தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய பயணத்தொடரில் இந்திய அணி ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களை நிச்சயமாய் இழக்கும் என முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவரான மைக்கேல் வாஹ்ன் சொல்லியிருக்கிறார். இதை ஏற்கிறேன். முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா காலங்காலமாய் சொதப்பியே வந்துள்ளது. டிரா செய்ய முடிந்தால் சிறப்பு. ஒட்டுமொத்தமாய் இந்த ஆஸி தொடர் ஒரு நேரவீண்.
இதை கோலியும் அறிவார். ஆனால் அவர் மனமெல்லாம் பிறக்கவிருக்கும் தன் குழந்தை மீதே இருக்கும். வேறெந்த நம்பிக்கையூட்டும் நற்செய்தியும் அவருக்கு வரும் மாதத்தில் இல்லை. ஏனென்றால், இந்த தொடர் அவசரமாய் திட்டமிடப்பட்டு, மோசமாய் அணி தேர்வு செய்யப்பட்டு மோசமாய் எடுக்கப்பட்ட அட்லி படத்தைப் போல உள்ளது.
ஷாமி, சஹல், சாஹா நல்ல உடல் தகுதியுடன் இல்லை. ஆனால் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்த கிரிக்கெட் வாரியம் ரோஹித் ஷர்மா மட்டும் இந்தியாவில் அவர் பாட்டுக்கு திராட்டில் விட்டது ஏன் எனப் புரியவில்லை. ஒவ்வொரு வீரருக்கு ஒவ்வொரு நியாயமா எனும் கேள்விக்கு விடையில்லை. கோலி வழக்கம் போல இந்த அரசியலுக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என நழுவப் பார்க்கிறார். வீரர்கள் இன்னொரு பக்கம் ஐ.பி.எல்லில் தொடர்ந்து ஆடின களைப்பில் இருக்கிறார்கள். மீண்டும் ஒரு பெரிய தொடரை எதிர்கொள்வதற்கான மன ஊக்கம், ஆற்றல் அவர்களுக்கு இருப்பதாய் தோன்றவில்லை. அணித்தலைவரான கோலி முன்பு தன் அப்பா காலமான போது ஈமச்சடங்குக்கு செல்லாமல் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டவர். சச்சினும் அப்படி உலகக்கோப்பைத் தொடருக்கு திரும்ப வந்து ஆடியதைப் பார்த்துள்ளோம். ஆனால் இப்போதைய கோலியோ இந்த முக்கியமான தொடரின் டெஸ்ட் போட்டிகளுக்கு முழுமையாக இருக்காமல் இந்தியாவுக்கு தன் குழந்தைப்பிறப்புக்காக திரும்பும் முடிவில் இருக்கிறார். இது பிற அணி வீரர்களுக்கு அளிக்கும் சேதி என்னவாக இருக்கும், ‘இத்தொடர் ஒருவித விடுமுறை கொண்டாட்டம் தவிர வேறொன்றும் இல்லை’ என்பதன்றி.
நியாயமாக கோலிக்குப் பதிலாக ரஹானேவை டெஸ்ட் தொடரின் தலைவராக ஆரம்பத்திலேயே அறிவித்து, கோலியை வெறும் மட்டையாளராக மட்டுமே முதல் போட்டியில் ஆடச் சொல்லியிருக்க வேண்டும். அத்துடன் அணியைத் தேர்வு செய்வது, தொடரின் வியூகங்களைத் திட்டமிடுவது ஆகிய பொறுப்புகளை முழுமையாக ரஹானேவிடம் ஒப்படைத்திருக்கலாம். அப்போது டெஸ்ட் தொடரில் உன்னிப்பாக உத்வேகமாய் இந்திய அணி ஆட வாய்ப்பு இருந்திருக்கும்.
ஆனால் இது ஏதோ குழந்தை பாதி கக்கா போய் விட்டு அதில் படுத்து புரண்டு விளையாடுவதைப் போல ஒரு போட்டியில் இவர் தலைவர், மற்ற போட்டிகளில் இன்னொருவர் தலைவர் என்றால் அது எப்படியான குழப்பத்தை, கவனச்சிதறலை ஏற்படுத்தும்? போட்டித்தொடரை இழந்தோமெனில் பழி யாருக்குப் போகும்? வென்றோமெனில் பெருமை யாருக்கு?
அணித்தலைவருக்கு மிதமிஞ்சிய அதிகாரத்தை அளிப்பது, தேர்வாளர்கள், வாரிய தலைவர் என அனைவரையும் அணித்தலைவர் தன் உள்ளங்கையில் வைத்து செல்ல நாய்க்குட்டியைப் போல நடத்துவதானது தோனியின் காலத்திலேயே தொடங்கி விட்டது. கோலி இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்று விட்டார். இப்போது அணித்தலைவரானவர் இந்தியாவின் பிரதமரைப் போல. அவரது செயலுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டியதில்லை. மாறாக அவருக்கான பெயரும் புகழும் மட்டும் தொடர்ந்து கட்டமைக்கப்படும். ஒரு நட்சத்திர பிம்பத்தை இப்படி உருவாக்கி அதை வைத்து அறுவடை செய்வதன்றி உலகக்கோப்பைகளை வெல்லும் இலக்குடன் அணி இப்போது வழிநடத்தப்படுவதில்லை. இவ்விசயத்தில் கங்குலி, ஷா ஆகியோரின் தலைமையில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஶ்ரீனிவாசனின் தலைமையிலான வாரியத்தைப் போன்றே நடந்து கொள்கிறது.
விரைவில் இந்திய அணியின் பயிற்சியாளராக அனுஷ்கா ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்பட மாட்டேன். அந்தளவுக்கு குடும்ப அரசியல், தனிமனித வழிபாடு, அதிகாரக் குவிப்பு இந்திய கிரிக்கெட்டை நாசமாக்கி வருகிறது. எதிர்காலத்தில் இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர அரசியல்வாதிகள் கிரிக்கெட் வாரியத்தில் பதவி வகிப்பதை, அணித்தலைவரை நிரந்தரமாய் அன்றி நான்கு வருடங்களுக்கு மட்டுமே நியமிப்பதை, ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒரு அணித்தலைவரை நியமிப்பதை வழக்கமாக வேண்டும், வீரர்களின் மனைவி, குழந்தைகள் அவர்களுடன் ஓட்டலில் தங்குவது, கொண்டாட்டங்களில் பிற வீரர்களுடன் கலந்து கொள்வது, மனைவிகள் சமூகவலைதளங்களில் கிரிக்கெட் பற்றி கருத்து சொல்வது தடை செய்யப்பட வேண்டும். இதன் மூலம் அதிகாரம் ஒரு புள்ளியில் குவிந்து செலிபிரிட்டி கலாச்சாரம், அரசியல் அதிகாரம் என அது வளர்வதை தடுக்கலாம்.


