொண்டு ராப்பகலாய் என்னைத்
திட்ட ஆரம்பித்து விட்டார்.
பொதுவாய் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் hyper
sensitive ஆக இருப்பார்கள். அவர்களைப் பார்த்து புன்னகைத்தாலே கேலி செய்கிறோமோ என வெகுண்டெழுவார்கள்.
அந்த பதிவர் என் மொத்த பதிவுமே தன்னைப் பற்றியது எனும் சித்திரத்தை உருவாக்கி தன் மீதே
சேற்றை வாரி இறைத்துக் கொண்டார்.
இலக்கியத்தில் இல்லாத கேலியா? சு.ராவுக்கு நகுலனுக்கும்
இடையிலான “நாய்” கவிதை பரிமாற்றங்கள் பிரபலம். அதை ஒட்டி நாற்பதுக்கு மேல் நாய்க் கவிதைகள்
எழுதப்பட்டிருக்கும். யாரும் கெட்டவார்த்தையால் திட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பேஸ்புக்
போன்ற சமூக வலைதள நடவடிக்கைகளால் மனிதர்கள் சிறிதும் கிண்டலை பொறுக்க முடியாதவர்கள்
ஆகி விட்டார்கள். நாயே பேயே எனத் திட்டிக் கொள்கிறார்கள். கிண்டல் பண்ணுவதென்றால் தமமுடன்
நேரடிப் பழக்கமில்லாத கேப்டன் போன்ற பிரபலங்களை வச்சு செய்கிறோம். ஆனால் கூட இருப்பவர்களை
மாறி மாறி காது புளிக்கும் வரை புகழ்கிறோம். இது பேஸ்புக் அளிக்கும் மிதமிஞ்சிய சுயபிரக்ஞையால்
விளைந்துள்ள வியாதி.
சமீபமாகவே மனுஷ்யபுத்திரன்
என்னை “மூத்த எழுத்தாளர்” என பகடி செய்து வருகிறார். என் நூல் வெளியீட்டு விழாவில்
கூட இதை சொல்லி “உன் வாரிசு யார்?” என கேள்வி கூட கேட்டார். இதை நானும் ரசித்தேன்.
பார்வையாளர்களும் சிரித்து ரசித்தனர். ஜெயமோகனுடன் உள்ளவர்கள் அவரை பகடி செய்வதை பார்த்திருக்கிறேன்.
சாருவுடன் உள்ளவர்களும் அவரை ஓட்டும் போது மனிதர் குழந்தை போல் சிரிப்பார். இன்று நட.சிவகுமார்
ஊரில் இருந்து என்னை பார்க்க வந்திருந்தார். அப்போது ஊரிலுள்ள இன்னொரு கவிஞரான ஹமீம்
முஸ்தபா அவரை போனில் அழைத்தார். இவர் உடனே “தமிழில் உள்ள மிக முக்கியமான எழுத்தாளனுடன்
இருக்கிறேன் தெரியுமா?” என்று விட்டு போனை கொடுத்தார். அது ஒரு கிண்டல். அதன் பொருள்
நேர்மாறானது என எனக்குத் தெரியும். சிரித்தபடியே முஸ்தபாவிடம் பேசினால் அவர் இன்னொரு
படி மேலே போய் “நீ ஒரு legend. உன்னைப் போய் முக்கிய எழுத்தாளன் என்கிறால் எப்படி?”
என ஓட்ட ஆரம்பித்து விட்டார். இது தான் எங்களுக்குள் உறவை லகுவாக்குகிறது. ஆனால் இதையே
பேஸ்புக்கில் செய்தால் அங்கு இனக்கலவரமே நடக்கும்.
எழுத்தாளர்கள் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையும் நுண்ணுணர்வும்
கொண்டவர்கள். அவர்களுக்கு பகடியும் சுயபகடியும் ஒரு ஆசுவாசம் தரும் விளையாட்டு.
தன்னை பிறர் பகடி
செய்வதை தாங்கிக் கொள்ள இயலாதவர்கள் பண்பாட்டு நுண்ணுணர்வு இல்லாதவர்கள் என நினைக்கிறேன்.
இனி எல்லாரும் எல்லாரையும் பற்றி நேரடியாய் பேர் தேதி இடம் குறிப்பிட்டு மிக உயர்வாக
மட்டுமே எழுத வேண்டும். அப்படியான இடத்துக்கு வந்து விட்டோம். மேற்சொன்ன பதிவரிடம்
“நீங்கள் திட்டி அளிக்கும் பப்ளிசிட்டி அருமை. தொடர்ந்து செய்யுங்கள்” என உள்பெட்டியில்
கிண்டலாய் செய்தி அனுப்பினேன். அவர் அதையும் நேரடியாய் புரிந்து கொண்டு ஆசிடாய் கொப்புளிக்க
ஆரம்பித்து விட்டார். அவர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இப்படித் தான் புரிந்து கொள்வார்
போல. ”உன்னால ரொம்ப தலைவலியா போச்சே” என்றால் உடனே அனாசின் வாங்கி வந்து தருவார் என
நினைக்கிறேன்.
அவரது கோபம் தன்னை
அடுத்தவன் தாழ்வாய் நடத்துகிறான் எனும் பயத்தில் இருந்து வருகிற கோபம். தான் செய்வது
தாழ்வானது எனும் குற்றவுணர்வில் இருந்து வருகிற கோபம். தன் பெயரை குறிப்பிடாவிட்டாலும்
அது தான் தானோ எனும் பதற்றம். மகாபாரதத்தில் துரியோதனனை நோக்கி த்ரௌபதி விளையாட்டுக்கு
சிரித்ததனால் தானே துகிலுரியும் படலமே நடந்தது. இதனால் அந்த பதிவருக்கு சொல்ல வருவது
என்னவென்றால் என்னையெல்லாம் துகிலுரியாதீர்கள். பார்க்க நல்லாவே இருக்காது.
(இதையும் அவர்
வரிக்கு வரி எடுத்துப் போட்டு என்னை காறி துப்புவார் எனத் தெரியும். அது தன் மீதே விழுகிறது
என அவர் உணர்கிற வரை செய்யட்டும். வேறு தீர்வே இல்லை)