மோசமான உணவு நம்மை மன அழுத்தத்திற்கு ஆளாக்குவதுடன் பல நோய்களையும் உண்டு பண்ணுகிறது. எது மோசமான உணவு என்றால் எது மலிவானதோ, எளிதாக கிடைக்கிறதோ அதுவே மோசமான உணவு. கடந்த சில ஆண்டுகளில் நான் புரிந்துகொண்ட முக்கியமான உண்மை இது. உடல் நலத்தை நாம் பொருளாதாரத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது.
இன்று அரிசி, கோதுமை விலை குறைவு, அதை விட மைதா விலை மலிவு. பலவிதமான காய்கறிகளையும் பனீர், டோபு, சிக்கன், சீஸ் உள்ளிட்ட புரதங்களையும் சேர்த்த சாலட்டைப் பண்ணுவதற்கு ஆகும் செலவுக்கு இரண்டு நாளைக்கு சோறு, குழம்பு வைத்து சாப்பிடலாம் (காய்கறி விலை மிக மிக அதிகமாகி விட்டது; சிக்கன் கிலோ முன்னூறைத் தாண்டி விட்டது. அரிசி விலை என்றுமே உயராது. இலவசமாகவே கிடைக்கிறது. மைதா விலை ஏறுவதே இல்லை.). ஒருவருக்கு ஒருநாளைக்கான 60-80 கிராம் புரதத்தை அடைய செய்யும் செலவுக்கு பத்து நாட்களுக்கு மாவுச்சத்து உணவுகளை ஜாலியாக சாப்பிடலாம். மேலும் காய்கறிகளை வாங்கி கழுவி நறுக்கி வாயிலிட்டு மென்று சாப்பிடும் சிரமத்துக்கு ரெண்டு தோசை ஊற்றி சாப்பிடுவது, புரோட்டாவை பிய்த்துப் போட்டு முழுங்குவது எளிது. மூன்று முட்டைகள் சாப்பிட்டால் ஒருநாளைக்குத் தேவையான புரதத்தின் நான்கில் ஒரு மடங்கே கிடைக்கும். நீங்கள் கவனமாக தேடிப் பிடித்து சாப்பிடாவிட்டால் மொத்த நாளுக்குமான புரதத்தை அடைய முடியாது. ஆனால் ஒருநாளைக்கான மாவுச்சத்தை ஒரே மதிய வேளை சாப்பாட்டில் அடைந்துவிடலாம்.
இது சாப்பாட்டுக்கு மட்டுமல்ல, அனேகமாக எல்லாவற்றுக்கும் பொருந்தும். இந்த உலகில் பயனற்றவை சுலபமாக, மலிவாக கிடைக்கும். கடந்த ஒரு நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு இந்த மலிவான உணவை சுவையாக மாற்ற முடிந்ததும், அதன் உற்பத்தியை தொழில்மயமாக்கி அதை உறையிலிட்டு செயற்கை சுவையூட்டிகளையும் அதிக சர்க்கரையை / உப்பை சேர்த்து மலிவான விலையில் நமக்குத் தர முடிந்ததுதான். இதனால் இந்தியாவில் சாப்பிட உணவின்றி பட்டினி கிடப்பவர்கள் இன்று அனேகமாக இல்லை, ஆனால் சத்தான உணவு இன்றி நோயுறுபவர்கள் அதிகம். அமெரிக்காவில் இதைக் குறித்து செய்த ஆய்வில் வேலையின்றி தெருவில் வசிப்பவர்கள் அங்குள்ள பீட்ஸா துரித உணவுக் கடைகளில் இருந்து மீதமாகும் உணவை வாங்கி சாப்பிடுவதால் மிகவும் உடல் பருத்து பல நோய்களுடன் வாழ்வதைப் பற்றி கண்டறிந்தார்கள். அதாவது நாம் பகட்டு உணவாக கருதுவதே இன்று ஏழைகள் உண்டு உடல் நலிவது. இன்னொரு பக்கம், மேல்மத்திய வர்க்கமும் பணக்காரர்களும் இந்த சுவையான மலிவான உணவை விட்டு விலகி சுவையற்றதாக கருதப்படும் காய்கறிகள், சுட்ட கறி, மாவுச்சத்து குறைவான உணவுகளை நோக்கி செல்கிறார்கள். ஏழைகளில் இருந்து மத்திய வர்க்கம் வரை இன்று அதிகமாக கொழுத்து நீரிழிவு, மாரடைப்பு ஆகிய நோய்களால் தவிக்க மேல்மத்திய, மேற்தட்டினர் அதிக ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.
இந்த மலிவான உணவைப் பற்றிப் பேசும் போது இன்று உடலுழைப்பு குறைந்துவிட்டதால் மாவுச்சத்து தேவைக்கு மிகுதியாகிறது எனக் கூறுகிறோம். இது உண்மையல்ல. 300-400 கிராம் மாவுச்சத்தானது கடுமையாக உடலுழைப்பில் ஈடுபடுகிறவர்களுக்கும் அதிகமானதே. எந்த உடலுழைப்பாளியாலும் இந்தளவுக்கு உணவை எடுத்துக்கொண்டு வேலை செய்ய முடியாது, சாப்பிட்டவுடன் தூங்கவே தோன்றும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் உடலுழைப்பாளிகள் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை நொறுக்குத்தீனி, சாக்லேட், பிரியாணி, சரக்கு, பொரித்த கறித்துண்டுகள் என நள்ளிரவு இரண்டு மணிவரை உண்டார்களா? இல்லை. 2-3 முறைகள் தான் அவர்கள் உண்டார்கள். என்னதான் அரிச்சோறு உண்டிருந்தாலும் அவர்களால் 160 கிராமுக்கு மேல் மாவுச்சத்தை உண்டிருக்க முடியாது (அரைக்கிலோ சோறிலே கூட140 கிராம் மாவுச்சத்து தான்.). பிரச்சினை உடலுழைப்பு குறைந்ததல்ல நமது மலிவான உணவு உற்பத்தி மிகுந்துவிட்டதே. சூமோ மல்யுத்த வீரர்கள் ஒருநாளைக்கு 7000-10000 கலோரிகள் (சிலநேரங்களில் 20,000 கலோரிகள்) உட்கொள்வார்கள் எனில் நம்மில் பலரும் 5000 கலோரிகளாவது குறைந்தது சாப்பிடுகிறோம். நமது உணவுச்சந்தை அனைவரையும் சூமோ மல்யுத்த வீரர்களை போல சாப்பிட வைக்கிறது. நம் உடலால் இதை கையாள முடியவில்லை. சூமோ மல்யுத்த வீரர்களைப் போல நம்மால் 6-8 மணிநேரங்கள் உடற்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி செய்யவும் முடியாது. பிரச்சினை நம் உடலுழைப்பு இன்மை அல்ல.
இன்றைய நோய்வாய்ப்பட்ட நவீன சமூகம் மலிவான உணவு சந்தையின் சோதனை எலிகள் மட்டுமே. இந்த தொழில்மயமாக்கப்பட்ட உணவுச்சந்தையில் இருந்து விடுபடும் போதே நம்மால் தரமான உணவை நோக்கி கவனம் செலுத்த முடியும். காய்கறிகளின், பழங்களின், புரத உணவின் விலையை குறைக்க முயல முடியும். ஜப்பானியர்கள் சோயா உணவுகளை புரதத்துக்காக பயன்படுத்துவது இதற்கு நல்ல உதாரணம் - அவர்கள் சோயாவை டோபூ, மிஸோ, நாட்டோ என பலவிதங்களில் எடுத்துக்கொள்கிறார்கள். ஒருநாளைக்கு தேவையான புரதத்தின் பாதியை அனேகமாக அவர்கள் சோயாவில் இருந்து பெறுகிறார்கள். மிருக கறியைப் போல் அன்றி சோயா உணவில் கொழுப்பு மிக மிக குறைவு. (சோயாவில் உள்ள ஐசோபிளேவேன்கள் ஆபத்து விளைவிப்பது மிக மிக அதிகமாக தினமும் உட்கொள்ளும் போது மட்டுமே. ஜப்பானியர்களுக்கு அதனால் எஸ்டிரோஜென் பிரச்சினையே ஏற்படுவதில்லை. பாரம்பரிய ஜப்பானியர் நீண்ட ஆயுள் வாழ்கிறார்கள்.) அவர்களுடைய மரபான உணவு புரதத்தை அதிகமாக இவ்வாறு சோயாவில் இருந்து இயற்கையாக கிடைக்கும் மீனில் இருந்து பெற்றுத் தருகிறது. நார்ச்சத்தும் ஊரில் கிடைக்கும் காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்வது வழி கிடைக்கிறது. மேலைநாட்டு உணவுகளின் தாக்கம் வரும்வரை ஜப்பானியருக்கு சத்தான உணவுக்கு செலவு செய்ய வேண்டிய தேவையிருக்கவில்லை. சத்தான உணவுகளை மலிவாக அவர்கள் உற்பத்தி செய்தார்கள். ஆனால் மேற்கத்திய மலிவான உணவுகள் பரவிட, மூன்றாம் உலக நாட்டு அரசுகள் அரிசி, கோதுமை உற்பத்தியிலே கவனம் செலுத்த சத்துணவுகளின் (காய்கறிகள்) உற்பத்தி குறைந்து விலை அதிகமாகியது (நம்மூரில் பசுமைப்புரட்சி). முதலாம் உலக நாடுகளின் பொருளாதாரம் சரிய, வேலைகள் குறைய அங்கும் சத்தான உணவு விலை அதிகமாகி பீட்ஸா, சாண்ட்விட்ச் ஒப்பீட்டளவில் மலிவாகியது. இப்போது இந்தியாவில் ஒரு கிலோ கேரட் வாங்கும் பணத்தில் பாதியிருந்தாலே நீங்கள் ஒரு பெரிய கப் ஐஸ்கிரீம் சாப்பிடலாம். மூன்று பாக்கெட் கிரீம் பிஸ்கட் / ஐந்து கேக்குகள் / பெரிய சாக்லேட் பார் சாப்பிடலாம். கவனியுங்கள் - சர்க்கரை, மைதா, எண்ணெய்யால் செய்யப்படும் அவசியமற்ற உணவுகளின் விலை பெரிய மாற்றமின்றி தொடர்கிறது. ஆனால் காய்கறி, பழம், தண்ணீர் என அவசியமானவற்றின் விலை அதிகமாகி விட்டன. பொதுவாக தேவை அதிகமாக விலை அதிகமாகும் என்பார்கள். இது உண்மையெனில் சர்க்கரை, மைதாவின் விலையே உலகெங்கும் அதிகமாக வேண்டும். ஆனால் எது குறைவாக எடுத்துக்கொள்ளப்படுகிறதோ அதன் விலையே அதிகமாகிறது. ஏனெனில் சந்தை அதன் உற்பத்தியை திட்டமிட்டு குறைக்கிறது.
ஒரு கிலோ வெள்ளரிக்காயின் விலைக்கு நான்கில் ஒரு மடங்கு இருந்தால் இரண்டு சின்ன பாக்கெட் மாகி நூடுல்ஸ் வாங்கலாம். ஒரு கிலோ நாட்டுத்தக்காளியின் விலைக்கு 12 சின்ன பாக்கெட் மாகி நூடுல்ஸ் வாங்கலாம். நமது உணவு சந்தையும் அரசும் சேர்ந்து ஏன் துரித உணவை மட்டும் அனைவராலும் வாங்கக் கூடிய அளவுக்கு மலிவாக வைத்திருக்கிறது? ஒரு நல்ல கடையில் இரண்டு தோசை சாப்பிடும் பணத்தில் நீங்கள் ஆறு வேளைகள் துரித நூடில்ஸ் சாப்பிட முடியும் எனில் இந்த சந்தை நம் சாமான்யர்களிடம் சொல்வதென்ன? அரசும், சந்தையும் நமது பெரும்பான்மை மக்கள் சமூகத்தை வெறுமனே மைதா, சர்க்கரை, ரசாயன நிறமூட்டி, சுவையூட்டிகளை மட்டும் சாப்பிட விரும்புகின்றன. இன்று சின்ன குழந்தைகளில் இருந்து இளைஞர்கள் வரை பசிக்கும் போது சாப்பிட விரும்புவது மாகி நூடுல்ஸ் எனும் விஷத்தை தான். சுவையினால் மட்டுமல்ல அதன் விலையினாலும் தான். சமச்சீராக உணவு உண்ட மரபான சமூகங்களையும் இவர்கள் பருவச்சூழலை மாற்றி, அரசின் திட்டங்களை திருத்த வைத்து, சந்தையின் போக்கை மாற்றி மலிவான சத்தில்லாத உணவுகளை மட்டும் உண்ண வைத்து கெடுத்துவிட்டார்கள்.
இந்த சந்தையை ஆதரிப்பவர்கள் இரண்டு பெரும் இந்திய பஞ்சங்களைக் குறிப்பிட்டு இன்று நாம் பசியில்லாமலாவது இருக்கிறோமே, நவீன சந்தை நம்மை காப்பாற்றவே செய்துள்ளது என்பார்கள். ஆனால் ஒரு வசதியான உண்மையை மறைத்துவிடுவார்கள் - அந்த பஞ்சங்கள் காலனிய ஆட்சியாளர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டவை. வெள்ளையர்கள் வரும் முன்பு இங்கு அப்படியான பஞ்சங்கள் இருக்கவில்லை. காலனியாதிக்க அரசு நமது வளத்தை முழுமையாக சுரண்டி, உற்பத்தி முறைகளை ஒழித்து, பொருளாதாரத்தை நிர்மூலமாக்கியதாலே நாம் மீண்டு வர அரை நூற்றாண்டுக்கு மேலானது. அல்லாவிடில் நாம் உலகின் வளமான தேசங்களில் ஒன்றாக இருந்திருப்போம். நவதாராளவாதம் வழியாக தொடுக்கப்படும் இரண்டாம் நவகாலனியாதிக்க யுத்தமே இந்த மலிவான உணவுகளால் நம் சந்தையை நிறைக்கிறது. அதுவே நம்மை நோயாளிகளாக, பலவீனர்களாக ஆக்குகிறது. என்ன வித்தியாசம் எனில், முன்பு போல் அன்றி, நாடுகள் குறித்த பாரபட்சமின்றி அமெரிக்கர்களையும், இங்கிலாந்தினரையும் நம்மை இந்த தாராளவாத உணவு லாபி ஒரே போல அழிக்கிறது. உலகம் முழுக்க மெலிந்த எலும்புக் கூடுகளுக்குப் பதில் கொழுத்து நோய்வாய்ப்பட்டவர்கள். முன்னவர்கள் விரைவில் செத்தார்கள் எனில் பின்னவர்கள் மெல்ல மெல்ல துன்புற்று சாகிறார்கள்.