தமிழ் கவிதைக்கான மொழி. இங்கு
மிகச்சிறந்த புனைகதையாளர்கள் குறைவு. ஆனால் மிகச்சிறந்த கவிஞர்கள் ஏராளம். ஒரு கவிதை
மூலம் தமிழனின் மனதை தொட்டு விடுவது போல் உரைநடையினால் முடியாது. கவிதை நம் உயிர்நாடி.
அதனாலே ஒரு நவீன கவிஞருக்கு சாகித்ய அகாதமி எனும் போது தித்திக்கிறது. மேலும் வண்ணதாசனுக்கு
எனும் போது கூடுதல் இனிக்கிறது.
நம் பால்யத்தின் தவிர்க்க முடியாத ஒரு பகுதி வண்ணதாசன்.
வாழ்க்கையை நுண்வியப்புகளால் ஆனதாய் நாம் உணரும் பருவத்தில் வண்ணதாசன் நம் தலை கோதும்
நீளமான விரல்களாய் இருந்தார். ஒவ்வொன்றையும் இன்னும் இன்னும் நுணுகி லயித்து அணுக கற்றுத்
தந்தார்.
வண்ணதாசன் ஒரு வித்தியாசமான கலவை – ரொமாண்டிக்கான,
நெகிழ்வான, ஒவ்வொரு சொல்லையும் நுண்பெருக்கியாய் மாற்றும் எழுத்து. கூடவே வாழ்க்கையின்
நெருடலான, அதிர்ச்சியான, கசப்பான எதார்த்த உலகையும் அவர் சித்தரித்தார். ஒரு விகாரத்தை
கூட ரொமாண்டிக்காய் அழகாய் பார்ப்பவர் அவர். அவரது கதையொன்றில் வீட்டுக்கு வரும் உறவினர்
ஒருவருக்கு ஆறாவதாய் ஒரு விரல் இருக்கும். கதைசொல்லியின் நினைவுகளில் முழுக்க அந்த
ஆறாவது விரல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். ஒரு அழகான பெண்ணின் மூக்கின் மேலுள்ள
மருவையும் ஒரு மனிதனின் கையில் துருத்தித் தெரியும் ஆறாவது விரலையும் வண்ணதாசன் ஒன்றாகப்
பார்ப்பார். வானம்பாடிகளில் இருந்து வண்ணதாசனை மாறுபடுத்திக் காட்டுவது இந்த ஆறாவது
விரல் தான். நெருடலான, ஜீரணிக்க முடியாத, வெறுமையான உலகை அவர் ஒரு சிலாகிப்பான, மிகையுணர்ச்சி
நிரம்பிய வாழ்க்கைபார்வையுடன் அணுகினார். இந்த ரொமாண்டிக் வண்ணமூட்டல் இல்லாவிட்டால்
வண்ணதாசன் கலாப்ரியா, சுகுமாரன் போல் ஆகி விடுவார்.
வண்ணதாசனின் சிலாகிப்பு என்பது வெறும் ஒரு அணுகுமுறை
மட்டுமல்ல. அது நெல்லை மாவட்ட மண்ணின் குணம் என தோன்றுகிறது. நெல்லையின் கணிசமான எழுத்தாளர்களிடம்
இந்த தாவணி காற்றில் பறக்கும் மொழிநடை உள்ளது. பாகாய் உருகுவார்கள். ஆனால் இனிப்பு
உள்நாக்கில் பட்டதும் ஒரு கசப்பு உறைய ஆரம்பிக்கும். ஒரு சிறந்த உதாரணம் போகன் சங்கர்.
போகனின் கதைகள் ஜெயமோகன் மற்றும் வண்ணதாசனின் ஒரு அபூர்வமான கலவை. நெகிழ்விலும் கண்ணீர்
மல்கலிலும் வண்ணதாசனையும், உடல் விகாரங்கள், சீரழியும் இச்சைகளை பேசுவதில் ஜெயமோகனையும்
அவர் எடுத்துக் கொள்கிறார். போகன் என ஒரு உதாரணத்திற்கு தான் சொன்னேன். நெல்லை மண்ணில்
இருந்து தோன்றும் எந்த புதுப் படைப்பாளியிடமும் வண்ணதாசனின் குரலை கேட்க முடியும்.
புதுமைப்பித்தன், அழகிரிசாமி, கி.ரா, விக்கிரமாதித்யன் ஆகியோரின் பாணியை பின்பற்றும்
எழுத்தாளர்களை கூட அதிகம் காண முடியாது. ஆனால் வண்ணதாசனுக்கு எனும் நதிக்கு கிளைகள்
ஆயிரம். நெல்லை பண்பாட்டின் ஒரு முக்கியமான கூறை வண்ணதாசன் பிரதிபலிக்கிறார். வண்ணதாசனை
வாசிக்காத இளம் எழுத்தாளர்களின் மொழியில் கூட அவரது மொழியை, ஆளுமையை, அந்த தனி வாசனையை
நாம் அடையாளம் காண முடிகிறது. அது தான் காலம் அவருக்கு அளித்த மகத்தான பரிசு. இது இரண்டாம்
பரிசு! அவருக்கு மீண்டும் என் வாழ்த்துக்களும் அன்பும்!
வண்ணதாசனைத் தொடர்ந்து விக்கிரமாதித்யன்,
கலாப்ரியா, சுகுமாரன், தேவதச்சன், தேவதேவன், யுவன், மனுஷ்ய புத்திரன் போன்று மேலும்
முக்கிய கவிஞர்களை சாகித்ய அகாதமி கௌரவிக்க வேண்டும். உரையநடை எழுத்தாளர்களை தேவைக்கு
அதிகமாய் கொண்டாடி விட்டோம். இனி வரும் சில பத்தாண்டுகள் கிரீடத்தை தமிழ்க்கவிஞர்களின்
தலையில் வைத்து அழகு பார்ப்போம்! உண்மையில் அது அவர்களுக்கு உரியதே!