"காகித மலர்களில்" எனக்கு மிகவும் பிடித்த இடம் இது. விசுவம் - அனேகமாக எல்லா ஆய்வாளர்கள், எழுத்தாளர்களையும் போல - அறிவுச் செயல்பாடு, சிந்தனை, அரூபமான படைப்பாக்கம் மீது அவநம்பிக்கை கொள்கிறான். ஏனென்றால் அவை புலனுலகில் இடமற்றவை. அறிவைப் பார்க்க, தீண்ட, நுகர, சுவைக்க முடியாது. எழுத்தை, கற்பனையை ஒரு காற்றைப் போல, ஒரு பெண்ணின் வாசனையைப் போல உணர முடியாது. அவனுக்கு அப்போது தான் சமைக்கும் உப்புமாவே தனது ஆய்வுக் கட்டுரையை விட உண்மையானது, நிச்சயமானது எனத் தோன்றுகிறது.
நான் இதை உடற்பயிற்சியின் போது, குத்துச்சண்டை பயிற்சியின் போது உணர்ந்திருக்கிறேன். எழுதும் போது நமக்கு இப்படி வியர்ப்பதில்லை. சூழலுடன், எந்திரங்களுடன், சகமனிதர்களுடன் உறவாடுவதில்லை. அவர்களின் உடல் சூட்டை, வியர்வை நெடியை, வியர்வையில் மினுங்கும் சருமத்தைக் காண்பதில்லை. எழுதும் போதும், சிந்திக்கும் போதும் இந்த உலகிடம் இருந்து வெகுவாக விலகி வேறெங்கோ சஞ்சரிக்கிறோம். முகமற்ற, கைகால்கள் அற்ற, எடையோ, ஸ்பரிசமோ இல்லாத உலகம். அந்த உடலற்ற உலகில் தான் 9-5 வேலையிலும், உரையாடல்களிலும் இருக்கிறோம். நேற்று நான் குத்துப்பையில் 1-2, 1-2 எனப் பயில்கையில் எப்போதெல்லாம் என் முகத்தைப் பாதுகாக்க, guard செய்ய மறக்கிறோனோ அப்போது என் மாஸ்டர் என் பின்னால் நின்றபடி ஒரு காகிதக் குழலால் சுளீர் சுளீரென காதில் அடித்தார். நான் உடனே உஷாரானேன். மீண்டும் தவறு செய்து அடிவாங்கினேன். எனக்கு இது வெகுவாகப் பிடித்திருந்தது.
நாம் இலக்கிய விவாதங்களில், வேலையிட சர்ச்சைகளில் பரஸ்பரம் சொற்களால் குத்துகிறோம், தர்க்கத்தால் பின்மண்டையில் தாக்குகிறோம். இது பகையுணர்ச்சியை வளர்க்கிறது. ஆனால் மாஸ்டரிடம் எனக்கு எந்த வருத்தமோ கோபமோ ஏற்படவில்லை. மாறாக அவர் அடிக்கையில் அன்பே வந்தது. இதை சுலபமாக விளக்க இயலாது.
கடந்த மூன்று நாட்களாக அங்கு ஸ்பாரிங் நடக்கிறது. ஒரு புதிய பெண் - குத்துச்சண்டையின் அடிப்படை தெரியாதவர் - அவரை மாஸ்டர் மற்றொரு புதிய பையனுடன் ஸ்பாரிங் செய்யச் சொன்னார். அப்பெண் மரண குத்து விட்டார். நானே அசந்து விட்டேன். ஆட்டத்தின் தொழில்நுட்பம் பற்றி ஒன்றுமே தெரியாத, ஆடும் பிரக்ஞையே இல்லாத ஒருவரின் ஆவேசமான ஆட்டம் அது. அதன் பிறகு மாஸ்டர் இருவரிடமும் தனித்தனியாக ஸ்பாரிங் செய்து அவர்களை சுலபத்தில் முறியடித்துக் காட்டினார். இருவருமே அடிபட்டார்கள், வியர்வையில் குளித்தார்கள், தோற்றார்கள், வென்றார்கள், வென்றார்கள், தோற்றார்கள். ஆனால்
ஸ்பாரிங் முடிந்த பின்னர் அவர்கள் எந்த கசப்பும் அற்று இருந்தார்கள். அவர்களுடைய முகங்கள் மகிழ்ச்சியில் ஒளிர்ந்தன. அதுவே மனிதனின் அசலான மகிழ்ச்சி என எனக்குத் தோன்றியது.
இதுவே ஒரு இலக்கிய சர்ச்சை நடந்து முடிந்த பின் பாருங்கள், ஒவ்வொருவரும் முகம் வாடி, கண்களில் காயம்பட்ட உணர்வுடன், முகத்தில் புகைச்சலுடன் திரும்புவார்கள். அப்போது ஏற்பட்ட காயங்கள் ஆற பல மாதங்கள், வருடங்கள் ஆகும். சிலர் திரும்ப பேசிக் கொள்ளவே மாட்டார்கள். பல வருடங்களுக்குப் பிற்கு அன்றைய அவமானத்தை நினைவுகூர்ந்து மனம் வெதும்புவார்கள், கொந்தளிப்பார்கள், அரற்றுவார்கள், சவால் விடுவார்கள், சுயசமாதானம் கொள்வார்கள், யாராவது ஆற்றுப்படுத்த மாட்டார்களா என மீண்டும் ஏங்குவார்கள்.
மனம், மொழி சம்மந்தபட்ட எல்லாவற்றிலும் இப்படி ஒரு போலித்தனம், கசப்பு, வன்மம் வந்து விடுகிறது. ஆனால் உடலைக் கொண்டு விளையாடும் போது, பேச்சில்லாமல், நோக்கமில்லாமல் பரஸ்பரம் இருவர் தாக்கிக் கொள்ளும் போது அங்கு வக்கிரமாக எதுவும் தோன்றுவதோ எஞ்சுவதோ இல்லை. அல்லது ஆதவன் சொல்லுவதைப் போல உப்புமா கிண்டி ரசித்து சாப்பிடும் போதும் உலகம் அழகாகி விடுகிறது.
ஹைடெக்கர் சொல்வதைப் போல, நமது உடல் இந்த மனதை விட, சிந்தனைகள், உணர்ச்சிகள், இவற்றால் ஆன பண்பாட்டை விட மேலானது எனத் தோன்றுகிறது! நிஜமான உலகு உடல்களால் ஆனது!