தமிழ்நாட்டில் இலக்கியத் திருவிழாக்களில் யார் அழைக்கப்பட வேண்டும், எவ்வளவு சன்மானம் வழங்கப்பட வேண்டும் என்பதெல்லாம் ரெண்டாவது விசயம் - ஆனால் பிளாக் லிஸ்டிங் பயம்தான் ஆக மோசமானது. மறுத்தாலோ விமர்சித்தாலோ தம்மை ஒரேயடியாக இருட்டடித்து விடுவார்கள் எனும் அச்சம் எல்லாரிடமும் உள்ளது. ஜி. குப்புசாமியின் இன்றைய குறிப்பிலும் அதைக் குறிப்பிட்டு தான் அஞ்சவில்லை என்கிறார். அரசு யாரையும் பிளக்லிஸ்ட் பண்ணச் சொல்வதில்லை என்றாலும் அதிகாரிகளுக்கு அம்மனநிலை உள்ளது. இது மெல்லமெல்ல பிளாக்லிஸ்ட் கலாச்சாரத்தை உண்டு பண்ணுகிறது, முணுமுணுப்பவர்கள் மெல்ல அமைதியாகிறார்கள். இந்த அச்சம் தம்மை சுயதணிக்கை செய்யவும் பரஸ்பரம் கட்டுப்படுத்தவும் செய்வது.
நான் முதுகலை படித்த எம்.ஸி.ஸியில் ஒரு வழக்கம் உண்டு - விடுதிக்கென்று மாணவர் தேர்தல் நடக்கும். அதில் வெற்றி பெறும் தலைவரை தேர்தலின்போது கடுமையாக விமர்சித்துத் தோற்றுப் போகிறவரை பிளாக்லிஸ்ட் பண்ணாமல் முக்கியமான பொறுப்புகளைக் கொடுப்பார்கள். அவரை மிகுந்த மரியாதையுடன் தலைவர் நடத்தியாக வேண்டும். இதன்வழியாக எதிர்க்குரல் ஆட்சியின் பகுதியாகி விடும். அது எதிர்க்குரலாகவே நீடிக்கும் சுதந்திரமும் உண்டு. உண்மையான ஜனநாயகப் பண்பாடு அது. வெள்ளைக்காரன் எம்.ஸி.ஸியை ஆரம்பித்தபோது கொண்டு வந்தது.
ஆனால் இன்று அதெல்லாம் எங்குமே சாத்தியமில்லை. வாயை மூடுவதும், 'சரியான' விசயத்தை மட்டுமே எப்போதும் பேசுவதுமே இன்றைய ஜனநாயகம் - இப்போது நாம் பின்-மக்களாட்சி காலத்தில் வாழ்கிறோம். மிகுந்த சுதந்திரத்துடனும் அதே நேரம் அதைப் பயன்படுத்தும் அச்சத்துடனும் வாழ்வதே பின்-மக்களாட்சி காலத்தின் இயல்பு.